Saturday, March 04, 2006

புதுவை முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு:

புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

புதுவை மாநில சிறுபான்மையினரின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு அம்மாநில காங்கிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு 6 சதவீத தனி இடஒதுக்கீடும், கிறிஸ்தவர்களுக்கு 7 சதவீத தனி இடஒதுக்கீடும் அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்ற வருடம் ஜூலை 10 அன்று புதுவை மாநில முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி காரைக்காலில் தமுமுக சார்பில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற கவன ஈர்ப்பு மாநாடு நடைபெற்றது.

புதுவை மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரியும், புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற முதலும் கடைசி யுமான மாநாடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டில் புதுவை சட்டமன்ற சபாநாயகர் ஏ.வி.சுப்ரமணியம், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கமலக் கண்ணன் ஆகியோருடன் திமுக சார்பில் நாஜிம், வக்பு போர்டு தலைவர் ஷாஜஹான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இம்மாநாட்டில் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசினார்கள்.

இதுவரை காரைக்காலில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியதில்லை என வியந்த புதுவை சபாநாயகர் ஏ.வி. சுப்ரமணியம், நிச்சயம் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்கப் பாடுபடுவோம் என்றார்.

அம்மாநாட்டில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. அம்மாநாட்டிற்கு புதுவை கவர்னரும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் அக்கோரிக்கையைத் தீவிரப்படுத்தும் பொருட்டு வருகிற மார்ச் 18 அன்று பாண்டிச்சேரியில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்கும் முஸ்லிம்களின் கோரிக்கைப் பேரணியை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இதையறிந்த புதுவை மாநில அதிகாரிகள் தொடர்ந்து இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தமுமுக நிர்வாகிகளிடம் பேசி வந்தனர்.

அதனடிப்படையில் புதுவை மாநில தமுமுக சார்பில் காரைக்கால் மாவட்டத் தலைவர் லியாக்கத் அலி மற்றும் மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் பிப்ரவரி 25 மற்றும் 26 தேதிகளில் பாண்டிச்சேரியில் முகாமிட்டனர்.

புதுவை சட்டமன்றம் இம்மாதத்தோடு முடிவடைவதால் இதே கூட்டத் தொடரில் முஸ்லிம்களுக்கும், இதர சிறுபான்மை மக்களுக்கும் தனி இடஒதுக்கீட்டை அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அலுவ லகத்தில் மனு கொடுத்தனர். அதே தினத்தில் புதுவை கவர்னருக்கும் மனு அளிக்கப் பட்டது.

புதுவை மாநில தலைமைச் செயலாளர் கெய்ர்வால் அவர்களிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது. அத்துடன் சளைக்காமல் தமுமுக நிர்வாகிகள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபல் கென்னடி ஆகியோரை சந்தித்து இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றினால்தான் நாங்கள் தேர்தலில் உங்களுக்கு வாக்களிக்க முடியும் என திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
அதன் இறுதிக் கட்டமாகத்தான் அந்தப் போராட்டத்தின் வெற்றியாக புதுவை சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் முறையே 6 மற்றும் 7 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறைவனின் பெரும் கிருபையால் தமுமுகவின் பத்தாண்டு கால போராட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

தமுமுகவால்தான் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் வாழ் முஸ்லிம்களும், ஜமாஅத்களும் மகிழ்ச்சியில் திளைக்க, அதை ஏற்கும் விதமாக முஸ்லிம் அமைப்புகளில் தமுமுகவுக்கு மட்டுமே தீர்மான நகல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவை மாநில அரசியல்வாதிகளும், பத்திரிக்கையாளர்களும், உளவுத்துறை அதிகாரிகளும் காரைக்கால் மாவட்ட தமுமுக நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமுமுக சார்பில் 1999 ஜூலை 4ல் சென்னையில் நடைபெற்ற இடஒதுக்கீடு கோரும் வாழ்வுரிமை மாநாட்டிலும், 2004 மார்ச் 21 அன்று தஞ்சையில் லட்சக்கணக் கான முஸ்லிம்கள் பங்கேற்ற கோரிக்கைப் பேரணியிலும் புதுவை மாநில முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

எனினும் வேறு எந்த முஸ்லிம் அமைப்புகளும் செய்திராத வகையில் புதுவை மாநிலத்திலேயே நடத்தப்பட்ட (காரைக்கால் ஜூலை 10, 2005) தமுமுகவின் கவன ஈர்ப்பு மாநாட்டில், அரசியல்வாதி களை வரவழைத்து நாம் ஏற்படுத்திய நிர்பந்தமே இத்தகைய நல்விளைவை ஏற்படுத்தியதாக புதுவை மாநில முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
(அல்ஹம்துலில்லாஹ்...)

தமுமுக வரவேற்பு!
புதுவை மாநில முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதை வரவேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

''முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அது தொடங்கப்பட்ட ஆண்டான 1995 முதல் வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் புதுவையிலும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமுமுக வலியுறுத்தி வந்துள்ளது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து 1999 ஜூலை 4 அன்று சென்னையில் 'முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டை'யும், 2004 மார்ச் 21 அன்று தஞ்சையில் 'இடஒதுக்கீடு கோரிக்கைப் பேரணி'யையும் நடத்தியது. தமிழகம் மற்றும் புதுவை மாநிலம் தழுவிய இந்த நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்குகொண்டு முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தினர். மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜூலை 10 அன்று காரைக்காலில் புதுவை மாநிலம் தழுவிய 'கவன ஈர்ப்பு மாநாட்டை' தமுமுக நடத்தியது. முஸ்லிம்களுக்கு புதுவை மாநிலத்தில் தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுவை முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தமுமுக சார்பாக கடிதங்களும் அனுப்பப்பட்டன.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் வகையில் புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சென்ற பிப்.19 அன்று திருச்சியில் நடைபெற்ற தமுமுகவின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.இதைத் தொடர்ந்து இன்று புதுவை சட்டமன்றத்தில், 'முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 13 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனதார வரவேற்கிறது. இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த காங்கிரஸ், திமுக மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

புதுவை சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட இந்த தீர்மானத்திற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு உடனே ஆவண செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங், திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களை தமுமுக கேட்டுக் கொள்கிறது.''
இவ்வாறு தமுமுக தலைவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும். முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு என்பது வெறும் தீர்மானமாக இருந்துவிடாமல் அதனை நடைமுறைப் படுத்த மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று புதுவை முதலமைச்சர் என். ரங்கசாமி, திமுக தலைவர் கருணாநிதி, புதுவை எதிர்க்கட்சித் தலைவர் ஜானகிராமன் ஆகியோருக்கு 27.02.06 அன்று அனுப்பிய கடிதத்தில் தமுமுக தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

0 Comments:

Post a Comment

<< Home