Saturday, March 17, 2007

தஞ்சையிலிருந்து டெல்லிக்கு...

தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் ஜூலை 4ஆம் தேதியும், மார்ச் 21ஆம் தேதியும் மறக்க முடியாதவை. 1999 ஜூலை 4ல் சென்னையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாடு தமிழக முஸ்லிம்களின் எழுச்சி வரலாற்றை தொடங்கி வைத்தது.

மார்ச் 21, 2004ல் நடைபெற்ற தஞ்சைப் பேரணி தமிழகத்தில் இதுவரை முஸ்லிம்கள் இவ்வளவு பெரிய அளவில் அணிவகுத்ததில்லை என்ற செய்தியை வரலாற்றில் பதிவு செய்தது.

அதே மார்ச் மாதம் சரியாக மூன்று வருடத்திற்குப் பிறகு பழைய வரலாறுகளை முறியடித்திருக்கிறது தமுமுக! அகில இந்திய அளவில் சமுதாயத் தலைவர்களை திரட்டி இந்திய முஸ்லிம்களின் குரலாக, மிக பிரம்மாண்டமாக, கட்டுக்கோப்பாக ஒரு பேரணியை நடத்தி புதிய வரலாறு படைத்திருக்கிறது தமுமுக!

தமுமுக தலைமையின் விவேகமான செயல்பாடுகள் தான் இன்று இடஒதுக்கீடு விவாதத்தை தேசிய விவாதமாக மாற்றியமைத்திருக்கிறது.

ஆந்திராவில் அம்மாநில அரசு முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது. அதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.

அதன் பிறகு தான் தமுமுக தலைமை புதிய கோணத்தில் சிந்திக்கத் தொடங்கியது. தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்க நாம் தொடர்ந்து போராட வேண்டும். கிடைக்கும் இடஒதுக்கீடு பாதுகாப்புடன் நீடிக்க சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.

இதுதான் தமுமுகவின் புதிய பார்வையாக விரிந்தது. இந்த நேரத்தில் நீதிபதி ராஜேந்திர சச்சார் குழு, முஸ்லிம்களின் நிலை குறித்து ஆய்வு செய்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட, அறிக்கையில் காணப்பட்ட அதிர்ச்சித் தகவல்கள் நாட்டையே உலுக்கின.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடும் கேள்விக்குறியாக் கப்பட்டது.

டெல்லி பேரணிக்கான அவசியத்தை இவ்வறிக்கை மேலும் கூர்மைப்படுத்தியது. இதை நாடு தழுவிய விவாதமாக மாற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியது.

இதுபோல் தமுமுகவின் ஆரம்பகால லட்சியங்களில் ஒன்றான மத்திய அரசு பதவிகளில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கையும் டெல்லி பேரணியில் முன்வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

1) 2004ல் நாடாளுமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு
2) மண்டல் கமிஷனின் 27 சதவிகித இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு
3) அந்தந்த மாநில அரசுகளே இடஒதுக்கீட்டின் அளவை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை
4) சச்சார் குழு அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்களின் சமூக - பொருளாதார முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகள்

- இந்நான்கு கோரிக்கைகளும் வெற்றிபெற ஒரு மாநிலத்தில் வாழும் முஸ்லிம்களால் மட்டுமே போராடி ஜெயித்து விட முடியாது.

இதற்கு பல்வேறு மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

புதிய இயக்கங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்க வேண்டும். அல்லது அங்கெல்லாம் ஏற்கெனவே செயல்படும் இயக்கங்களிடம் இக்கோரிக்கைகளை எடுத்துக்கூறி அவர்களை தயார்படுத்த வேண்டும்.

நாடு தழுவிய பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

- இதையெல்லாம் மனதில் கொண்டே 'டெல்லி பேரணி' திட்டம் வடிவம் கொண்டது.

டெல்லி பேரணியை முன்வைத்து இத்தகைய வேலைகளை தமுமுக தன் தோளில் சுமந்தது.

நமது பேரணி பற்றிய செய்திகளை வடஇந்திய நாளிதழ்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டதால் தமுமுகலிவின் பிரச்சாரம் மக்களிடம் செல்லும் வழி எளிதாக்கப்பட்டது.

நமது கவனத்திற்குத் தெரியாத அமைப்புகளும், சமுதாய ஆர்வலர்களும் தன்னெழுச்சியாக நமது பணிகளில் பங்கெடுக்கவும், நம்மைத் தொடர்பு கொள்ளவும் இச்செய்திகள் ஒரு கவசமாகி விட்டன.

அதுபோல் நாடெங்கிலும் பரவலாக டெல்லி பேரணி பற்றிய துண்டுப் பிரசுரங்கள் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டன. வறுமையின் காரணமாக பல மாநிலங்களில் இருந்து சமுதாய மக்கள் டெல்லிக்கு வருவது சாத்தியக் குறைவு என்பதால் குறைந்தபட்சம் அந்த செய்திகளையாவது கொண்டு சென்று விழிப்புணர்வூட்டுவது நமது நோக்கமாக இருந்தது. அது ஏறத்தாழ வெற்றி பெற்று விட்டது.

சங்பரிவார் அல்லாத மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டன. காரணம் இப்பிரச்சினையை நாம் முன்னெடுக்கும் போது இதற்காக குரல் கொடுக்கப் போகிறவர்கள் அல்லது ஆதரிக்கப் போகிறவர்கள் அவர்கள் தானே.

இறைவனின் பெரும் கிருபையால் தமுமுக பல்வேறு கோணங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

முத்தான கோரிக்கைகளை நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் கொண்டு சேர்த்துவிட்டது. பிற மாநில சமுதாய மக்களிடம் விழிப்புணர்வு, புதிய நம்பிக்கை, போராடும் குணம் ஆகியவற்றை இதன்மூலம் த.மு.மு.க. விதைத்து விட்டது.

டெல்லி பேரணியை பிரச்சாரப்படுத்தியதன் மூலம் சமுதாய மக்களிடம் மாபெரும் விழிப்புணர்ச்சியை தமுமுக ஏற்படுத்தியிருக்கிறது.

இனி எந்த மாநிலத்தில் இடஒதுக்கீடு முழக்கம் கேட்டாலும், அதில் தமுமுகவின் பங்களிப்பு இருக்கவே செய்யும்.

இந்திய முஸ்லிம்களுக்கு தலைமையேற்று வழிகாட்டும் கூடுதல் பொறுப்பு தமுமுகவிற்கு கிட்டியுள்ளது. தமுமுக அகில இந்திய அமைப்பாக மாறப் போவதில்லை. ஆனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஏற்கனவே செயல்பட்டு வரும் இயக்கங்களை வலுப்படுத்துதல், வலுவான அமைப்புகள் இல்லாத மாநிலங்களில் புதிய அமைப்புகளை உருவாக்குவதற்கு ஆலோசனை வழங்குதல், நாடு தழுவிய விஷயங்களில் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளுதல் என பணிகள் தொடரும் இன்ஷாஅல்லாஹ்!

இதற்கு நிகரான அல்லது இதைவிட அதிகமான போராட்டங்களை தமிழ் நாட்டிலும் முன்னெடுக்கப் போகிறோம் என்பது மற்றொரு செய்தி!

தஞ்சையில் புறப்பட்ட சமுதாய எழுச்சி டெல்லியை திணறடித்திருக்கிறது. இனி நமது வரலாறை நாமே எழுதப் போகிறோம்.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்.

0 Comments:

Post a Comment

<< Home