தமுமுகவின் உறுதியான நிலைபாட்டால் திமுக நடுக்கம்
தமுமுகவின் உறுதியான நிலைபாட்டால் திமுக நடுக்கம்
இந்தியாவின் நாடாளுமன்றத்திலும் தமிழகத்தின் சட்டமன்றத்திலும் முஸ்லிம்களின் குரல் கடந்த பல ஆண்டுகளாக ஒலிக்க வில்லை என்பதற்காக தமுமுக எனும் சமுதாய பேரியக்கம் தனது அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியை கடந்த பிப்ரவரி 7, 2009 அன்று துவக்கியது.
அதற்காக சென்னை தம்பரத்தில் லட்சக்கணக்கானோர் பங்கு பெற்ற துவக்கவிழா மாநாடு நடத்தப்பட்டது. அந்த துவக்க விழா மாநாட்டில் கூடிய மக்கள் வெள்ளத்தைப் பார்த்த போதே திமுகவின் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது.
இனிமேல் அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல் முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற முடியாது என்ற அச்சம் தான் அவர்களின் கிளிக்கு காரணம்.
அந்த மமகவின் தாம்பரம் மாநாட்டிலேயே ஒரு சீட்டுக் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிக்கப்பட்டது.
இந்த இரண்டு கோரிக்கைகளும் ஏதே வெற்றுக் கோஷங்கள் என திமுக நினைத்து விட்டதோ என்னவோ, தமுமுகவின் மமகவினர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் தொகுதி ஒதுக்கீட்டின் போது, திமுகவினர் தலைகீழாக நின்று பார்த்தும், இவ்விரு விஷயங்களில் மமக சமரசம் செய்து கொள்ள முன்வரவே இல்லை.
தேர்தலில் மமக வெற்றி பெறுமோ இல்லையோ, இவ்விரு கோரிக்கைகளும் முஸ்லிம் சமுதாயத்தை முன்னேற்றும் உறுதியான படிக்கற்கள் என்பதில் உறுதியாக இருந்தது.
காதர் மைதீனின் முஸ்லிம் லீக்கைப் போன்று மமகவையும் ஆக்கி விடலாம் என்ற திமுகவின் பகற்கனவின் மீது இடி விழுந்தது.
அதிமுகவின் ஓட்டுக்களை தேமுதிகவினர் அள்ளிக் கொண்டு போனதைப் போன்று, திமுகவின் முஸ்லிம் வாக்குகளை மமகவினர் அள்ளிக் கொள்வார்களோ என்ற பீதியிலிருந்து இன்னும் திமுகவினர் மீளவில்லை.
வாக்குப்பதிவு இயந்திர மோசடி மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் திமுகவினர் மிகப்பெரும் தோல்வியை சந்தித்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதே மின்னணு வாக்குப்பதிவு முறை தொடர்ந்தால் வரும் இடைத்தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதனாலேயே வாக்குச் சீட்டு முறை வேண்டும் என்று திமுக, காங்கிரஸைத் தவிர அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன.
மமக இன்னும் ஒரு படி மேல் சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது. மேலும் எதிர்வரும் இடைத்தேர்தலில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி வாக்குச்சீட்டு முறை கொண்டு வராவிட்டால் தேர்தலை புறக்கணிக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்த வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய் விட்டது.
திமுக அரசு ஒரு விஷயத்தில் நியாமாகவே நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தேர்தலுக்கு முன்பும் வழங்கப்படும், தேர்தலுக்குப் பின்னும் வழங்கப்படும் அதற்கு பகரமாக அரசு ஊழியர்கள் அரசுக்கு ஆதரவாக மின்னணு இயந்திர அட்ஜஸ்ட்மென்ட் உட்பட நடந்து கொள்ள வேண்டும். அதுவே நடந்திருக்கிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி அம்பலத்துக்கு வந்து விட்டதால் இது போன்ற வேலைகளில் இனிமேல் ஈடுபட முடியாது என்பது திமுகவுக்கு இன்னொரு அதிர்ச்சி.
மமக போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் மமகவினரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணரிப்போன திமுகவினர் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
தூய அரசியலை முன்னிறுத்தி, மமக பிறந்த மூன்றே மாதங்களில் தேர்தலை சந்தித்து, பணபலம் மிகுந்த தேர்தல் களத்தில் போதிய பணபலம் இன்றி, தனித்து நின்று தேர்தலை சந்தித்த விதம் அரசியல் விமர்சகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
வெற்றி பெற்றால் அதிகாரத்தில் சமுதாயப்பணி, வெற்றி வாய்ப்பை இழந்தால் அதிகாரம் இல்லாத மட்டத்தில் சமுதாயப்பணி என்ற இலக்கை நோக்கி மமக நகர்ந்து கொண்டிருப்பது உண்மையான சமுதாய மற்றும் மக்கள் முன்னேற்றத்தை விரும்பும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கிறது.
இப்னு ஃபாத்திமா
11.06.2009
0 Comments:
Post a Comment
<< Home