Sunday, February 27, 2011

கூட்டணி அறிவிப்பால் தே.மு.தி.க.,வினர் உற்சாகம்

கூட்டணி அறிவிப்பால் தே.மு.தி.க.,வினர் உற்சாகம் : "சீட்' பறிபோகும் கவலையில் அ.தி.மு.க

27.02.2011

ராமநாதபுரம் : அ.தி.மு.க., உடன் தே.மு.தி.க.,வுடன் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், மாவட்டத்தில் மேலும் ஒரு தொகுதியை இழக்க வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க.,வினர் புலம்பிவருகின்றனர்.

தேர்தல் அறிவித்த நாள் முதலே தி.மு.க., அ.தி.மு.க., இடையே "சீட்' ஜூரம் தீவிரமாக தொற்றிக்கொண்டது. காங்., கட்சியின் "சீட்டிங் சீட் பாலிசி' படி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளை அக்கட்சி கைப்பற்ற வாய்ப்பு
இருப்பதால், தி.மு.க.,வினர் ஏற்கனவே "அப்செட்' ஆகி உள்ளனர். அதே பாணிக்கு தற்போது அ.தி.மு.க.,வும் தள்ளப்பட்டுள்ளன. த.மு.மு.க.,வின் ம.ம.க., வுக்கு ராமநாதபுரம் தொகுதி சென்றதாக தகவல் இருந்து வரும் நிலையில், தற்போது விஜயகாந்தின் தே.மு.தி.க., இடம் பெற்றிருப்பதால் அவர்களுக்கு திருவாடானை தொகுதி செல்ல வாய்ப்புள்ளது.

பரமக்குடி தனித்தொகுதி என்பதால் அங்கு குறிப்பிட்ட சிலரே போட்டியிட முடியும். ஆக முதுகுளத்தூர் தொகுதி மட்டுமே பாக்கி என்பதால் அ.தி.மு.க.,வினர் கனவுகள் தகர்ந்து போயுள்ளது.

இதற்கிடையில் முதுகுளத்தூரில் நடிகர் கார்த்தியின் நாடாளும் மக்கள் கட்சியும், பரமக்குடி தனித்தொகுதியில் புதிய தமிழகமும் போட்டியிட இருப்பதாக புதிய தகவல் கசிந்து வருகிறது. இதை கேள்விப்பட்டு பலரும் கலக்கத்தில் உள்ளனர். இன்னும் சிலர் மேலிடத்தில் தங்களுக்கு தெரிந்த முக்கியஸ்தர்களை "சீட்' பெற வேண்டும் என நச்சரித்து வருகின்றனர். புலம்பல்கள் ஒருபுறமிருக்க, தொடர்ந்து தனித்து போராடி வந்த தே.மு.தி.க.,வினர் முதன்முறையாக கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்க போகும் மகிழ்ச்சியில் குஷியாக உள்ளனர்.

"இம்முறை நிச்சயம் கணிசமான அளவு எம்.எல்.ஏ.,கள் சட்டசபைக்கு போகப்போகிறோம்,' என்ற, குஷியில் உலா வருகின்றனர். இறுதியாக போட்டியிடும் கட்சிகள் எவை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

நன்றி: தினமலர்

0 Comments:

Post a Comment

<< Home