Friday, March 23, 2007

சிறுபான்மையினருக்காக தனித்துறை!

சிறுபான்மையினருக்காக தனித்துறை!

தமிழக அரசின் அறிவிப்பிற்கு தமுமுக வரவேற்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:

'தமிழகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக சிறுபான்மையினர் நலன் தொடர்பான பணிகள் தொய்வடைகின்றன, எனவே சிறுபான்மையினர் நலனுக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும்' என்று கடந்த பிப்ரவரி 15 அன்று தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேரில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இந்தக் கோரிக்கையை ஏற்று இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு திட்டத்தில் (பட்ஜெட்டில்), சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்ககம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனதார வரவேற்கிறது.

நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் இன்று தாக்கல் செய்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் 'நீதியரசர் ராஜேந்திர சச்சார் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டுப்பட்டுள்ள, பொருளாதார ரீதியிலும், கல்வி அறிவிலும் சிறுபான்மை யினரின் பின்தங்கிய நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் துறைகளிலும் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்திடத் தேவையான முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும்' என்ற அறிவிப்பையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனமார வரவேற்கிறது. ஆனால் இது வெறும் அறிவிப்பாக இல்லாமல், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை விரைவில் நிறைவேற்றிட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு வேகமாக நிறைவேற்றி வருகிறது. இதேபோல் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நூறு சதவிகிதம் நிறைவேற்றிய ஆட்சி என்ற தனிச்சிறப்பை கலைஞர் தலைமையிலான அரசுக்கு பெற்றுத்தரும்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புக்களை பெறுவதற்காக சிறுபான்மையினர் திறன் பயிற்சித் திட்டம் அமுல்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது. ஆனால் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 10 கோடியாக உயர்த்தப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இதேபோல் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடன் அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் மும்மடங்காக உயர்த்தப்பட வேண்டுமெனவும் த.மு.மு.க. கேட்டுக் கொள்கிறது.

பிரதமரின் 15 அம்சத் திட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது போல், மேற்குவங்க மாநில அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது போல் வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக அரசு செலவிடும் மொத்த நிதியில் 15 சதவீதத்தை மத ரீதியான சிறுபான்மையினருக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

அரசுக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பதில்லை என்ற அரசின் முடிவையும், வரும் கல்வி ஆண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 80 உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அரசு எடுத்துள்ள முடிவையும், தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் எழுத அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கையும் த.மு.மு.க. வரவேற்கிறது.

இதே அடிப்படையில் தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் தமிழ்வழி பள்ளிக்கூடங்களில் தரம் உயர்த்தப்பட்ட வகுப்புகளுக்கு மானியம் அளிப்பதில்லை என்ற கடந்த அதிமுக அரசின் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று த.மு.மு.க. கேட்டுக் கொள்கிறது.

மொத்தத்தில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ள தமிழக அரசின் பட்ஜெட்டை த.மு.மு.க. வரவேற்கிறது. பலதரப் பட்ட மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு பட்ஜெட்டை தயாரித்த நிதியமைச்சர் க. அன்பழகன் அவர்களையும், அதற்கு வழிகாட்டியாக இருந்த தமிழக முதல்வரையும் பாராட்டுகிறோம்.

அன்புடன்

(எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்)

தலைவர், த.மு.மு.க.

(தமிழக முதல்வருக்கு தமுமுக அளித்த கடிதத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்)

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

0 Comments:

Post a Comment

<< Home