Sunday, February 27, 2011

ம.ம.க., குறிவைக்கும் ராமநாதபுரம், திருவாடானை

ம.ம.க., குறிவைக்கும் ராமநாதபுரம், திருவாடானை

27.02.2011

ராமநாதபுரம் : ராமநாதபுரம், திருவாடானை சட்டசபை தொகுதிகளில் ஒன்றை கைப்பற்ற ம.ம.க., கடும் முயற்சி செய்து வருவதால், 'சீட்' கனவில் உள்ள அ.தி.மு.க.,வினர் 'கிலி'யில் உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.,வும் கூட்டணி பேச்சு வார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மு.மு.க.,வின் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தொகுதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வரிசையில் திருவாடானை அல்லது ராமநாதபுரம் தொகுதியை அக்கட்சியினர் விரும்பி கேட்டு வருகின்றனர். மாவட்ட செயலாளர் ஆணிமுத்து திருவாடானை தொகுதியையும், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா ராமநாதபுரம் தொகுதியையும் குறிவைத்துள்ள நிலையில், ம.ம.க.,வின் முயற்சி இருவருக்கும் 'கிலி'யை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளாக உள்ள இருவருக்கும் இத்தகவல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் திருவாடானை தொகுதியை கேட்டு முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் தரப்பும் காய் நகர்த்தி வருகிறது. இவர் கட்சி பணியில் தொடர்ந்து நீடிப்பதால், நடராஜனுக்கு இம்முறை திருவாடானையில் வாய்ப்பு
கிடைக்கலாம் என்ற பேச்சு பலமாக உள்ளது.

அ.தி.மு.க.,கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெற்றால் இத்தொகுதியை வாங்க தே.மு.தி.க.வும் கடும் முயற்சி மேற்கொள்ளும். அதுபோன்ற பட்சத்தில் இங்கு போட்டியிட மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், தொகுதி பொறுப்பாளர் அழகு பாலகிருஷ்ணனும் களத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர். ராமநாதபுரத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முருகேசன், முனியசாமி ஆகியோர் 'சீட்' வாங்க கடுமையாக முயற்சிக்கின்றனர்.

தேவையற்ற போட்டியை தவிர்க்க இத்தொகுதியை கூட்டணிக்கு தாரை வார்க்க அ.தி.மு.க., தலைமை முன்வரலாம். பரமக்குடி தனித்தொகுதியாக இருப்பதால் அங்கு 'சீட்' பெறுவதில் முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பில்லை. முதுகுளத்தூரில் போட்டியிடும் அளவுக்கு இங்குள்ள நிர்வாகிகளுக்கு அங்கு செல்வாக்கும் இல்லை.

Thanks: dinamalar

0 Comments:

Post a Comment

<< Home