Sunday, March 27, 2011

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டின் விகிதம் உயர்த்தப்படும்

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டின் விகிதம் உயர்த்தப்படும்


எதிர்வரும் ஏப்ரல் 13 இல் தமிழக மக்கள், தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க இருக்கிறார்கள். திமுகவும் அதிமுகவும் இலவசங்களை அள்ளக் கொட்டி தமிழக மக்களை குளிர வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு 3.5 சதவிதிதத்தில் இருப்பதை உயர்த்துவேன் என்று செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார்.


இந்த அறிவிப்பு தமிழக தேர்தல் அரங்கில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


இதற்கு காரணம் இருக்கிறது, இதற்கு முன்பு செல்வி ஜெயலலிதா இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை பகிரங்கமாக எதிர்த்தவர் தான். இப்போது இடஒதுக்கீட்டின் விகிதத்தை உயர்த்துவேன் என்று சொல்லி இருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது.


முன்பு திமுக கூட்டணிக்கு ஆதரவு தர தமுமுக வைத்த நிபந்தனைகளில் ஒன்று இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு. கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகும் உடனடியாக இடஒதுக்கீட்டை அறிவிக்காமல் காலம் தாழ்த்தினார். இடஒதுக்கீட்டை தர மிகவும் வருத்தமாக இருந்திருக்குமோ என்னவோ? தமுமுகவின் கிடுக்கிப்பிடியால் எச்சரிக்கையால் வேறு வழியின்றி அறிவித்தார்.


கலைஞர் என்னவோ தானே முன்வந்து இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை தந்தது போல் பீற்றிக் கொண்டு இருக்கிறார்.


இப்பொழுது கூட இந்த முதிர்ந்த அரசியல் சாணக்கியர் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த பரிசீலிப்போம் என்று தான் கலைஞர் சொல்லி இருக்கிறார். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு கலைஞர் 'இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த பரிசீலித்துக் கொண்டு தான் இருக்கிறோம்' என்று சொல்லி மேலும் ஐந்து ஆண்டுகளை கழிக்கவும் இவரால் இயலும்.


ஆனால் ஜெயலலிதாவோ ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டின் விகிதத்தை உயர்த்துவோம் என்று உறுதிபட கூறியுள்ளார்.


கலைஞரின் ஒரு விஷயத்தில் நாம் உறுதியாக இருக்கிறோம். அவர் குறிப்பிட்டதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டின் விகிதத்தை உயர்த்துவதாக சொல்லி விட்டு, அவர்களை ஏமாற்றி விட முடியாது. அப்படி ஜெயலலிதா நினைத்தால் அது நடக்காது என்பதை கலைஞர் அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டது போல் தெரிகிறது. அதனால் தான் 'அவர்களை ஏமாற்றி விட முடியாது' என்று கூறியுள்ளார்.


'இடஒதுக்கீடு தர முடியாது' என்று நேருக்குநேராக சொன்ன ஜெயலலிதா 'இடஒதுக்கீட்டின் விகிதத்தை உயர்த்துவேன்' என்று நேருக்கு நேராக சொன்னதால் உயர்த்துவார். ஆனால் கலைஞர் போல் இடஒதுக்கீடு தருவதாக சொல்லி விட்டு தராமல் காலம் கடத்தும் ஏமாற்று வேலையை செய்ய மாட்டார்.


ஜெயலலிதா ஒருவேளை இடஒதுக்கீட்டை உயர்த்த தாமதம் செய்வாரேயானால் கலைஞருக்கு எச்சரிக்கை விடுத்தது போல் ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை விடப்படும். யார் ஆட்சிக்கு வரப் போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.


அபூ ஃபாத்திமா


27.03.2011

0 Comments:

Post a Comment

<< Home