Saturday, April 02, 2011

அழகிரி நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரிக்கு அடி


அழகிரி நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரிக்கு அடி

03-04-2011

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நிகழ்ச்சியில், பணம் பட்டுவாடா நடக்கிறதா என விசாரிக்க சென்ற தேர்தல் அதிகாரி காளிமுத்துவை தி.மு.க.,வினர் தாக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 4 மணிக்கு, வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி கோயிலுக்கு மு.க.அழகிரி வந்தார். கோயில் கதவுகள் அடைக்கப்பட்டு, உள்ளே கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் பணம் பட்டுவாடா நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, மேலூர் தேர்தல் அதிகாரி காளிமுத்து மற்றும் அலுவலர்கள், வீடியோ கிராபருடன் அங்கு வந்தனர். அப்போது, கோயிலில் தீபாராதனை செய்த போது தட்டில் அழகிரி 100 ரூபாய் போட்டதை வீடியோவில் பதிவு செய்தனர். இதை கவனித்த அவர், "யாருய்யா வீடியோ எடுக்கிறது?' என கேட்க, அருகில் இருந்த மதுரை துணை மேயர் மன்னன், மேலூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் ஆகியோர், "கேமராவை கொடுத்துட்டு வெளியே போங்கய்யா' என்றனர். பயந்துபோன வீடியோகிராபர், கேமராவை தேர்தல் அதிகாரி காளிமுத்துவிடம் கொடுத்தார். பின், அதிகாரிகள் கிளம்பும்போது, காளிமுத்துவின் தலையை மூவரும் தாக்கினர். காளிமுத்துவை அழைத்துக் கொண்டு அதிகாரிகள் ஜீப்பில் தப்பினர்.


இது தொடர்பாக காளிமுத்து கீழவளவு போலீசில் புகார் செய்தார். மு.க.அழகிரி, மன்னன், ரகுபதி, திருஞானம் உட்பட பலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 (ஐந்து பேருக்கு மேல் கூடுதல்), 341 (வழிமறித்து தடுத்தல்), 332 (அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அடித்தல்), 188 (அரசு உத்தரவு, விதி மற்றும் தடையை மீறுதல்) பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப் பதிவு செய்தார். தாக்குதலை கண்டித்து, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சதாசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாக்கியவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் கைது செய்யவேண்டும், என கோஷமிட்டனர்.


மாநில துணைத்தலைவர் ஞானகுணாளன் கூறியதாவது: தேர்தல் கமிஷன் பல புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அதை நாங்கள் பின்பற்றி, விதிமீறலை கண்காணிக்கிறோம். வெள்ளலூரில் அனுமதியின்றி கூட்டம் நடத்துவதை வீடியோ படம் எடுக்க தாசில்தார் சென்றார். அவரை தாக்கியுள்ளனர். எனவே, நாங்கள் தேர்தல் பணியை புறக்கணிக்கலாமா? என ஆலோசனை நடத்துகிறோம். கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.


Dinamalar

0 Comments:

Post a Comment

<< Home