ஒரு பொருளுக்கு ஒரு விலை:
தமிழக முஸ்லிம் வாக்காளர் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் பரபரப்போடு இத்தேர்தலை எதிர் நோக்குகின்றது.
காரணம் கடந்த 2004, மார்ச் 21 இல் தஞ்சை தரணியை திணற வைத்த சமுதாயம், ஒரு மாத காலத்திற்குள் ஆட்சி அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சிக்கு சில தலைவர்களை பலி கொடுத்த காரணத்தால் சற்று திணறிப் போனது.
ஆனாலும், அவ்வமயம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற பொது அம்சத்தின் அடிப்படையில், ஒற்றுமையாக காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து ஆட்சியில் அமர வைத்தது.
ஆனால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அத்தகைய ஒற்றுமையான போக்கை காண முடியவில்லை. காரணம் சுயநலம். காசுக்காக விலை போனவர்கள் தங்களது விசுவாசத்தை காட்ட வேண்டுமல்லவா. எனவே ஒரு கூட்டம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்புவதை தெரிவு செய்து கொள்ள எவருக்கும் உரிமையுண்டு. ஆனால் அவரவரது விருப்பத்திற்கிணங்க சமுதாயத்தை அடகு வைக்க எண்ணினால், வெகு விரைவில் சமுதாயம் அவர்களை தூக்கி எறிந்து விடும்.
அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள தலைவர் ஒரு வாதத்தை எடுத்து வைக்கிறார். அவருக்கு எப்போதும் வாத நோய். எதற்கும் தீர்வு (வி)வாதத்தில் உண்டு என்று நம்புகிறவர் அவர். வாத திறமையால் அனைவரையும் வீழ்த்தி விடலாம் என மனப்பால் குடிப்பவர். எதற்கும் விவாதிப்பார். விவாத களத்தில் எதிராளியை மட்டம் தட்ட எந்த அளவுக்கும் அநாகரீகத்தை கையாள தயங்காதவர். இதற்காக பலர் அவரை ஒதுக்கியதுண்டு. அச்சமயங்களில் தான் வெற்றி பெற்றதாக சுயதம்பட்டம் அடிப்பார். சரி எந்த அளவுக்குத்தான் செல்வார், பார்க்கலாம் என துணிந்து வருபவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுபவர்.
அதெல்லாம் இருக்கட்டும். இப்பொழுதுள்ள பிரச்சனையை பார்ப்போம்.
இத்தகைய பின்னணியுள்ள அந்த தலைவர் அதிமுகவை ஆதரித்து தனியார் தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து ஏராளமான ஈமெயில்களும் வருகின்றன. வழக்கம் போல விவாத அழைப்புக்களை அள்ளித் தெளித்து விட்டு, திமுகவை எதிர்ப்பதற்கு தர்க்க ரீதியான ஒரு வாதத்தையும் எடுத்து வைக்கிறார். (இது அவரது மேனரிஸம். இவ்வாறு சொல்லிவிட்டால் பின்னர் அவரது வார்த்தைகள் அனைத்தும் உண்மையாகத்தான் இருக்கும் என நம்ப வைக்க முயலும் யுக்தி இது.)
அதன்படி அவர் எடுத்து வைக்கும் வாதம்: ஒரு பொருளுக்கு ஒரு விலைதான்.
அதாவது, இடஒதுக்கீடு தருவோம் என திமுக தலைமையிலான அணி பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு கொடுத்தனர். அதற்காக முஸ்லிம்களின் வாக்கு (ஓட்டு)கள் அனைத்தையும் வாரி வழங்கி விட்டோம். எனவே அதே வாக்குறுதியின் பேரில் மீண்டும் அந்த அணிக்கு வாக்களிக்கக் கூடாது. ஏனெனில் நாம் முஸ்லிம்கள் நீதமாக நடந்து கொள்ள வேண்டும். எனவே தற்சமயம் ஆணையம் அமைத்துள்ள அதிமுகவைத்தான் நாம் ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
விலை போனதாலோ, காசு வாங்கியதாலோ என்னவோ தற்பொழுது இது போன்ற உதாரணங்களையே கையாளுகிறார். குலுங்கிய கும்பகோணத்தில் கையில காசு, வாயில தோசை என்றார். தற்சமயம் ஒரு பொருள் ஒரு விலை என்கிறார். என்ன விலைக்கு விற்றார்? எவ்வளவு காசு பெற்றார்? என நாம் விவாதிக்க வரவில்லை.
அரசு அறிவித்த (?) ஆணையம் முறையானதா? பயனுள்ளதா என பலரும் கருத்து தெரிவித்து அது ஒரு குப்பை என தெளிவுபடுத்தி விட்டதால், அவர் எடுத்து வைத்த வாதத்தை மட்டும் நாம் அலசுவோம்.
ஏனெனில் கடந்த சட்டசபைத் தேர்தலின் போது கனம் ஜெ.ஜெ அவர்கள் கூட இதே வாக்குறுதியைத்தான் அளித்தார். அவரை ஜெயிக்க வைத்தோம். ததஜ தலைவர் வாதப்படி கணக்கு நேர் செய்யப்பட்டு விட்டது. (பொய்யான வாக்குறுதிக்காக விலைகொடுத்து ஏமாந்தோம்.) அதன்பிறகு முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த ஜெ.ஜெ. வீட்டுக்குப் போகும் வழியில் வீசிவிட்டுப் போன ஆணைய அறிவிப்பு (இன்று வரை அரசாங்க கெஸட்டில் வெளியிடப்படாத அபூர்வ அறிவிப்பு)க்காக பொன்னான ஓட்டுக்களை வீணாக்கலாமா?
அவரது வாதப்படி எடுத்துக் கொண்டாலும், மத்தியில் திமுக கூட்டணி அளித்த வாக்குறுதிக்காக நாம் வாக்களித்த பின் மத்திய அரசு, இங்குள்ள ஜெ.ஜெ. வைப் போல் தனது பதவிக்காலம் முழுக்க வாளாவிருக்க வில்லையே. நமக்களித்த வாக்குப் படி சிறுபான்மையினரின் சமூக பொருளாதார மேம்பாட்டை ஆய்வு செய்ய நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் குழு அமைத்து அதனை முடுக்கி விட்டு உள்ளனரே.
நம்மிடம் ஏமாற்றி ஓட்டு வாங்கிய ஜே.ஜே அதன்பின் இது போன்ற முன்முயற்சி எதுவும் எடுத்தாரா? இல்லையே. பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு ஆள் அனுப்பிய பாவத்திற்கு பகிரங்க மன்னிப்பு கொரியதால் நாமும் பெருந்தன்மையாக மன்னித்து, வருங்காலம் வளமாக அமைய தனி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றோம். கண்டிப்பாக தருவேன் என்றார். தந்தாரா இலலையே.
நாம் கேட்காமலேயே நமது வாழ்வுரிமை மாநாட்டில், பிஜேபி உடன் கூட்டு சேர்ந்த பாவத்திற்கு மன்னிப்பு கோரினார். மன்னித்தோம். என்ன நடந்தது 2004 தேர்தலில் பிஜேபி உடன் கூட்டுச் சேர்ந்தார். அதற்கு பரிசாக இப்பொழுது ததஜ - அதிமுகவிற்கு ஓட்டு கேட்கிறதா?
பாபரி மஸ்ஜித் உடைப்பிற்கு ஆள் அனுப்பியதற்கு பிராயசித்தம் தேடினார். மன்னிப்பு கிடைத்து கூடவே ஓட்டும் கிடைத்ததும், ராமர் கோவில் இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது? என திருவாய் மலர்ந்தருளினார். இதனால் தான் ததஜ அதிமுகவிற்கு ஓட்டுப் பேடச் சொல்கிறதோ.
முஸ்லிம்களின் பிரச்சனைகளை பரிவோடு பரிசீலிப்பேன் என்று பசப்பினார். ஆனால் வதந்தியின் மூலமாக வன்மத் தீ வளர்த்து முஸ்லிம்கள் நரமாமிச குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நேரடி கண்காணிப்பில் தீக்கிரையாக்கப்பட்ட போது, சிறுபான்மையினரின் நலன் குறித்து கவலைப்படுவோர், பெரும்பான்மையினர் பாதிக்கப்பட்ட போது ஏன் குரல் எழுப்பவில்லை என குமுறி வெடித்தாரே.... இதற்கு நன்றிக் கடனாகவா ததஜ தலைமை அதிமுகவிற்கு ஓட்டுப் போடச் சொல்கிறதோ.
இத்தோடு விட்டாரா அச்சுறுத்தல், அடாவடி மூலம் மீண்டும் முதலமைச்சரான நரமாமிச பட்சிணி நரேந்திர மோடியின் முடிசூட்டு விழாவிற்கு விசேஷ விமானம் எடுத்துக் கொண்டு ஓடோடிச் சென்று வாழ்த்தினாரே... இதனை அங்கீகரிக்கத்தான் அதிமுகவிற்கு ததஜ தலைமை ஓட்டுக் கேட்கிறதோ.
யார் அதிகம் அநீதி இழைத்தவர் என பட்டியலிடலாமா என ததஜ தலைவர் படு சூடாக கேட்கிறார். ஆனால் பட்டியலிடும் போது 1999 க்கு முன் நடந்தவைகளுக்கு ஜெ.ஜெ மன்னிப்புக் கேட்டதால் விட்டு விடலாம் என்கிறார். விட்டு விடுவோம். 2004 ல் திமுக இட ஒதுக்கீடு சம்பந்தமாக தேர்தல் அறிக்கை வெளியிட்டதால் அதற்கு முன் நடந்தவைகளை மன்னித்து ஆதரவளித்தோம். அவரும் சேர்ந்திருந்ததே இம்முடிவுகள் எடுக்கப்பட்டன.
2001 ல் இனி சேரவே மாட்டேன் என்று கூறிய ஜெ.ஜெ 2004 இல் பிஜேபியுடன் கூட்டணி கண்டாரே அதற்கு நன்றிக்கடனாக அதிமுகவிற்கு ஓட்டுப்போட ததஜ தலைமை கட்டளையிடுகிறதோ.
2001 முதல் 2006 வரை ஆட்சியிலிருந்த ஜெ.ஜெ முஸ்லிம்களுக்காக, முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்காக எந்த அளவு பாடுபட்டார் என்றால், பாரம்பரியமிக்க முஸ்லிம் வேட்பாளர்களையே தமது பிரதிநியாகக் கண்டிருந்த வாணியம்பாடியில் முஸ்லிம் அல்லாத ஒருவரை எம் எல் ஏ வாக்கி அழகு பார்த்தாரே அதற்காகத் தான் அதிமுகவிற்கு ஓட்டுப் போடச் சொல்லி ததஜ தலைமை நம்மை நிர்பந்திக்கிறதோ.
1999 க்கு முன் நடந்த தவறுகளை மன்னித்து 2001 தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ததினால், 2001 முதல் 2006 வரையிலான கால அளவில் தம்மால் முடிந்த அளவு முஸ்லிம்களை வஞ்சித்தும், நிந்தித்தும், நிர்கதியாக்கியும், பரிகசித்தும், பழிவாங்கியும் ஆணவத்தோடு நடந்து கொண்ட ஜெ.ஜெ அந்திம காலத்தில் புதுப்பித்து வெளியிட்ட ஆதாயமில்லாத ஆணயத்திற்கு பகரமாக மீண்டும் மன்னிக்க முடியுமா. மீண்டும் அதிமுகவிற்கு வாக்களிக்க முடியுமா? மீண்டும் அவருக்கு முடி சூட்ட முடியுமா?
ஒருபோதும் முடியாது என்பது தான் ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலாக இருக்க முடியும். இதற்கு மாற்றமான முடிவெடுத்தால் நிகழ்காலம் நிந்திப்பதோடு, வருங்காலத்திலும் வருந்த வேண்டியது வரும். அதுதான் 2001 முதல் 2006 வரை நடந்தது. இதற்கு பின்னும் பாடம் படிக்க வேண்டுமா?
சகோதரர்களே! இவ்வளவுக்கு பிறகும் அதிமுகவை ஆதரியுங்கள் என்று சொல்ல வேண்டுமானால் அதிமுகவிடம் விலை போயிருக்க வேண்டும், அல்லது இஸ்லாமிய வட்டத்தைவிட்டு வெளியேறியவராக இருக்க வேண்டும்.
இரண்டில் எது உண்மை என்பது தேர்தல் முடிந்தால் தெளிவு பிறந்து விடும். காத்திருப்போம். அதற்கு முன் அதிமுகவை வீட்டுக்கு அனுப்பி கோவை சிறையிலுள்ள நம் சொந்தங்களை வீட்டுக் கழைப்போம்.
அல்லாஹ் நம் எண்ணங்களை தூய்மையாக்கி முயற்சிகளை வெற்றிகளாக்கி அருள்வானாக!
அபூஇஸ்மத்
28.03.2006
0 Comments:
Post a Comment
<< Home