Tuesday, July 29, 2008

இந்திய அமெரிக்க அணுசக்தி

இந்திய அமெரிக்க அணுசக்தி - சூழ்ச்சி- துரோகம்- அடிமைத்தனம்

எம்.தமிமுன் அன்சாரி

(இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்து மேலும் விபரம் அறிய துடிப்பவர்களுக்காக இக்கட்டுரை துணுக்குகளாக தரப்படுகிறது.)

அணு சக்தி தொடர்பான ஓர் ஒப்பந்தம் 1963-ல் தாராப்பூர் அணுமின் நிலையத்திற்காக இந்தியா-அமெரிக்கா வோடு ஏற்கனவே செய்துள்ளது. அதில் சர்ச்சைக்குரிய 'ஹைடு' சட்டம் இல்லை. ஆனால் இப்போதைய ஒப்பந்தத்தில் 'ஹைடு' சட்டம் சேர்க்கப்பட்டது தான் சிக்கல்களுக்கு காரணம்.

ஒப்பந்தம் என்றால் இருதரப்பும் சேர்ந்து திட்டமிட்டு ஆலோசிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த 'ஹைடு' ஒப்பந்தம் முழுக்க முழுக்க அமெரிக்க அதிகாரிகளால் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய தரப்பு மதிக்கப்படவேயில்லை. கேட்கப்படவும் இல்லை.

அமெரிக்காவின் 'ஹைடு' சட்டத்தின்படி இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகளை அமெரிக்கா தீர்மானிக்கும்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமெரிக்காவுக்கு எதிராக இல்லை என ஒவ்வொரு வருடமும் அமெரிக்க ஜனாதிபதி - அமெரிக்க பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமாம். அமெரிக்காவின் தவறுகளை இந்தியா எதிர்த்தால் ஒப்பந்தம் ரத்தாகிவிடும்!

அமெரிக்க கடற்படை சர்வதேச கடல் எல்லைகளில், தனக்கு பிடிக்காத நாடுகளின் கப்பலை தாக்கினால், இந்தியாவும் அதற்கு உதவ வேண்டும். அமெரிக்கா, ஈரான், வடகொரியா, க்யூபா போன்ற தனக்கு பிடிக்காத நாடுகளை தாக்கினால், அதற்கு துணையாக இந்தியாவும் தனது படையை அனுப்பி அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதத்திற்கு துணை போக வேண்டுமாம்! இது சுற்றி வளைத்து கூறப்பட்டுள்ளது.

இதையெல்லாம் விட கொடுமை என்னவெனில், ஈரானை அமெரிக்கா தாக்கினாலும், மிரட்டினாலும் அனைத்து விவகாரத்திற்கும் இந்தியா மறு பேச்சு பேசாமல் தனது ஒத்துழைப்பை (?) தர வேண்டுமாம். இதற்கும் அணு ஒப்பந்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தெரிய வில்லை.

அமெரிக்கா இந்தியாவோடு ஏதாவது ஒரு ஒப்பந்தம் போட விரும்பினால், அது என்ன துறை சார்ந்த ஒப்பந்தமாக இருந்தாலும், இந்தியா உடனடியாக தலையாட்டி மறுவார்த்தை பேசாமல் கையெழுத்து போட வேண்டுமாம்!

இந்தியா முன்பு போல் அணு குண்டு சோதனைகளை தற்காப்புக்காக மறந்தும் நடத்திட கூடாது. அப்படி அத்துமீறி செயல்பட்டால் ஒப்பந்தப்படி அமெரிக்காவிடம் பெற்ற அணு உலைகள், இயந்திரங்கள், மறு சுழற்சி செய்த அணுப் பொருட்கள் ஆகியவற்றை அமெரிக்கா திரும்ப பெற்றுக் கொள்ளுமாம்! அதாவது 10 லட்சம் கோடி இந்திய பணத்தில் தயாரான அணு சக்தி திட்டங்களை அமெரிக்கா நினைத்தால் ஒரே நாளில் இழுத்து மூடி விட முடியும்!

அமெரிக்கா நினைத்தால் ஒப்பந்தத்தை நினைத்த நேரத்தில் முறிக்க முடியும். ஆனால் இந்தியா ஒப்பந்தத்தை முறிக்க விரும்பினால் ஒரு வருடத்திற்கு முன்பாக அமெரிக்காவுக்கு கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டுமாம்.

நாம் இப்போது தயாரிக்கும் மின்சாரத்தை விட, அமெரிக்க ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு இரு மடங்கு கூடுதல் செலவாகும். அதுவும் 2020-ஆம் ஆண்டுதான் உற்பத்தி தொடங்குமாம்!

தற்போது இந்தியாவில் 3% மின் தேவைகள் மட்டுமே அணு உலைகள் மூலம் பெறப்படுகிறது. மீதி 97% மின்தேவைகள் நிலக்கரி, காற்றாலை, சூரிய வெப்பம், அருவி, கடல் என இயற்கையை பயன்படுத்தியே பெறப்படுகிறது.

இப்போது அமெரிக்க ஒப்பந்தம் மூலம் போடப்படும் அணு உலைகள் மூலம் 2020-ஆம் ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் வரைதான் மின் உற்பத்தி பெறமுடியுமாம்! ஆனால் இப்போது இந்தியாவில் உள்ள வசதிகளை பயன் படுத்தி 2040-ஆம் ஆண்டில் 1 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இப்போது நம்மிடம் இருக்கும் எரிவாயு நிலையங்களும், அணு மின் நிலையங்களும், அனல் மின் நிலையங்களும் போதுமானவை.

அமெரிக்காவிடம் தான் யுரேனியம் பெற முடியும் என்ற நிலையில் இந்தியா இல்லை. ஜார்கண்ட், ஆந்திரா, மேகலயாவில் யுரேனிய தாதுக்கள் குவிந்து கிடக்கின்றன. உலக அளவில் கேரளாவில் மட்டும் 34% அளவுக்கு அணுவுக்கு தேவையான தோரியம் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் மத்திய அரசு இதனை தோண்டி பயன்படுத்தாமல் இந்தியாவிடம் எதுவுமில்லாதது போலவும், அமெரிக்காவிடம் தான் அது இருப்பது போலவும் நாடகம் போடுகிறது.

ஒருவேளை இந்தியாவுக்கு எதிர்காலத்தில் கூடுதல் மின்தேவையை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், ஆபத்துக்கள் இல்லாத காற்றாலை, கடல், அலை, அருவி ஆகியவற்றை நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்க முடியும் என அப்துல் கலாம் ஐயரை தவிர, மற்ற இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா 1979-க்கு பிறகு தனது நாட்டில் அணு உலைகளை நிறுவவில்லை. ஆனால் இந்தியாவில் நிறுவத் துடிக்க காரணம். இதனால் பல அமெரிக்க தொழிலதிபர்களின் 'நலன்களும்' இந்திய அரசியல்வாதிகளின் 'நலன்களும்' அடங்கியுள்ளன.

இந்திய அணு உலைகள் மொத்தம் 22. அதில் 4 உலைகள் மட்டுமே சர்வதேச கண்காணிப்பில் இருக்கின்றன. அமெரிக்காவுடன் 'ஹைடு' ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இனி கூடுதலாக 14 அனு உலைகளை சர்வதேச கண்காணிப்புக்கும், அமெரிக்க உளவுத்துறைக்கும் திறந்து விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

இதை மக்களிடம் வெளிக்காட்டாமலும், நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்காமலும் ரகசியம் காக்கப்படுவதும், இது பற்றிய விபரங்களை இந்தியர் களிடம் சொல்லாமல், அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து ஒப்பந்தம் போட துடிப்பதும்தான் புரியாத புதிராக உள்ளது.

மொத்தத்தில் நேருவின் சீரிய சர்வதேச ராஜதந்திரம், இந்திரா காந்தியின் துணிச்சல், ராஜீவ் காந்தியின் சுயசார்பு ஆகியவற்றை குழி தோண்டி புதைக்கத் துடிக்கும் காங்கிரஸ் கம்பெனியை வரலாறு மன்னிக்காது.

நன்றி: தமுமுகவின் இணையதளம்.

0 Comments:

Post a Comment

<< Home