Sunday, April 15, 2007

கைதியின் கதை

கைதியின் கதை - சாதான்குளம் அப்துல் ஜப்பார்

கைதியின் கதை சமூக நீதிக்கு வேண்டி போர் செய்த ஒரு
போராளிக்கேற்பட்ட 'கதியின்'கதை.


இது ஒரு சோகக்கதையின் சுகப்பிரசவம். கடின உழைப்பின் கண்ணீர் தொகுப்பு. இது பூனைக்கு மணி கட்டும் கதையல்ல. புலிக்கு விலங்கிடும் முயற்சி.



முட்டாள்கள் தினத்தன்று பல அறிவு ஜீவிகள் சங்கமித்த மாலைப்போதில், ரஷ்ய கலச்சார மைய மண்டபத்தில் நடைபெற்ற ஆளூர் ஷானவாசின் ஆவணப்படத்தைப் பார்த்தபோது என் சிந்தையில் தோன்றிய எண்ணங்களின் வரி வடிவம் இது.

என்னுடைய நாற்பது ஆண்டுகால கேரள வாழ்க்கையின் கடைசிப்பகுதியில்தான் அப்துல் நாசர் மதானியைப் பற்றி நான் தெரிய வருகிறேன். குறுகிய காலத் தில் தன் நாவன்மையாலும், புரட்சிகரமான சிந்தனைகளாலும், சிம்மத்தின் கர்ஜணையை ஒப்பிடும் அளவுக்கிருந்த கம்பீரமான குரலாலும் அறிவு ஜீவி களின் சிந்தையில் மட்டும் அல்ல சாமான்யர்களின் உள்ளத்திலும் ஓர் அசைக்க முடியாத இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.




இஸ்லாம் தங்கள் குடும்ப சொத்து, முஸ்லிம்கள் தங்கள் கோலுக்கு ஆடும் குரங்குகளாய் தங்கள் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள் என்று எண்ணி இறுமாந்திருந்த "முஸ்லியாக்கள்" மார்களுக்கும், அரசியல் தங்கள் சொந்த பிரைவேட் லிமிடட் கம்பெனி அதில் தங்களுக்கும் தங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பங்குண்டு என்று 'மொனாபொலி-பிசினஸ்'
(ஏகபோக வர்த்தகம் செய்து கொண்டிருந்த சில முஸ்லிம் மேட்டுக் குடியி னருக்கும் மதனி துக்கத்தைக் கெடுக்கும் சிம்ம சொப்பனமாகப் போனதில் ஆச்சரியமில்லை.


கேரளம் கல்வி அறிவுக்கு எவ்வளவு பேரும் புகழும் பெற்றதோ அந்த அளவுக்கு சாதிக் கொடுமைகளுக்கும் பெயர் போனது. நீறு பூத்த நெருப்பாக, அதே சமயம் தொட்டால் சுட்டுப் பொசுக்கி விடுமளவுக்குள்ள சாதி வெறி கேரளத்தை விட வேறு எங்கும் இருக்குமா என்பது சந்தேகமே.



இந்த நாயர் - நம்பூதிரி உயர் சாதி கூட்டுக்கெட்டு ஈழவர், தலித், மலை சாதியினர் இன்ன பிற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த கொடுமைகள் வெண்மணி சம்பவங்களையெல்லாம் வெறும் 'ஜுஜுபி' என்று சொல்ல வைத்துவிடும்.


இதிலிருந்து ஈழவர்களை விடுவிக்க நாராயண குரு சுவாமிகள்,
"ஒரு சாதி - ஒரு மதம் - ஒரு தெய்வம் மனுசனுக்கு" என்கிற தாரக மந்திரத்துடனும், "சங்கடிக்குவின் - சக்தமாகுவின் "(ஒன்று படுங்கள் - சக்தி பெறுங்கள் என்கிற கோஷத்துடனும் களமிறங்கினார்.

ஈழவர்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஒட்டுமொத்த கேரளீயர்களுக்குமாக இடதுசாரி இயக்கங்கள் தீவிர சமரங்களை முன்னெடுத்துச்சென்றன.. ஈழவர் எழுச்சியும் இடது சாரிகளின் இயக்கம் சார்ந்த அரசியல் அமைப்புகளும் இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு மாநிலத்தில் கம்யூனிச ஆட்சி ஏற்பட வழி வகுத்தது. ஆட்சிக்கு வந்தது சாதனைதான் ஆனால் சிலவற்றில் அவசரப்பட்டு விட்டார்கள். இருந்து கொண்டு கால் நீட்ட வேண்டும் என்கிற இயற்கை விதியை மறந்து நின்று கொண்டே கால் நீட்ட முயன்று கீழே விழுந்து கொண்டார்கள்.

எப்போதுடா சறுக்கும் என்று கண் கொத்திப் பாம்பாகக் காத்துக் கொண்டிருந்த உயர்சாதி விஷ வட்டம் "விமோசன சமரம்" என்கிற பெயரில் உணச்சிக்கொந்தளிப்புகளை ஏற்படுத்தி அரசைக் கவிழ்க்கும் காரியத்தை கன கச்சிதமாக செய்து முடித்து விட்டது. அதே சமயம் 'புரட்சி' அரசியலுக்குச் சொந்தக் காரர்களான இடது சாரிகளை 'வாகு' அரசியலுக்கு தோதுவாகப்
பக்குவப் படுத்தி விடவும் செய்தது. 'அனுபவம் ஆசான்' என்கிற மளையாளப் பழமொழியின் முழுப் பொருளையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

இடதுசாரிகளின் அரசியல் அட்டவணையில் 'சமரம்' இருந்த இடத்தில் ' சமரசம்' என்கிறம் அம்சம் வந்து குடி புகுந்து கொண்டது. இன்னொரு விமோசன சமரம் இனி ஏற்படாது என்பதை உறுதி செய்துகொள்ளும் அரசியல் புத்திசாலித்தனம் அவர்களுக்கு வந்துவிட்டது. கடின சித்தமுடைய இடது சாரி சித்தாந்த வாதிகளுக்கு இது ஒரு கசப்பான விஷயமாக அமைந்து போய் விட்டது.

'மதேரத்வம்' என்று மலையாளத்தில் குறிப்பிடப்படும் 'மதசார்பின்மையின்'
ஏகப் பிரதிநிதிகள் கூறிக்கொண்டே பரஸ்பரம் பரம வைரிகளான இடது சாரிகளும், காங்கிரசும் ' ஆபத்துக்கு பாவமில்ல என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் 'இந்துத்வ" சக்திகளோடு ரகசிய தேர்தல் உடன் பாடுகள் செய்து கொண்டு அரசியலையே கேலிக்கூத்தாக்கினர்.

சாதிக் கோட்டைகள் மெல்ல மெல்ல தகரும் நிலை கண்டு சங்கடப்பட்டுப்போய்க் கிடந்த 'சனாதனிகள்' எதிர்பார்த்த மாற்றங்கள் ஏமாற்றங்களாகப் போய் விட்டதால் மனம் வெம்பிய இடதுசாரி அறிவுஜீவிகள் ஒரு புதிய சமூக அமைப்பை ஏற்ப்படுத்தி விட துடித்து நின்ற இளைஞர் கூட்டம்,கட்டுத் தளைகளை உடைத்துக்கொண்டு வெளியே வரத் துடித்த ஒடுக்கப் பட்ட - ஒதுக்கப் பட்ட ஒரு மக்கள் பிரிவு என்று ஒரு 'கொதிநிலை' அரசியல் உருவாகி வந்த கால கட்டம்.

இந்த கால கட்டத்தின் கதா நாயகனாக, அமுக்கப்பட்டவர்களின் ஆற்றாமைகளை - ஆத்திரங்களை ஓங்கி ஒலிக்கும் ஒரு குரலாக, விடை கிடைக்காத பல சமூக அவலங்களுக்கு விடைகளை ' கண்டெத்தும்' ஒரு புது சக்தியாக - ரத்தமாக அப்துல் நாசர் மதானி அரசியல் வானில் உயர்ந்து வந்தார்.

ஓர் இஸ்லமிய மார்க்க அறிஞர் என்பதிலும் உபரியாக ஓர் இடது சாரி தேசியச் சிந்தனையாளராகவும் முஸ்லிம்கள் மட்டும் என்றில்லாமல் சந்தர்ப்பங்கள் மறுக்கப் பட்ட மக்களின் சக்தி அரணாகவும் அவர் தன்னைக் கெட்டிப் படுத்திக் கொண்டார்.

அவரை ஒரு மதவாதி என்று ஒரு குறுகிய கூட்டுக்குள் அடைத்து விட முயன்றார்கள் - முடியவில்லை. அவர் அரசியல் ரீதியாகக் கிளப்பி விட்ட சூட்டின் தகிப்பையும் தாங்க இயலவில்லை. முகத்துக்கு நேராக வந்து மோத முடியாதவர்கள், முதுகில் குத்தும் முயற்சிகளில் இறங்கினர். அவரது வளர்ச்சியும், பேரும் புகழுமே அவருக்கு வினையாக வரலாம் அதற்கு அவர் கொடுக்க வேண்டிய விலை மிகப் பெரிதாக இருக்கலாம் என்று அரசியல் அவதானிகள் கணக்குப்போட்டனர் - அதுதான் நடந்துள்ளது என்று நம்பத் தோன்றுகிறது.

இவரால் காயப் படாதவர்கள் கூட இவரை தங்கள் அரசியல் எதிரியாக எண்ணிச் செயல் பட்டதும்,வகுப்புத் துவேஷத்தையே தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டலையும் சில நாசகாரச் சக்திகள் இவரை வகுப்புத் துவேஷியாகச் சித்தரித்து அந்தத் தணலில் குளிர் காய்ந்ததுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.

சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தப்பித்துக் கொள்ளத் தெரியாத ஒரு நிர்பாக்கியசாலியை அடி, அடி என்று அடித்து நொறுக்கியாயிற்று., சரீரத்தை சல்லடைக் கண்களாய் துளைத்தாயிற்று. என்றாலும் இவை எவற்றாலும் அவரது உள்ள உறுதியை - கொள்கைப் பிடிப்பை தொடக்கூட முடியவில்லை என்பதுதான் அவரது ஆன்மீக பலத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

புறத் துன்பங்களை எண்ணி 'ஐயோ - அப்பா' என்று கதறாமல் இறைவன் நாட்டப்படியே எல்லாம் நடக்கின்றன என்று தான் மட்டுமல்ல,தன் மனைவி, மக்கள், தந்தை மற்றும் சுற்றமும் நம்பும் நிலை அடி பட்டவர்க்கல்ல அடித்தவர்களுக்குத்தான் தோல்வி என்கிற நிலையை தோற்றுவித்துள்ளதே, அந்த 'அவர்களுக்கு' ஏற்பட்டுள்ள வெட்கக் கேட்டை எந்த முகத்திரை கொண்டு மூடி மறைப்பார்கள்.?

இம்மை வாழ்வின் துன்பங்கள் எனக்குத் துச்சம் இறைவன் எனக்கருளப்போகும் மறுமை வாழ்வின் மகத்துவதுக்கு என்னை நானே தயார் படுத்திகொள்கிறேன்
என்று முழக்கமிடும் ஒரு கொள்கை வீரனை எந்தத் தடியால் அடித்துத் தகர்ப்பீர்கள்? தூய சஹாபாக்களின் துயர் மிகு சரித்திரங்கள் அவருக்குத் துணையாய், வழிகாட்டியாய் திகழும்போது எந்தச் சிறைச்சாலை - எந்தச் சித்திரவதை அவரை என்ன செய்துவிட முடியும்?

அதுவல்ல இங்கு பிரச்னை. இது தண்டனை வழங்கப் படாமலேயே தண்டனை போன்ற கொடுமையை அனுபவிக்கும் அப்துல் நாசர் மதானியின் கதையல்ல இது. மனித உரிமைக்காகப் போராடும் மக்களின் கதை. சட்டத்தை அமுல் படுத்து அதில் தப்பே இல்லை. ஆனால் சரியாக அமுல் படுத்து என்பதுதான் கோரிக்கையே. நீதி பரிபாலனத்தில் தண்டிக்கப் பட்டவனும் தனக்கு நீதி வழங்கப் பட்டிருக்கிறது என்று நம்பும் அளவுக்கு அது இருக்க வேண்டும் என்பதுதான் நியாயத்தை விரும்புவோரின் ஆதங்கம்.

ஓராயிரம் வார்த்தைகள் சொல்லும் ஒரு சங்கதியை ஒரு நிழற்படம் அதைவிட அருமையாகச் சொல்லிவிடும் என்பார்கள். ஓராயிரம் நிழற்படங்கள் சொல்லாத - சொல்ல முடியாத ஒரு விஷயத்தை ஒரு குறும்படம் மிக அழகாக - தெள்ளத் தெளிவாகச் செய்துவிடும் என்றும் கூறுவார்கள். அந்தக் கூற்றை ஆளூர் ஷானவாசின் நெறிப்படுத்தலில் வெளியாகியுள்ள "கைதியின் கதை"
மெய்ப்படுத்தி இருக்கிறது.

தொழில் நுட்ப நேர்த்தி இல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம். ஆளூர் ஷானவாசின் தலைமையிலான இளைஞர் கூட்டத்தின் ஆளுமையில் அது மிகச்சிறப்பக்கவே அமைந்துள்ளது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கலையை மிக அற்புதமாகக் கையாண்டிருக்கிறார் ஆளூரார்.

மனித மனசாட்சிகளை உலுக்கும் படம். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மனிதர்கள்தானா? மனசாட்சி உள்ளவர்கள்தானா என்கின்ற ஒரு காத்திரமான கேள்வியையும் ஓசைபடாமல் எழுப்பிவிட்டு இந்தப்படம் முடிவடைகிறது. ஆனால் இது ஏற்படுத்தப் போகும் நல்ல மாற்றங்கள் தொடரும் என்று நம்பலாம்.


'கைதியின் கதை' ஆவணப்படத்தை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

0 Comments:

Post a Comment

<< Home