Monday, May 14, 2007

டில்லி பேரணியின் அதிர்வலைகள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழக எல்லையைத் தாண்டிச் சென்று, தலைநகர் டில்லியிலே ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து 07.03.2007 ல் வரலாறு படைத்தது.

தமுமுகவின் மார்ச் 7 டில்லிப் பேரணியில் மக்கள்

தன்னால் முடியாததை எவர் செய்தாலும் தவறு என்று எண்ணும் உயர் (?) குணம் படைத்த சிலரால், 'டில்லி பேரணி' க்கான ஏற்பாடுகள் துவக்கப்பட்டதிலிருந்து இன்று வரை முன் வைக்கப்படும் சில முக்கியமான கேள்வி..

'டில்லிக்குச் சென்று, மிகப்பெரும் பொருளாதாரத்தை விரயம் செய்து போராட வேண்டுமா? மாநிலத் தலைநகர் சென்னையிலே ஏன் இப்போராட்டத்தை நட்த்தவில்லை? கருணாநிதியை பகைத்துக் கொள்ளாமல் இருப்பதற்காகவா?'

இவையும், இவற்றைச் சார்ந்தும், ஒட்டியும் பல துணைக் கேள்விகளையும் உலவ விட்டுள்ளனர்.

போலி ஆன்மீக அரசியல் குருவாக அவதாரம் எடுத்து உலவி வரும் அபூஷைத்தான் மூலம் பரப்பப்பட்டு வரும் இந்த வைரசுக்கு ஒரு சில படித்தவர்களே பலியாகும் போது பாமரர்களின் நிலை என்னவாகும் என்ற கவலையில் சில தகவல்களை பட்டியலிட விழைகிறேன்.

முதலில், இத்தகைய சந்தேகங்களை கிளப்பி அதன் மூலம் தனது கொள்ளைகளை மறைக்க முயலும் போலி ஆன்மீக அரசியல் குருவின் அருகதையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில், மார்ச் - 07 பேரணியை திட்டமிட்ட சமயத்திலாவது இது போல எழுப்பப்படும் சந்தேகங்கள் ஓரளவாவது சமுதாய அக்கறையோடு சம்பந்தப்பட்டிருந்திருக்கும். ஆனால், இன்றோ, மார்ச் - 07 பேரணி ஏற்படுத்திய தாக்கத்தையும், வீரியத்தையும், அப்பேரணியினால் ஏற்பட்ட அகில இந்திய முஸ்லிம் இயக்கங்களின் ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் கண்ணார கண்டு வாயார வாழ்த்தும் நெஞ்சங்களையும், வாயடைத்துப் போன இஸ்லாமிய எதிரிகளையும் கண்ட பின்பும் இக்கேள்விகள் முன் வைக்கப்படுவதால் சில தகவல்களை இச்சமுதாயத்திற்கு அவசியம் தெரிவித்தாக வேண்டியுள்ளது.

இன்று பொருளாதார விரயம் என்று புலம்புபவர்கள், உண்மையில் ஒரு இலட்சம் பேர் கூட கூடாத கும்பமேளாவிற்காக பட்டி தொட்டி எங்கும் டிஜிட்டல் பேனர் கட்டி வைத்தார்களே அது தான் உண்மையான வீண் விரயம். ஆனால் டில்லிக்குச் சென்ற சகோதரன் ஒவ்வொருவரும் செலவழித்தார்களே அது விரயமல்ல. மாறாக முதலீடு. ஆம் மறுமைக்கான முதலீடு. இந்த சமுதாயத்தை சீர் தூக்கி விட செலவிடப்பட்ட பொருளாதாரத்திற்கு அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி மறுமையில் உண்டு என உணர்ந்து தனது உரிமைகளுக்காக செலவிட்ட தொகைக்கு உரிய வெகுமதியை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

மேலும், சுனாமியில் தனது செல்வங்களை இழந்தவர்களுக்கான இழப்பீடு என வசூல் செய்து தனது இயக்க குண்டர் (தொண்டர்)களுக்கு சீருடைக்காகவும், தான் திருடிக் கொண்டு வந்த பத்திரிக்கையின் நஷ்டத்தை ஈடுகட்ட இரண்டு இலட்ச ரூபாய்களுக்கு மேல் சுரட்டிக் கொண்ட விஷயம் அமுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், முன் வைக்கப்படும் சொத்தை வாதங்கள் தான் டில்லி பேரணி குறித்த கேள்விகள் என்பதனை சமுதாயம் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

பேரணிக்கான ஏற்பாடுகள் முறையாக துவங்கப்பட்ட பொழுதே, சமுதாய சொந்தங்களின் மனதில் இந்த சந்தேக விதை தூவப்படுவதை அறிந்த தமுமுக, அதனை முளையிலேயே கிள்ளி எறியும் வண்ணம் அப்பொழுதே அருமையான பதிலைத் தந்தது.

மந்திரித்து விடப்பட்ட சிலர் அதனை அறிந்து கொள்ள வில்லை போலும். அதனால் தான் மீண்டும் அதே கேள்வியை முன் வைக்கின்றனர். அவர்களுக்காக தமுமுக தந்த பதில் இதோ:

'மாநில அளவில் இட ஒதுக்கீடு சாத்தியமானதாக இருந்தாலும், எதிர்கால பாதுகாப்பு கருதி சட்டபூர்வமாக ஆக்குவதற்காகவும், மத்திய அரசு பணிகளிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதனை வலியுறுத்துவதற்காகவும் பேரணியை இந்திய தலைநகர் டில்லியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது'.

டில்லி பேரணியின் ஏற்பாட்டு அளவிலேயே இந்த பதிலை தமிழக முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டது என்பதனைத்தான் டில்லிக்கு வந்து குழுமிய தமிழகத்தின் 7,000 களப்போராளிகள் நிரூபித்தனர். இதுவே தமுமுகவிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். தமிழக மக்களின் இத்தகைய பேராதரவிற்கு மேலும் ஒரு காரணம் இருப்பதாகவே நாம் எண்ணுகிறோம். அது என்னவெனில்,

மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து, ஆட்சியில் அமர்த்தியதோடு நில்லாமல் தொடர்ந்து வலியுறுத்தி முஸ்லிம்களின் நிலைபற்றி ஆராய சச்சார் கமிட்டி அமைய பெரும் உந்துசக்தியாக இருந்த தமுமுக, மேலும் மேலும் அரசை வலியுறுத்தி அக்கமிட்டியின் பரிந்துரைகளை செயலாக்கத்தில் கொண்டு வரவும் பாடுபட வேண்டுமென தமிழக முஸ்லிம்கள் விரும்புகின்றனர். எனவே இத்தகைய பொறுப்பையும் தமுமுக ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று இந்திய முஸ்லிம் கட்சிகளை (அ) இயக்கங்களை ஒன்றுபடுத்தும் சக்தியும் திறமையும் தமுமுகவிற்கே உள்ளது என்பதனை டில்லி பேரணி நிரூபித்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆக, சமுதாயத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படும் தமுமுக ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையே இதுபோன்ற விமரிசனங்கள் வெளிப்படுத்துகின்றன. என்றாலும் சமுதாயம் சரியான தலைமையை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது.

இதற்கு மேலும் மயக்கத்திலிருப்பவர்களின் பித்தம் தெளிய பிரார்த்திக்கிறோம்.

வஸ்ஸலாம் - ராவுத்தர் 15.05.2007

0 Comments:

Post a Comment

<< Home