Sunday, April 29, 2007

இல.கணேசன் மீது மான நஷ்டஈடு வழக்கு

தமுமுக தலைவர் அறிவிப்பு

தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் முத்துப்பேட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு இல.கணேசன் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது...

இல.கணேசன்

முத்துப்பேட்டையில் பெரியார் சிலை கடந்த 21/04/2007 அன்று உடைத்து சேதப்படுத்தப் பட்டிருக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியதாகும். ஆதிக்க எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் நலன் என பன்முக தளங்களில் போராடிய பெரியார் முஸ்லிம்களின் நலனில் அக்கறைக் கொண்டவராக திகழ்ந்தவர்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான முத்துப்பேட்டையில் விஷமிகள் சிலர் அவரது சிலையை சேதப்படுத்தியிருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது.

பெரியார் சிந்தனையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பகைத் தீயை மூட்ட ஆதிக்க நரிகள் தீட்டிட்ட சதியாகவே இதைப் பார்க்கிறோம்.

இவ்விஷயமாக முத்தரையர் சமூகத்தை சேர்ந்த மனோகரன் என்பவரும், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த மீரா உசேன் என்பவரும் அவசர கோலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைரேகை நிபுணர்கள் சோதனைகள் நடத்த வருவதற்கு முன்பே, மீரா உசேனை குற்றவாளி என தேடி அலைந்த காவல்துறை, கைரேகை நிபுணர்களின் முடிவைக் கூட கேட்காமல் அவரைக் கைது செய்துள்ளதாக அவ்வூர்மக்கள் தெரிவிக் கிறார்கள். அது போல் மனோகருக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை என முத்தரையர் சமுதாய மக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நிலவரம் இப்படியிருக்க, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவரான இல.கணேசன் இச்சிலை உடைப்பு தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை விடுத்துள்ளார்.

இது கடும் கண்டனத்திற்குரியதாகும். தமுமுகவின் நிர்வாகியோ அல்லது உறுப்பினரோ இவ்விஷயத்தில் கைது செய்யப்படாத போது, மீரா உசேன் என்பவருக்கும் தமுமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லாதபோது இல.கணேசன் பொய் பழி சுமத்தியிருப்பது அவரது பதற்றத்தைக் காட்டியுள்ளது. அவரது திசை திருப்பும் முயற்சி குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தமுமுக மீது பொய் பழி சுமத்திய இல.கணேசன் மீது ஒரு கோடி ரூபாய் கேட்டு மான நஷ்டஈடு வழக்கு விரைவில் தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

நன்றி : தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

0 Comments:

Post a Comment

<< Home