Monday, August 04, 2008

பிரிட்டன்: முஸ்லிம்களின் நெருக்கடி நிலை

பிரிட்டன்: முஸ்லிம்களின் நெருக்கடி நிலை

ஜி. அத்தேஷ்


ஜூலை 7, 2005 லண்டன் மாநகரம் மிகப் பரபரப்புடனும் மக்களின் துரித இயக்கத்துடனும், அன்றைய காலைப் பொழுதை உள்வாங்கிக் கொண்டிருந்தது. பேருந்துகள், சுரங்க ரயில்கள் எல்லாம் மாநகர மக்களை சுமந்து கொண்டு தினசரி பயணங்களை தொடர்ந்தன. அந்தக் காலை, அன்றாட பரபரப்பின் வேகத்தை இழுத்து நிறுத்தும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாது. காலை 8.30 மணி, அடுத்தடுத்த குண்டுகள் பேருந்துகளிலும், சுரங்க ரயில்களிலும் வெடித்துச் சிதறியதில் 53 பேர் கொல்லப்பட்டார்கள்.


அந்த அரட்டலான சம்பவம் லண்டன் நகரை மிரள வைத்தது. அது தொடர்ந்தது 3 நாட்கள் மட்டுமே. ஆனால் அதன் அதிர்வுகள் 3 ஆண்டுகளாக பிரிட்டனில் வசிக்கும் முஸ்லிம்களை ஆட்டிப் படைக்கிறது. இது சம்பந்தமாக, ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்றினை லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல்-4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கான தலைப்பு "It Shouldn`t Happen to a Muslim''. இதன் பொருள் 'முஸ்லிம்களுக்கு இது நேரிடக் கூடாது' என்பது.


லண்டன் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட முஸ்லிம்கள் என்று பிரிட்டன் உளவுத்துறை கூறியதில் இருந்து பிரிட்டிஷ் முஸ்லிம்கள் மீது மக்கள் கசப்புணர்வு கொள்ள ஆரம்பித்தார்கள். பிரிட்டனில் வாழும் முஸ்லிம்கள் அனைவரையும் இந்த கசப்புணர்வு மென்று துப்பியது. அதுவே சேனல் 4 நிறுவனம், இந்த தலைப்பை வைக்க காரணமானது.


பீட்டர் ஒபோர்னே (Peter oborne) என்ற ஊடக நிபுணர் இந்நிகழ்ச்சியை தொகுத்துள்ளார். முஸ்லிம்கள் அச்சத்திலும், குழப்பத்திலும், முற்றுகையிடப்பட்டும் உள்ளனர் என்பதை ஒபோர்னே எடுத்துக் காட்டியுள்ளார். ஒவ்வொரு பிரிட்டிஷாரும் முஸ்லிம் எதிர்ப்புணர்வில் கரைந்துள்ளதை எங்களால் காண முடிந்தது. வெள்ளை இன பிரிட்டிஷ்காரர்கள், பிரிட்டிஷ் தேசிய கட்சியினர் மட்டுமின்றி பிரிட்டனில் வசிக்கும் ஆசிய நாட்டைச் சார்ந்த பிற மதத்தினரும் கூட முஸ்லிம்களை வெறுக்கவே செய்கின்றனர் என்கிறார்.


இந்த நிகழ்ச்சி, 'கருத்துக் கணிப்பு' ஒன்றையும் நடத்தியிருக்கிறது. லண்டன் குண்டு வெடிப்புக்கு பிறகு , இஸ்லாமை அச்சுறுத்தும் மதமாக பார்ப்போர் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது என முஸ்லிம்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்களில் 36 சதவீதம் பேர், தாங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த எதிர்ப் புணர்வை சந்தித்ததாக கூறுகிறார்கள். ஆயிஷா பானு முஸ்லிமாக மாறிய வெள்ளை இனத்துப் பெண். அவர் மீது தொடர்ந்து வெறுப்புணர்வு காட்டப்பட்டதால் 'புர்கா' அணிவதை தவிர்த்து விட்டதாக இந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார். வசை சொற்களை எதிர்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேற முடியாது, என் குழந்தைகள் முன்னாடியே கூட இவ்வாறெல்லாம் நடந்துள்ளன. இது சம்பந்தமான குழந்தைகளின் கேள்விக்கு என்னால் விளக்கம் தர முடியவில்லை. அதனால் நான் புர்கா அணிவதை நிறுத்திக் கொண்டேன்' என்கிறார்.


சில அசம்பாவித நிகழ்வுகளை வைத்துக் கொண்டு நியாயமற்ற முறையில் 'முஸ்லிம்கள் அனைவரையுமே குறி வைத்து தாக்குகிறார்கள்' என ஒபோர்னேவின் பேட்டிக்கு பதிலளித்த பிரிட்டன் முஸ்லிம்கள் கூறியுள்ளார்கள். தீவிரவாதிகள் என்ற சொல்லால் நாங்கள் ஏன் தாக்கப்படுகிறோம் என நபிலா கான் எனும் இளம் பெண் கேள்வி எழுப்புகிறார். பிரிட்டனில் தான், நான் பிறந்து வளர்ந்தேன். ஆனால் ஒரு தீவிரவாதியாக நான் கருதப்பட்டு காயப்படுத்தப் படுகிறேன்' என்கிறார் நபிலா கான். பேட்டியளித்துள்ள பலர், 'நாங்கள் மிரட்டப்படுகிறோம், அச்சத்தின் பிடியில் தான் வாழ்ந்து வருகிறோம்' என்கின்றனர். மேலும் சிலர், நாங்கள் பிரிட்டனை விட்டு வெளியேறிவிடலாமா என கருதுகிறோம் என்றும் கூறியுள்ளார்கள்.


நான் மிக ஆழமாக மன வேதனைப் படுத்தப்பட்டேன். ஒவ்வொருவரையுமே என்னுடைய எதிரி என்பதாக உணர் கிறேன்' என்கிறார் சர்ப்ராஜ் சர்வார். இவர் நடுத்தர வயதுடையவர், பாஸில்டானில் வசிப்பவர். நான் அவதூறுகளை எதிர் கொண்டேன். என் வீட்டின் மீது தீக்குண்டுகளை வீசினர். எனது வாகனத்தை நொறுக்கினார்கள். வீட்டுச் சுவரின் மீது அவதூறான படங்களை வரைந்தனர் என்றும் சர்ப்ராஜ் கூறியிருக்கிறார். ஆன்டிஹைமன், இவர் லண்டன் தாக்குதல் குறித்த விசாரணை அதிகாரி. அவர் கூறுகையில், ஒரு இளைஞர் என்னிடத்தில் கூறியது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 'எங்களை சுட்டுக் கொல்ல வரும் காவலர்களுக்காக காத்திருக்கிறோம்'' என்றார் எனக்கூறியுள்ளார். இவ்வாறு அச்ச உணர்வு அவர்களை ஊடுருவியிருக்கிறது.


பிரிட்டனில், சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளவர் சாதிக் மாலிக், முஸ்லிம்கள் ஒவ்வொருவரும், 'தாங்கள் ஐரோப்பாவின் யூதர்கள்' போல் நடத்தப்படுவதாக உணர்கிறார்கள். நான், யூதர்கள் படுகொலையோடு இதனை ஒப்பிடவில்லை. ஐரோப்பாவில் இன்னும் சில இடங்களில் யூதர்கள் 'குறி வைக்கப் படுகிறார்கள்'. தாங்களும் அவ்வாறு குறி வைக்கப்படுவதாக முஸ்லிம்கள் உணர்கிறார்கள். முஸ்லிம்களாக இருந்தால் தாக்கலாம் என்பதான செய்திகள் வெளிவருகின்றன' என்கிறார்அமைச்சர் சாதிக்.


அமைச்சர் சாதிக் மாலிக், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் பிறந்தது வளர்ந்தது எல்லாம் 'பிரிட்டனில், இஸ்லாமிய எதிர்ப்புணர்வை எதிர் கொள்ளும் வாய்ப்பு எனக்கே ஏற்பட்டது, எனது வாகனத்தை தீவைத்து கொழுத்த முயற்சி நடந்தது, மின் அஞ்சலில் தொடர்ந்து வெறுப்பூட்டும் செய்திகள் வந்த வண்ணமிருக்கும்' என்கிறார்.


முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து தவறான செய்திகள் தரும் ஊடகங்கள் தாம் இதற்கு காரணம் என்கிறார் அமைச்சர் சாதிக். ஊடகங்கள் தினம் தினம் புதுபுதுக் கதைகளை எழுதி வருகின்றன. எனது தொகுதியில் உள்ள மருத்துவமனையில் ஒரு நோயாளி, தினமும் ஐந்து வேளை தனது படுக்கையை மெக்காவை நோக்கி திருப்பி வைக்குமாறு ஊழியருக்கு உத்தரவிட்டதாக ஒரு செய்தி கடந்த டிசம்பர் மாதம் 'நேஷனல் பிரஸ்' என்ற பத்திரிக்கையில் வந்தது. இந்தச் செய்திக்கு எந்த அடிப்படையும் கிடையாது. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் மரணத்தருவாயில் இருந்தார். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் மூதாட்டியின் படுக்கையை திருப்பி மெக்காவை முன்னோக்கியதாக வைக்கலாம் என யோசனை கூறியுள்ளார் அவ்வளவு தான். அடிப்படையற்ற செய்திகள் வரும் போது எந்த செய்தி ஊடகமும், அவற்றின் உண்மை நிலையை ஆராய்வதில்லை. தவறுகளை சீர் செய்வதில்லை. முஸ்லிம்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே தனிமைப்படுத்தப்பட, இந்த ஊடகங்கள் தான் காரணமாக உள்ளன என்கிறார் சாதிக்.


முஸ்லிம்கள் பற்றி தப்பான எண்ணங்களை உருவாக்குவதில் ஊடகங்கள் மட்டுமே தனிப் பெரும் முதன்மை காரணமாக உள்ளன என்கிறார் ஒபோர்னே. பல்வேறு பத்திரிக்கைகளை அவர் சுட்டிக் காட்டுகிறார். உதாரணமாக, லீஸஸ்டரில் இருக்கும் மருத்துவமனையில், ஒரு முஸ்லிம் ஊழியர், மத அடிப்படை காரணங்களுக்காக, புதிதாக போடப்பட்ட 'உயர்தர சட்டங்களை' மதிக்காமல் போனதால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் நோய் பீடிக்கும் நிலையில் உள்ளதாக ஒரு செய்தி குறிப்பிட்டது. மருத்துவமனை அதிகாரிகள் இந்தக் கூற்றை காட்டமாக மறுத்துள்ளனர். அதிகாரிகள் கூறிய மறுப்பை எந்தப் பத்திரிக்கையும் வெளி யிடவில்லை என்கிறார்.


படிப்படியாக 'முஸ்லிம்களை அச்சுறுத்தும் சக்தி' எனக் காட்டுவதே இவர்கள் நோக்கம். இதுவே, பிரிட்டிஷ் அரசியல் மற்றும் ஊடகங்களின் மையக் கருவாக இருந்து வருகிறது. இதற்கான எதிர் குரல்கள் யார் காதிலும் விழுவதில்லை. வெளிப்படுத்தப்படுவதுமில்லை.


முஸ்லிம்களைப் பற்றிய அச்சத்தை ஊட்ட இஸ்லாமோபோஃபியா என்ற வார்த்தை ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது. அதேவேளை, யூதர்களையோ அல்லது வேறு யாரையாவது இவ்வாறு குறிப்பிட்டால் அது பொறுத்துக் கொள்ளப்படாது. நமது அரசியலிலும், ஊடகங்களிலும், வீதிகளிலும் முஸ்லிம்களை நடத்தும் விதம் குறித்து நாம் வெட்கப்படவேண்டும். பொதுக் கலாச்சாரத்தை நாம் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருபோர்னே.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

1 Comments:

At 1:35 AM, Anonymous Anonymous said...

அதெப்படி எங்கே குண்டு வெடித்தாலும் அதன் பின்னாடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். முதலில் உங்களை திருத்தி கொள்ளுங்கள் பிறகு ஊரை திருத்தலாம்.

 

Post a Comment

<< Home