Wednesday, February 27, 2008

அரசியல் வெற்றிடத்தை நிரப்ப புதிய கட்சி!

தமுமுக அதே வழியில் பயணிக்கும்!
அரசியல் வெற்றிடத்தை நிரப்ப புதிய கட்சி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு கடந்த ஆகஸ்ட் 26, 2007 அன்று தஞ்சை மாவட்ட பாபநாசத்தில் கூடியபொழுது.., தேர்தலில் பங்கெடுத்து நேரடி அரசியல் வெற்றிடத்தை நிரப்புவது குறித்து முடிவெடுக்க தலைமை நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் வழங்கியிருந்தது. தமிழகத்தில் தனி இடஒதுக்கீடு பெற்று சமுதாய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது.

அப்பாவி கோவை சிறைவாசிகளின் வழக்கை விரைந்து முடிக்க சட்டரீதியாக போராடி, அதில் வெற்றி கண்டு மனித உரிமைகளை காப்பாற்றியது - என இருபெரும் கடமைகளை நிறைவு செய்துள்ள நிலையில், சமுதாய மக்களின் பேராதரவும் பெருகியுள்ள சூழலில், தேர்தல் அரசியல் வெற்றிடத்தை நிரப்புதல் குறித்து ஆய்வு செய்ய கடந்த 22.02.08 அன்று தமுமுகவின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது.

பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் கள், மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில் பல்வேறு கருத்துகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடத்தப் பட்டன.

தமுமுகவை பெயர் மாற்றத் துடன் அரசியல் கட்சியாக மாற்றுவது,

தமுமுகவின் வழிகாட்டலில் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது, என இரு தலைப்பில் சாதக பாதகங்கள் அலசி ஆராயப்பட்டன. இறுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இப்போது இருப்பது போன்ற எழுச்சியுடன் சமுதாய மற்றும் மார்க்கப் பணிகளை மேற்கொண்டு சமுதாய இயக்கமாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. முஸ்லிம்களின் தேர்தல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் புதிய அரசியல் கட்சியை உருவாக்கி தமுமுகவின் வழிநடத்தலில் அரசியல் பணி ஆற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

புதிய அரசியல் கட்சி என்பது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட இந்து மக்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றும் வகையில் முழுமையாகிற ஜனநாயக கட்சியாக செயல்பட வேண்டும் என்றும், அதன் முக்கிய பொறுப்புகளில் அரசியலில் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கூடுதலாக ஆய்வு செய்யவும், தமுமுகவுக்கும், புதிய அரசியல் கட்சிக்குமான உறவுகளை திட்டமிடுவ தற்கும், அமைப்பு நிர்ணய சட்டத்தை உருவாக்குவதற்கும், குறிக்கோள்களை வடிவமைப்பதற்கும் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் அரசியல் ஆய்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில்.

பி. அப்துஸ் ஸமது (மாநிலச் செயலாளர்)
மௌலா. நாசர் (மாநிலச் செயலாளர்)
பேரா. ஹாஜாகனி (மாநில துணைச் செயலாளர்)
ஜெ. அவுலியா (மாநில தொழிலாளர் அணி செயலாளர்)
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஐவர் குழு மார்ச் 31, 2008 தேதிக்குள் தனது அறிக்கைகளை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கைகள் குறித்து தலைமை நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்கும்.

புதிய அரசியல் கட்சி குறித்து கருத்துக்களை தெரிவிக்க விரும்புபவர்கள் தங்கள் ஆலோசனைகளை எழுத்துமூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு மார்ச் மாதம் 20 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். வெளிநாடுகளில் உள்ளவர்கள் tmmk@tmmk.in என்ற மின்னஞ்சல் வழியாக கருத்துகளை அனுப்பலாம்.

கட்சிக்கான பெயர்

கொடி வண்ணம் (வரைந்து அனுப்புக)

கொள்கைகள் மற்றும் விதிகள்

தமுமுகவுக்கும், புதிய அரசியல் கட்சிக்குமான உறவு

வேட்பாளர் தேர்வு முறைகள்

கட்சிக்கான தனித்தன்மைகள்

நிர்வாகப் பொறுப்புகளை நிரப்புவது ஆகியன குறித்து மட்டும் தங்கள் ஆலோசனைகளை புரியும் வகையில், தெளிவான எழுத்துகளில் எழுதி அனுப்ப வேண்டும். தமுமுக சகோதரர்களாக இருந்தால் அவர்கள் தங்கள் பொறுப்பு களை குறிப்பிட வேண்டுகிறோம். மற்றவர்கள் தங்கள் முகவரியோடு ஆலோசனைக் கடிதங்களை அனுப்ப வேண்டுகிறோம்.

இவண்
தலைமை நிர்வாகக் குழு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

முகவரி:
அரசியல் ஆய்வுக்குழு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
7, வடமரைக்காயர் தெரு,
சென்னை - 600 001

0 Comments:

Post a Comment

<< Home