முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு முழுமையாக வேண்டும்
செ.வெ.எண்.194
நாள்.12.3.2008
அருந்ததியர் வகுப்பினருக்குத் தனி உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து 12.3.2008 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானமும் முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய நிறைவுரையும்.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் இவ்வளவு நேரம் இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்று அரிய கருத்துக்களையெல்லாம் வழங்கியமைக்காக – ஒரு புரட்சிகரமான முடிவை அரசின் சார்பில் நாமனைவரும் சேர்ந்தெடுத்தோம் என்ற நிலையை உருவாக்கி உதவியமைக்காக – என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரேயொரு கட்சியின் (அ.தி.மு.க) முடிவு மாத்திரம் - ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அதுவும் ஒத்துப் போகக் கூடிய முடிவாகத் தான் இருக்கும் - எனவே இந்த அருமையான – அமைதியாக நடைபெற்ற உணர்ச்சி மயமாக நடைபெற்ற – அடித்தட்டு மக்களுக்காக ஒரு விடிவு காலத்தை உருவாக்கக் கூடிய நல்ல எண்ணத்தோடு கருத்துக்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு இடையில் ஒரு சில விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட்டாலுங்கூட – நான் அதற்காக உங்களோடு சேர்ந்து வருத்தப்படுகிறேன் - உங்கள் சார்பாக என் வருத்தத்தை நான் வெளியிடவும் விரும்புகிறேன்.
இங்கிருந்து வெளிநடப்பு செய்த டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள், இந்தக் கூட்டமே தன்னுடைய இஷ்டத்திற்கு விரோதமானது என்ற தன்னுடைய நிலையை வெளிப்படுத்தியிருக்கிறார். நான் முதலிலே, தம்பி டி.ராஜேந்தர் பேசும் போதே கூட கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் என்ன சொன்னார் என்பதை குறுக்கிட்டுச் சொன்னேன். அதை விட அதிகமான கருத்துக்களைத் தான் இந்தக் கூட்டத்தின் நோக்கத்திற்கு விரோதமாக அவர் வெளியிட்டிருக்கிறார் என்றால் - இது தான் தாழ்த்தப்பட்ட மக்களுடைய தலையெழுத்து என்ற வைதீக பாஷையிலே சொல்ல வேண்டும். அவர்களுக்காக வாதாட வேண்டிய ஒருவர் - அவர்களுக்கு விரோதமான கருத்துக்களை இங்கே வெளியிட்டு, நம்மையெல்லாம் இங்கே அமர்ந்து அரிய யோசனைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்ற நம்மையெல்லாம் குற்றவாளிகளாக ஆக்கி விட்டு, சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறிய இரண்டு வரிகளை மட்டும் முதலில் படித்தேன். அதன் விபரம்
- 'தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் உள் இடஒதுக்கீடு வழங்குவது என்ற கருத்து ஏற்றுக் கொள்ள இயலாது. ஆந்திராவைப் போல பிரச்சினை ஏற்படும். அப்படி ஒதுக்கினால் எல்லா ஜாதியினருக்கும் ஒதுக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக தாழ்த்தப்பட்ட மக்களின் ஒதுக்கீட்டில் கை வைக்கக்கூடாது. இந்தக் கூட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டை தட்டிப் பறிக்கும் செயலாகும். ஏற்கனவே, எஸ்.சி.க்கு என்று ஒரு குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது அமல்படுத்தப்படவில்லை. இந்தக் கூட்டம் ஒரு திசை திருப்பும் கூட்டமாகும். இதுவரை ஏற்பட்டுள்ள 'பேக்லாக் வேகன்சி'யை இதுவரை 'கிளியர்'செய்யவில்லை' என்று குற்றஞ்சாட்டிவிட்டு சென்றிருக்கிறார்.
இது நூற்றுக்கு நூறு உண்மையல்ல. நாம் நல்ல எண்ணத்தில் எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதை நடைமுறைப்படுத்துகின்ற இடத்திலே உள்ள சில அதிகாரிகள் சில தவறுகளைச் செய்து விடக்கூடும். இங்கே நம்முடைய த.மு.மு.க. சார்பில் பேசிய நண்பர் ஹைதர் அலி பேசும்போது இட ஒதுக்கீடு அரசின் சார்பாக சிறுபான்மையோருக்குச் செய்யப்பட்டாலுங்கூட, அதிகாரிகள் அதை சரிவர நடைமுறைப்படுத்த வில்லை. செயல்படுத்தவில்லை என்றார். இதை அவர் இந்தக் கூட்டத்திலே மாத்திரமல்ல, என்னிடம் நேரடியாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்த போது சொன்னார்கள். நான் அதை விசாரித்த போது, கிறித்தவ சமுதாய மக்களுக்கு எவ்வளவு சதவிகிதமோ அதே சதவிகிதம் இஸ்லாமிய மக்களுக்கும் என்று நாம் அறிவித்திருந்தாலுங்கூட, கிறித்தவர்களுக்குக் கிடைக்கின்ற இடஒதுக்கீடு, சரியாக வழங்கப்படுகிறது. ஆனால் இஸ்லாமியர்களுக்குத் தரப்பட வேண்டிய அந்த 3.5 சதவிகித ஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை என்பது உண்மை தான். இதை நான் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு சதவிகிதம் என்று அறிவித்தால், சதவிகிதக் கணக்கைத் தான் நடைமுறைப்படுத்த வேண்டும். அதை விட்டு விட்டு, நீதிக்கட்சிக் காலத்திலே போடப்பட்ட முறையை வைத்துக் கொண்டு, இப்பொழுதும் அதே முறையில் தான் செய்வோம் என்று கூறுகின்ற சில அதிகாரிகள் இதிலே தலையிட்ட காரணத்தால் வந்த வினை இது. நான் அதற்காக, உடனடியாக அதிகாரிகள் கூட்டத்தையும், அமைச்சர்கள் கூட்டத்தையும் கூட்டி, அதை சரி செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். எதையும் அறிவிப்பது வேறு. நடைமுறைப்படுத்துவது வேறு என்பதற்கு இது ஒரு தக்க உதாரணம். அதற்காக அறிவிப்பதே தவறு என்று ஆகி விடாது. ஒரு நல்ல காரியத்தை அறிவிப்பதே தவறு என்று ஆகிவிடக் கூடாது. ஒருவர் சரியாக செய்ய வில்லை என்றால், ஒரு அதிகாரி தவறு செய்தால், அதற்காக அந்தத் தத்துவமே, கொள்கையே, அதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே தவறு என்று யாரும் சொல்ல முடியாது.
இப்படித் தான் நண்பர் கிருஷ்ணசாமி அவர்கள் இங்கே இந்தக் கருத்தை வெளியிட்டு விட்டு வெளியேறி இந்தக் கூட்டத்தைப் பற்றியே ஒரு தவறான கருத்தை ஆதி திராவிட மக்களிடத்திலே ஏற்படுத்த முயன்றிருக்கிறார். அதற்காக நான் உள்ளபடியே உங்கள் அனைவரோடும் சேர்ந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
முடிவாக இந்தக் கூட்டம் தொடங்கியது, நடந்தது, முடிந்தது என்ற அளவோடு இல்லாமல் ஒரு நல்ல முடிவை எடுத்தது என்ற அளவில் உங்கள் அத்தனை பேருடைய கருத்தும் ஒத்துவரும் என்ற உணர்வோடு இந்த தீர்மானக் குறிப்பை உங்கள் முன்னால் நான் படித்துக் காட்டுகிறேன். இதில் திருத்தம் இருந்தால் தயவு செய்து சொல்ல வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தீர்மானம்
'சமூக, கல்வி, பொருளாதார நிலைகளில் அடித்தளத்திலே உள்ள ஆதி திராவிட மக்களுக்குள்ளேயே அருந்ததியர் எனப்படுவோர் மிகவும் பின்தங்கிய நிலையிலே இருப்பதால், அவர்களைக் கைதூக்கிவிடும் முயற்சிகளில் ஒன்றாக, தற்போது ஆதி திராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் இவர்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்கிடவும்;,
அருந்ததியர் எனப்படுவோருள் எந்தெந்தப் பிரிவினரை உள்ளடக்குவதென்றும், அந்த மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவைப் பற்றிவும் விரிவான முறையில் விசாரித்தறிந்து அண்மையில் மத்திய அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி அமைந்துள்ள கமிஷனின் நிலையையும் ஆராய்ந்து, தேவைப்பட்டால் அவர்களையும் கலந்து கொண்டு, அரசுக்குப் பரிந்துரை செய்திட உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசரைக் கொண்ட ஒரு நபர் குழு (One Man Committee) அமைப்பதென்றும்,
அந்தக் குழுவின் அறிக்கையை ஆறு மாத காலத்திற்குள் பெற்று அதை நடைமுறைப் படுத்துவது பற்றி அரசு முடிவெடுப்பதென்றும்,
இந்த அனைத்து அரசியல் கட்சிகளின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது'.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை.9
நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்
0 Comments:
Post a Comment
<< Home