Monday, March 10, 2008

இடஒதுக்கீட்டின் நடைமுறைச் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு - முதல்வர் உறுதி

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறை சிக்கல்கள் விரைவில் நீக்கப்படும் தமுமுக தலைவர்களிடம் முதல்வர் நேரில் உறுதிமொழி


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா மற்றும் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி ஆகியோர் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை அவரது இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சந்தித்தனர். சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிக்கல்கள், கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் அதிகாரிகள் ஏற்படுத்தி வரும் சிக்கல்கள் உள்ளிட்ட பல பரிச்னைகளை முதல்வர் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றை நீக்குமாறு தமுமுக தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதத் தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதையொட்டிச் சில அரசு பணிகளுக்கு பணியாளர்களைத் தேர்வுச் செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளம்பரங்களைச் செய்தது. இந்த விளம்பரங்களில் மொத்தப் பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு சேர வேண்டிய 3.5 சதவிகிதம் அளவிற்குப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட தேர்வாணைய அதிகாரிகளிடம் கேட்ட போது ரோஸ்டர் முறையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தனர். இருப்பினும் முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை தமுமுக எடுத்து சென்றது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள விளம்பரங்கள், ரோஸ்டர் முறை குறித்து அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச்சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அரசாணைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று தமுமுக சார்பாக அமைக்கப்பட்டது. தமுமுக தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழு தனது பரிந்துரைகளையும் மாற்றுத் திட்டத்தையும் வகுத்தது. இதன் பிறகு தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச்சீர்திருத்தத் துறையின் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களைத் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி தலைமையில் இந்தக் குழுவினர் சந்தித்து, இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலாத அளவிற்குப் போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் குறித்து விளக்கினர். இதனைத் தொடர்ந்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் செயலாளர் ஸ்ரீதர் மற்றும் சட்டத்துறைச் செயலாளர் தீனதயாளன் ஆகியோரையும் இந்தக் குழுவினர் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்புகளின் இறுதி கட்டமாக முதலமைச்சர் கலைஞர் அவர்களைத் தமுமுக தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் சந்தித்தனர். தற்போது நடைமுறையில் உள்ள ரோஸ்டர் முறையில் பணிகளை மாவட்ட வாரியாகப் பிறகு மாவட்டங்களில் உள்ள அலுவலகங்கள் எனப் பிரித்து அந்த அலுவலகங்களை யூனிட்டாக கருதி அங்குள்ள பணியிடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்படுவது முஸ்லிம்களுக்கு மட்டும் அல்லாது செட்யூல்ட் பழங்குடி மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை முதல்வரிடம் மிக விரிவாகத் தமுமுக தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

முதல்வரைச் சந்தித்த அன்றைய தினம் த.அ.ப.தேர்வாணையம் வெளியிட்டுள்ள நில அளவர் மற்றும் வரைவாளர் பணிநியமனத்திலும் முஸ்லிம்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டினர். காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்த ரோஸ்டர் முறையில் மாவட்டங்கüல் உள்ள அலுவலகங்களை யூனிட்களாக கருதுவதற்கு எந்தவொரு அரசாணையும் இல்லை என்பதையும் தமுமுக தலைவர்கள் முதல்வரிடம் சுட்டிக்காட்டினர். முதல்வரும் தமுமுக தலைவர்கள் எடுத்தவைத்த வாதங்களில் உள்ள நியாயங்களை முழுமையாக உணர்ந்து இது குறித்துத் தொடர்புள்ள அரசு அதிகாரிகளின் கூட்டத்தை உடனே கூட்டி முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட 3.5 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்தச் சந்திப்பின் போது முதல்வரின் தனி செயலளார்கள் திரு. ராஜமாணிக்கம் மற்றும் திரு. ராஜரத்தினம் ஆகியோரும் உடனிருந்தார்கள்.

சிறுபான்மை கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்வர் உத்தரவிட்ட பிறகும் அதனை நிரப்புவதற்கு முட்டுக்கட்டை போடும் கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகளின் போக்கை முதலமைச்சரிடம் தமுமுக தலைவர்கள் சுட்டிக்காட்டி இந்த பிரச்சனையில் அவர் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டுமெனத் தமுமுக தலைவர்கள் முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர். உடனடியாக முதல்வர் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியைத் தனது அறைக்கு அழைத்தார். அமைச்சரிடம் சிறுபான்மை கல்லூரிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தமுமுக தலைவர்கள் எடுத்துரைத்தனர். இப்பிரச்னைக்கும் விரைவில் தீர்வு காணுமாறு முதல்வர் உத்தரவிட்டார்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு அனைத்திந்திய அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்துள்ள மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை கடந்த மே 22ம் தேதி பிரதமரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதை முதல்வரிடம் சுட்டிக்காட்டிய தமுமுக தலைவர்கள் அந்த அறிக்கை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப் பிரதமரை அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

நீண்ட காலமாகப் பிணை மறுக்கப்பட்ட நிலையில் சிறையில் இருக்கும் குணங்குடி அனிபாவின் நிலையை எடுத்துக் கூறி அவரை உடனே விடுதலைச் செய்வதற்கு ஆவணச் செய்ய வேண்டும் என்றும் முதல்வரிடம் தமுமுக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மொத்தத்தில் இந்தச் சந்திப்பு மிகப் பயனுள்ளதாகவும் சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுவதற்கான அறிகுறியாகவும் அமைந்திருந்தது.


நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

0 Comments:

Post a Comment

<< Home