கீ.வீரமணியின் துரோகம்
கேள்வி : தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து முதல்வர் தி.க. தலைவர் வீரமணியிடம் மட்டும் ஆலோசனை நடத்துவதை மக்கள் தொலைக்காட்சியில் நீதியின் குரல் நிகழ்ச்சியில் தமுமுக தலைவர் குறைகூறியுள்ளார். முஸ்லிம்களின் ஆதரவாளர் தானே வீரமணி. அவர் மீது ஏன் இந்த கோபம்?
வேலுமனி, சென்னை – 10

கீ.வீரமணி
பதில் : முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஒரு கேள்விக்கு திராவிட கழகத் தலைவர் தோழர் கீ.வீரமணி அவர்கள் விடுதலை நாளிதழில் பதில் அளிக்கும் போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக முஸ்லிம்கள் தங்கள் நண்பர்கள் யார் பகைவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென எழுதியுள்ளார். நாமும் அதனை தான் சொல்கிறோம். வீரமணி மாறிவிட்டார். அவரது மேற்பார்வையில் தயாரானது பெரியார் படம். பெரியாரும் திராவிட கழகமும் தொடக்க காலத்தில் தமிழகத்தில் வேரூன்றுவதற்கு முஸ்லிம்கள் பெரிதும் காரணமாக இருந்தார்கள். ஆனால் இந்த பங்களிப்பு வீரமணி மேற்பார்வையில் வெளிவந்துள்ள பெரியார் படத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதே போல் பெரியாரின் பல உரைகள் அந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.
ஆனால் இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என்ற தலைப்பில் சீலையம்பட்டியில் செட்யூல்ட் இன மக்கள் இஸ்லாத்தைத் தழுவியது குறித்து திருச்சியில் ஆயிரக்கணக்கான ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் பெரியார் ஆற்றிய உரை படத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரது நண்பராக மட்டுமில்லாமல் தமிழக அரசியல் வானில் ஒரு இமயமாக வாழ்ந்தவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப். நாடாளுமன்றத்தில் தமிழுக்காக குரல் கொடுத்தவர். பெரியார் தனது சம காலத்தில் வாழ்ந்த பல தலைவர்கள் நடிகர்களை சந்தித்ததையெல்லாம் கவனமாக படத்தில் பதிவுச் செய்ய வைத்துள்ள வீரமணி காயிதே மில்லத்துடன் பெரியார் வைத்திருந்த நட்பை பதிவுச் செய்யாமல் இருட்டடிப்பு செய்துள்ளார்.
பெரியார் படம் தயாரிக்கப்பட்ட காலகட்டத்தில் தமுமுக சார்பாக கீ.வீரமணி அவர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதப்பட்டும் அவர் அதை பொருட்படுத்த வில்லை. முஸ்லிம்களின் தலைவர் காயிதே மில்லத்திற்கு பெரியார் படத்தில் இடம் இல்லை. ஆனால் பிராமணர்களின் தலைவர் ராஜாஜி மிக தாராளமாக படத்தில் இடம் பெற்றுள்ளார். முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தொடர்பாக திரு.கீ.வீரமணி வைத்துள்ள வாதங்கள் சொத்தையானவை. அவர் முதல்வருக்கு இடஒதுக்கீடு குறித்து தவறான சட்ட விளக்கத்தை அளித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. முஸ்லிம்களுக்கு யார் நண்பர்கள், யார் நண்பர்கள் போல் வேடம் தரிப்பவர்கள் என்பது நன்றாக தெரியும்.
நன்றி : மக்கள் உரிமை

0 Comments:
Post a Comment
<< Home