முஸ்லிம்களுக்கு விரைவில் தனி இடஒதுக்கீடு
முஸ்லிம்களுக்கு விரைவில் தனி இடஒதுக்கீடு அளிக்க தமிழக முதல்வர் முடிவு!
தமுமுக பொதுக்குழு தீர்மானத்தின் எதிரொலி!!
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகித தனி இடஒதுக்கீட்டை விரைவில் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் தேர்தலில் வாக்களித்தது போல் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இல்லையெனில் இடஒதுக்கீடு பெறும்வரை தொடர்ச்சியான தடையை மீறும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சியின் நீதியின் குரல் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் சி.ஆர்.பாஸ்கரன் தேர்தலில் வாக்களிக்கப்பட்ட இடஒதுக்கீடு வழங்க தாமதமாவதற்கு என்ன காரணம் என்ற நிகழ்ச்சியில் பங்குகொண்ட தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடம் கேட்க,
''இந்தப் பிரச்சனையில் தமிழக அரசிடம் மனஉறுதி இல்லை. ஆனால் எங்களை இளிச்சவாயர்கள் என்று அரசு நினைத்தால் அவர்கள் ஏமாந்து போவார்கள்'' என்று எச்சரித்துவிட்டு ''பாபநாசம் பொதுக் குழு தீர்மானத்தை உறுதியுடன் நடைமுறைப்படுத்தப் போகிறோம்'' என்றும் கூறினார்.
குமுதம் ரிப்போர்ட்டர் இதழிலும் தமுமுக தலைவர் இதனை உறுதியாக எடுத்துரைத்தார். முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு பெறுவதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு தமுமுக தயார் என்பதை இந்த நிகழ்வுகள் அரசுக்கு உணர்த்தின.
இதன் விளைவாக கடந்த ஞாயிறு அன்று தமிழக முதல்வர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் சட்ட அமைச்சர் துரைமுருகன், அரசு தலைமை வழக்குறைஞர் விடுதலை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம், பிற்படுத்தப்பட்டோர் துறைச் செயலளார் வாசுதேவன், சட்டத்துறைச் செயலாளர் தீனதயாளன், உள்துறைச் செயலாளர் மாலதி ஆகியோர் பங்குகொண்டனர். இக்கூட்டத்தில் மேலும் தாமதப்படுத்தாமல் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணையைத் தயாரிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டதாகத் தெரிய வருகின்றது.
0 Comments:
Post a Comment
<< Home