நெல்லையில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி:
காவல் துறையினர் பொய் வழக்கு போடுவதாகக் கூறி தமுமுகவினர் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசியில் நடைபெற்ற தொடர் கொலை சம்பவம் தொடர்பாக அப்பாவிகள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாகக் கூறி, அதைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை தடை விதித்தது. இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமுமுக அறிவித்தது. இதைத் தொடர்ந்து காவல்துறை அனுமதி அளித்தது.
இந் நிலையில் நெல்லை டவுன் வாகையடி முனையில் தமுமுக மாநில துணை பொதுச் செயலாளர் ரிபாய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தென்காசி, பேட்டை, மேலப்பாளையம் ஆகியப் பகுதிகளில் இருந்து இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் அதிக அளவில் வந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தென்காசி டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிந்த பின் அதே இடத்தில் பொதுக்கூட்டமும் நடந்தது.
அதில் பேசிய வக்பு வாரியத் தலைவரும் தமுமுக பொதுச் செயலாளருமான ஹைதர் அலி, மரியாதைக்குரிய முத்துராமலிங்க தேவர் அய்யா அவர்கள் இஸ்லாமிய தாயிடம் தான் பால் குடித்து வளர்ந்தார். ஒரு தாய்ப் பிள்ளையாக இருந்த இரு சமுதாயங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
கடந்த 2000த்தில் பாளை கிரசன்ட் நகர் பள்ளிவாசலில் நடந்த கொலை வழக்கில் கொலையுண்டவரின் மகன் மீதே வழக்கு போட்டனர். அதே போல் தென்காசியிலும் அப்பாவிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். அப்போது பதவியில் இருந்த உயர் போலீஸ் அதிகாரியே இப்போதும் பதவியில் இருக்கிறார்.
மக்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் தடியடிக்கும், குண்டடிக்கும் பயப்பட மாட்டோம். சமூகத்தில் அமைதியை ஏற்படுத்தாத காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யாவிட்டால் எனது தலைமையில் தென்காசியில் போராட்டம் நடக்கும். இதற்காக நான் வக்பு வாரிய பதவியை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன். எங்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
நன்றி: தேட்ஸ்தமிழ் டாட் காம்
0 Comments:
Post a Comment
<< Home