பயற்சிக்காலம்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
தமிழக முஸ்லிம்களுக்கு இந்த வருடத்திய ரமளான் மாதம் மிக மகிழ்ச்சிகரமான நிகழ்வைக் கொண்டு துவங்கியுள்ளது. 1952ல் முஸ்லிம் சமுதாயம் இழந்து விட்ட இடஒதுக்கீடு உரிமையை 55 வருடங்கள் கழித்து திரும்பப் பெற்றுள்ளார்கள். அந்த இடஒதுக்கீடு உரிமை இந்த ரமளான் மாதத்தின் துவக்கத்தில் கிடைத்த மகிழ்ச்சியை தமிழக முஸ்லிம்கள் அடைந்துள்ளார்கள்.
ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட வேலையை பிழையின்றி செய்து முடிப்பதற்கு ட்ரைனிங் எனும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது தான் தவறுகள் குறைந்து அந்த குறிப்பிட்ட வேலை திருப்திகரமாக செய்து முடிக்கப்படும்.
டைப்பிங் என்னும் தட்டச்சு பணிக்கு செல்லக்கூடியவர்கள் அதற்குரிய பயற்சிக் கூடத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். இல்லையேல் குறிப்பிட்ட நேரத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து முடிக்க முடியாமல் டைப்பிஸ்ட்டின் வாழ்க்கையே நரக வாழ்க்கையாக ஆகிவிடும்.
சரியான முறையில் பயிற்சி எடுத்துக் கொண்டு தட்டச்சு செய்பவர் இமை இமைக்கும் நேரத்தில் பல வார்த்தைகளை தட்டச்சு செய்து விடுவார். கண்களுக்கும் மூளைக்கும் கைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு முறையாக சீராக ஆக்கப்பட்டு வேலை துரிதமாக முடிக்கப்படும்.
இதுபோன்றே, முறையாக டிரைவிங் எனும் ஓட்டுனர் பயிற்சி பெறுபவரும் விபத்துக்களை தவிர்த்துக் கொண்டு பயணிக்க இயலும். ஆபத்து நெருங்கும் போது அல்லது குறுக்கே மனிதர்கள் வந்து விடும் போது மூளை யோசிக்கும் முன்பு பிரேக் போட்டு உயிரை காப்பாற்றுவார்.
இது எவ்வாறு நடக்கிறது என்பதை தமிழில் அழகான வார்த்தையால் கூறுவார்கள், அதாவது இது ஒரு அனிச்சை செயலாக நடக்கிறது என்பார்கள்.
ஆம். எதிர்பாராத விதத்தில் தான் அணிந்திருக்கும் வேட்டி அவிந்து விடும் போது கைகள் எவ்வாறு விரைந்து செயல் பட்டு பற்றிப் பிடித்துக் கொள்கிறதோ அது போன்றது தான் பயிற்சி அளிக்கப்படும் எந்த செயலும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கு பயிற்சி அளிக்கும் காலம் தான் ரமளான் மாதம் ஆகும்.
இந்த மாதத்தில் தான் மனிதன் தவறு அல்லது பாவம் செய்யாமல் தவிர்ந்து கொள்வதற்கும் நன்மையை செய்வதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது, அதன் மூலம் இறையச்சம் உடையோர் ஆகலாம்' (அல்குர்ஆன் 2:183)
இங்கே நோன்பு எனும் பயிற்சி உங்களுக்குள் இறையச்சத்தை உண்டாக்குகிறது என்பது மேற்கண்ட இறை வசனத்திலிருந்து கிடைக்கும் விளக்கமாகும்.
மற்ற மாதத்தின் பகல் நேரத்தில் உண்ணவும் பருகவும் உடலுறவு கொள்ளவும் அனுமதிக்கப்பட்டவை, ரமளான் மாதத்தில் அனுமதிக்கப்பட வில்லை, அதையும் கூட இறைவனுக்காக விட்டு விடுகிறோம் எனும் போது இறைவனால் அனுமதிக்கப்படாத எந்த விஷயத்தையும் நம்மால் விட்டுவிட இயலும். இந்த பயிற்சி ரமளான் மாதம் முழுக்க அளிக்கப்படுகிறது.
ரமளான் மாதத்தில் தான தருமங்கள் செய்யுமாறு வலியுறுத்தப்படுகின்றன, தனது உழைப்பை இறை திருப்திக்காக தான தருமம் செய்யும் போது பாவத்தை சம்பாதிக்க எவரேனும் விரும்புவாரா?
இந்த பயிற்சி சரிவர எடுத்துக் கொள்ளப்பட்டால் அவர் செல்லும் இடம் சொர்க்கத்தை தவிர வேறு இல்லை.
இந்த ரமளான் மாதத்தை பாழாக்கி விடாமல் இறை நோக்கத்தை புரிந்து நடந்து இம்மை மறுமை வெற்றியை பெறுவோமாக. ஆமீன்.
அன்புடன்
இப்னு ஃபாத்திமா 20.09.2007
0 Comments:
Post a Comment
<< Home