Wednesday, October 31, 2007

தமிழக வக்ஃபு வாரியம் சிறப்பாக செயல்படுகிறது

தமிழக வக்ஃபு வாரியம் சிறப்பாக செயல்படுகிறது!
பாராளுமன்ற இணைக்குழு பாராட்டு!!
இப்பி பக்கீர்


நாடு முழுவதும் வக்ஃப் வாரியங் களின் நிலைகள் குறித்து ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் அடங்கிய நாடாளுமன்ற இணைக்குழு (Joint Parliamentary Committee) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அந்தந்த மாநிலங்களில் உள்ள வக்ஃபுகளின் நிலைகளை ஆராய்ந்து, பொதுமக்களின், சமூக ஆர்வலர்களின் கருத்துகளையும் கேட்டு இறுதியாக அவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்.

தமிழகத்திற்கு வந்த இந்த நாடாளுமன்றக் குழு அக்டோபர் 24 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்தறியும் கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஏராளமான பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர். வக்ஃபு வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி அவர்களும் உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துக்களை கவனமாக கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர்.

வக்ஃபு வாரியத்தின் சொத்துக்களை அரசுத் துறைகளும் அரசு சார்ந்த நிறுவனங்கள், தனி நபர்களும் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக பலர் கவலை யோடு தெரிவித்தனர். வக்ஃபு வாரியத்தின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு சொத்துக்கள் உடனடியாக மீட்பதற்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். சென்னையில் மாணவ, மாணவியர் தங்குவதற்கான விடுதிகள் அமைக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. மாற்றுமத சகோதரர்களும் கலந்து கொண்டு வக்ஃபு வாரிய பிரச்சனைகளை எடுத்துக் கூறியது முத்தாய்ப்பாக இருந்தது.

கூட்டத்தில் பேசிய ஜமாஅத் தலைவர்கள், சமூக ஆர்வலர்களில் பலர் தமிழக வக்ஃபு வாரிய தலைவர் செ. ஹைதர் அலியின் வேகமான செயல்பாட் டையும், வக்ஃபு வாரியம் தற்போது ஆற்றி வரும் ஆக்கிரமிப்பு மீட்புப் பணிகள், கல்வி விருது வழங்கும் திட்டம். உலமாக்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவி திட்டம் ஆகியவற்றை சிலாகித்து பேசினார்கள்.

இறுதியாக பேசிய நாடாளுமன்ற இணைக்குழுவின் தலைவர் எஸ்.எம். லால்ஜன் பாஷா எம்.பி., அவர்கள் நாடு முழுவதும் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான 6 லட்சம் சொத்துக்கள் உள்ளன. இச்சொத்துகளின் மொத்த மதிப்பு 10 லட்சம் கோடி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் தனியார் மட்டுமின்றி முஸ்லிம்களே பல சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளனர்.


ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை மீட்கவும் வக்ஃபு சட்டங்களை வலுப்படுத்தவும், வக்ஃபு வாரியத்தை மேம்படுத்துவதற்காகத்தான் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு வக்ஃபு சட்டப்படி வக்ஃபு சொத்துக்களை 3 வருட குத்தகைக்கு மட்டுமே விட முடியும் என்று தெரிவித்த அவர் இறுதியாக டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் எங்கள் அறிக்கையை தாக்கல் செய்வோம் என்றார்.

இக்கூட்டத்தின் போது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஜே.எம். ஹாரூன், பேரா. காதர் மைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் 26.10.2007 அன்று பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் திரிபாதி, உள்துறை செயலாளர் மாலதி ஐ.ஏ.எஸ்., திருவள்ளூர், காஞ்சி மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர்கள், தமிழக காவல் துறை இயக்குநர், மாநகர காவல்துறை ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் துறை செயலாளர் அடங்கிய கலந்தாய்வுக் கூட்டத்திலும் பாராளுமன்ற இணைக் குழுவினர் கலந்து கொண்டனர்.


இந்தியாவில் உள்ள வக்ஃபு வாரியங்களில் மிகச்சிறந்த முறையில் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் செயல் படுவதாக நாடாளுமன்ற இணைக்குழு கூறியது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற மாநில வக்ஃபு வாரியங்களை செயல்பட வலியுறுத்துவோம் என்றும் நாடாளுமன்ற இணைக்குழு தெரிவித்தது.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Labels: , ,