Saturday, November 03, 2007

தமுமுகவின் சுனாமி கணக்கு விபரம்

சுனாமி கணக்குகளை மக்கள் முன்னிலையில் சமர்ப்பித்தது த.மு.மு.க

அரிய சேவைகளின் மூலம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் அமைப்புகளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

சுனாமி பேரழிவின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்ற தமுமுக சமீபகாலமாக தமிழகத்தில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழக பொதுநல வரலாற்றில் யாரும் செய்யாத முன்மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறது தமுமுக! சுனாமி பேரலையின் போது நிவாரண உதவிகளுக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களும், அமைப்புகளும் பொதுமக்களிடம் சுனாமி நிவாரண நிதியைத் திரட்டினார்கள். அதுபோல் தமுமுகவும் ரூ.68,36,873.07 நிதியாக திரட்டியது.

இந்நிலையில் திரட்டிய நிதியிலிருந்து இதுவரை எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்பதையும், மீதியுள்ள தொகையை என்ன செய்யப் போகிறோம் என்பதையும் இன்று 10.12.2005 (சனிக்கிழமை) சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவில் உள்ள எஸ்.வி.ஆர். (மிலன்) திருமண மண்டபத்தில் திரளாகக் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையை சமர்பித்தது.

தாங்கள் திரட்டிய நிவாரண நிதி குறித்த விவரங்களையும் வருமானவரித் துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கைகளையும் பொதுமக்களைத் திரட்டி அந்நிகழ்வில் தாக்கல் செய்த தமுமுகவின் நடவடிக்கை தமிழக பொதுநல வரலாற்றில் நல்ல முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் பத்திரிகையாளர் சோலை அவர்கள், பஞ்சமீட்பு இயக்கத்தின் தலைவரும் ஒய்வுப் பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான கருப்பன் ஐ.ஏ.எஸ் அவர்கள், காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகான் அவர்கள், சிறுபான்மை கூட்டமைப்பின் செயலாளர் பாதர் சேவியர் இவர்களுடன் வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான பொதுமக்களும் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அனைத்து வரவு-செலவு கணக்குகளையும் கவனித்துக் கொண்டிருந்தனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் உளவுத்துறையினரும் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர்.

வங்கி கணக்குகள், மீதமுள்ள வங்கி இருப்புகள் உள்பட பல ஆவணங்களை டிஜிட்டல் திரையின் வழியாக ஆதாரங்களுடன் பொதுமக்களுக்கு தமுமுக கணக்குகளை சமர்ப்பித்தது.

இடையிடையே பொதுமக்கள் எழுப்பிய ஐயங்களுக்கு அவர்கள் உரிய முறையில் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்து முழு விவரங்களும் தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tmmk.in தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தமுமுக அறிவித்துள்ளது.

சுனாமி நிதி விவர பட்டியல்
வசூலான மொத்த தொகை 68,36,837.07
இதுவரை நிவாரண உதவிகளுக்கு
செலவிட்ட தொகை 33,25,435.25
மீதமுள்ள தொகை 35,11,437.82

இதில் மீதமுள்ள தொகையில் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் அறிவுரைக்கேற்ப நாகூர் அருகே சுமார் 25 லட்ச ரூபாய் செலவில் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் ''பேரிடர் பாதுகாப்பு மையம்'' கட்டப்பட உள்ளதாகவும், மற்றுமொரு ஐந்து லட்சத்தில் காரைக்காலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர பயன்தரும் கட்டமைப்பை மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் தமுமுக விரைவில் பயன்படுத்தும். மீதமுள்ள தொகையில் சுனாமியில் பாதிக்கப்பட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மக்களின் மனுக்களை பரிசீலித்து தேவையான உதவிகள் செய்யப் போவதாகவும் தமுமுக அறிவித்துள்ளது.

மேலும், 2004 மற்றும் 2005 ஆண்டுகளில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு தமுமுக சார்பில் வசூல் செய்து வினியோகிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் (ஃபித்ரா) குறித்த நிதிநிலை அறிக்கையும் அக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

2004ஆம் வருடத்தில் 20,73,940 ரூபாய்க்கும், 2005ஆம் வருடத்தில் 27,69,762 ரூபாய்க்கும் ஃபித்ரா உதவிகள் வழங்கப்பட்டதற்கான விவரங்களையும் மக்கள் மன்றத்தில் சமர்பித்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பார்வையாளர்களாக பங்குகொண்ட தாவூத் மியாகான் மற்றும் கருப்பன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் தமுமுகவின் முன்மாதிரியை பின்பற்றி பொதுமக்களிடம் மற்ற அமைப்புகளும் கணக்குகளை சமர்பிக்க வேண்டும் என்று கூறினர்.

இந்நிகழ்ச்சிக்கு தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையேற்றார். பொதுச்செயலாளர் செ. ஹைதர் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக மாநிலச் செயலாளர் பி. அப்துர் ரஹீம் திருக்குர்ஆன் விரிவுரையுடன் கூடிய தொடக்கவுரையை நிகழ்த்தினார். மாநிலப் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் கணக்குகளை வாசிக்க, கணக்காளர் ஹாரூண் ரஷீத் அவற்றுக்கு உரிய ஆதாரத் தகவல்களை அளித்தார். மாநிலச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

அல்லாஹ்வின் மீது ஆணையாக...

தமுமுகவின் கணக்காளராக 1999 முதல் பணியாற்றி வருபவர் சகோதரர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத். எம்.காம். பட்டதாரியான இவர் கணிணியில் கணக்குகளை பராமரித்து வருகிறார். கணக்காளர் சகோ. ஹாரூண் அவர்கள் கணக்குகளை வாசிக்க முற்படுவதற்கு முன்பு ''அல்லாஹ்வின் மீது ஆணையாக... இதில் எந்த மோசடியும் நடக்கவில்லை'' என்று கூறியதும் பொதுமக்களோடு நின்றிருந்த தமுமுகலிவினர் கண்கலங்கி விட்டனர்.

உளவுத்துறையும் பார்வையாளர்களாக...!

மிலன் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் கூடியபோது, நமது கணக்குகளை அறிய பத்திரிகையாளர்களோடு மத்திய மாநில அரசுகளின் உளவுப் பிரிவினரும் வந்திருந்தனர். நாம் பகிரங்கமாக கணக்கு காண்பிப்பதால் அவர்களும் அமர இடவசதி செய்து கொடுக்கப்பட்டது. அவர்களிடம் அனைத்து கணக்குகளின் நகல்களையும் தமுமுக தலைமையகம் ஒப்படைத்தது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தமுமுக மக்கள் மன்றத்தில் கணக்குகளை சமர்ப்பித்தது பற்றி பிரபலங்கள் பேசுகிறார்கள்...

திரு. சோலை (மூத்த பத்திரிகையாளர்)

தமுமுக - இஸ்லாமிய இளைஞர்களை பெருமளவில் பெற்றிருக்கின்ற இயக்கம். பலர் இதன் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்திருக்கிறார்கள். அது நடக்கவில்லை என்றதும் நிதி விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்கள்.

அந்த களங்கத்தைத் துடைப்பதற்காக பொது இடத்தில் கூடி, மக்கள் முன்பாக அரசு அதிகாரிகளையும், பத்திரிக்கையாளர்களையும் அமர வைத்து கணக்குகளை காட்டியிருப்பது பெரிய விஷயம். இதோடு இதை முடிச்சிடுங்க. இனி சமுதாய நலனிலும், அரசியல் விவகாரங்களிலும் கவனம் செலுத்துங்க. தமுமுகவை உடைப்பது வகுப்புவாத சக்திகளோட திட்டம். அதுக்கு யாரும் துணைபோய் விடக்கூடாது.

திரு.கருப்பன் ஐ.ஏ.எஸ். (சிறப்பு பார்வையாளர்)

1970களில் புகழ்பெற்ற 'மஸ்டர் ரோல்' ஊழலை சென்னை மாநகராட்சியில் கண்டுபிடித்தவர் திரு.கருப்பன் ஐ.ஏ.எஸ். அவர்கள். நிகழ்ச்சியில் சிறப்புப் பார்வையாளராக பங்கேற்ற அவர் கூறுகையில், ''நான் காலையிலிருந்தே முழு நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறேன். உங்கள் மடியில் கனமில்லை, எனவே உங்களுக்கு பயமில்லை. இதுபோல் யாரும் துல்லியமாக கணக்குகளை காட்டுவதில்லை. அப்படி செய்தால் நமக்கு மகிழ்ச்சி''.

ஜனாப். தாவூத் மியாகான் (சிறப்பு பார்வையாளர்)

காயிதே மில்லத் கல்லூரி தாளாளரும், காயிதே மில்லத் அவர்களின் பேரனுமாகிய தாவூத் மியாகான் அவர்கள் கூறுகையில், ''ஆரம்பத்தில் இதற்கு ஏன் ஒத்துக் கொண்டீர்கள் என வருத்தப்பட்டேன். பின்னர் நியாயம் உள்ளவர்களிடம் இருக்க வேண்டிய ஆவேசம் என்பதால், அதை உணர்ந்து கொண்டேன். மிக நுணுக்கமாக வரவு செலவு கணக்குகளை வெளியிட்டீர்கள். அனைவரையும் அழைத்து கணக்குகளை சமர்பித்தது நான் அறிந்தவரை தமிழக வரலாற்றில் எந்த அமைப்பும் செயல்படுத்தியதில்லை. நீங்கள் வரலாற்றை படைத்திருக்கிறீர்கள். அனைத்து அமைப்புகளும் இதே வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். இதில் நடுவர் குழுவில் இடம்பெற்ற அமைப்புகளும் இதுபோல் கணக்குகளைக் காட்ட வேண்டும். இதுபோல் சிறப்புப் பார்வையாளர்களாக வருகை தந்த பலர் வித்தியாசமான இந்நிகழ்வை சிலாகித்து பாராட்டினர்.

மவ்லவி ஷம்சுத்தீன் காஸிமி (சென்னை மக்கா பள்ளி இமாம்)

கடினமான தன் எழுத்துப் பணிகளுக்கு நடுவே தமுமுக மக்கள் மன்றத்தில் கணக்குகளை ஒப்படைத்தது குறித்து கூறுகையில், ''நான் அந்த நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. ஆயினும் தமுமுக பொதுமக்களுக்கு மத்தியில் கணக்குகளை சமர்பித்தது வரவேற்கத்தக்கது. எல்லா அமைப்புகளும் வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்று தங்களுக்கு நிதி வழங்கியவர்களிடம் கணக்குகள் சமர்ப்பிப்பதுதான் நல்ல நடைமுறையாக இருக்கும்.

ஷைக். இக்பால் மதனீ (இமாம், ஷார்ஜா தமிழ் பள்ளி - யூ.ஏ.இ)

எனக்கு அழைப்பு தந்திருந்தார்கள். நான் ஹதீஸ் தொகுப்பு பணியில் ஈடுபட்டதால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போய்விட்டது. மற்றபடி நிகழ்ச்சிகளைக் கேட்டறிந்தேன். பழிகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். மக்களிடம் கணக்குகளை காட்டிவிட்டீர்கள். அதனால் நல்ல முன்மாதிரியை ஏற்படுத்தி விட்டீர்கள்.

கணக்கு காட்டுவதில் முந்திக் கொண்டது தமுமுக!

அவதூறு கிளப்பும் வரை ஏன் காத்திருந்தீர்கள் முன்பே சுனாமி கணக்குகளை வெளியிட்டிருக்க வேண்டியதுதானே என சிலர் கேட்கலாம்.

சுனாமி நிதி வசூல் செய்த எந்த அமைப்பும் நமக்குத் தெரிந்து 13.12.2005 வரை முழுமையாக கணக்கை வெளியிடவில்லை.

காரணம், வசூல் செய்த நிதியிலிருந்து ஒவ்வொரு அமைப்புகளும் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் பணிகள் நிறைவடைந்தால்தான் கணக்குகளை வெளியிட முடியும். அனைத்து அரசு சாரா அமைப்புகளின் நிலையும் இதுதான்!

நாம் வசூலித்த நிதியிலிருந்து இதுவரை ஏறக்குறைய 50 சதவீதத்திற்கு நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறோம். ஆனால், 10 சதவீதம் கூட செலவழிக்கவில்லை என்று தனது பிரசுரத்தில் பீ.ஜே. பொய் சொல்லியுள்ளார்.

நம் மீது அவதூறுகளைக் கிளப்பியவர்கள் 13.12.2005 வரை எந்தக் கணக்குகளையும் வெளியிடவில்லை என்பதையும் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

பிரசிடென்ட் ஹோட்டலில் நிகழ்ச்சியா?

நடுவர்(?) குழு 9ஆம் தேதி இரவு இருதரப்புக்கும் கொடுத்த கடிதத்தில், டிசம்பர் 10 அன்று அவர்கள் முடிவு செய்திருந்த பிரசிடென்ட் ஹோட்டலில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ரத்து என அறிவித்துவிட்டனர். அவர்களின் நடுவர் குழுவே நிகழ்ச்சியை ரத்து செய்ததாகக் கூறிவிட்ட நிலையில் எதிர்தரப்பினர் அதே தேதியில் அங்கு காத்திருந்ததாக சொல்லி வருகின்றனர். இது என்ன நாடகம்?

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

(குறிப்பு: தமுமுகவின் மீது களங்கம் கற்பிப்பதற்காக எடுத்துள்ள ஆயுதங்களில் ஒன்று 'சுனாமி நிதி கணக்கு'. மக்கள் மறந்திருப்பார்கள் என்ற தினாவட்டில் மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தப்படுவதை தடுக்க யுனிகோட் ஃபார்மேட்டில் முத்துப்பேட்டை வலைப்பூ இதை பதிவு செய்கிறது.)

0 Comments:

Post a Comment

<< Home