Tuesday, November 20, 2007

புதுச்சேரி முஸ்லிம்களுக்கு தனி இயக்குனரகம்

முஸ்லிம்களுக்கு தனி இயக்குனரகம் முதல்வருக்கு தமுமுக கோரிக்கை


காரைக்கால்: முஸ்லிம்களுக்கு தனி அமைச்சகம் மற்றும் இயக்குனரகம் உருவாக்க வேண்டும் என தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து தமுமுக காரைக்கால் லியாக்கத் அலி, முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் எதிர் கட்சி தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில், 'ஆந்திரா, கேரள அரசுகள் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தத்தம் மாநில மக்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளன. அதுபோல் புதுச்சேரி மாநிலத்திலிருந்து வளைகுடா நாடுகளில் வேலை பார்ப்பவர்களுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்.


சிறுபான்மை மக்களின் நலனுக்காக பிரதமரின் 15 அம்ச நலத்திட்டத்தின் பரிந்துரைகள் அமல்படுத்த மேற்கு வங்க அரசு, மாநில வருவாயில் 15 சதவிகிதத்தை ஒதுக்கியுள்ளது. இதே முறையை பின்பற்றி புதுச்சேரி வாழ் சிறுபான்மை மக்களுக்காக தனி நிதியையும் ஒதுக்கிட வேண்டும்.


புதுச்சேரியில் சிறுபான்மை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஒட்டு மொத்தமாக செலவிடப்படுகிறது. இதனால் சிறுபான்மை மக்களின் நலனுக்கு மிகக் குறைந்த நிதியே செலவாகிறது. ஆகவே தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் சிறுபான்மையினருக்கு தனி இயக்குனரகம் உருவாக்க வேண்டும்.


தென்னிந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்காக தனி இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் மட்டும் இடஒதுக்கீடு இல்லாதது முஸ்லிம்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. ஆகவே முதல்வர் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி மிக விரைவில் தனி இடஒதுக்கீடு சட்டத்தை புதுச்சேரியிலும் கொண்டு வர வேண்டும்' இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


நன்றி: தினமலர் 20.11.2007

0 Comments:

Post a Comment

<< Home