கருணை இல்லம் போல் பாடுபடும் தமுமுக
கருணை இல்லம் போல் பாடுபடும் தமுமுகவிற்கு 2 ஆம்புலன்ஸ்கள் சொந்த செலவில் வழங்குவேன்: கலைஞர்
சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு கொடுத்ததற்காக நடைபெறும் நன்றி அறிவிப்பு மாநாட்டின் தலைவர் ஜனாப் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களே, வரவேற்புரையாற்றிய ஜனாப் ஹைதர் அலி அவர்களே, திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றிய ரிஃபாயி அவர்களே, விஞ்ஞானி அப்துல் ஜலீல் அவர்களே, நன்றியுரையாற்ற இருக்கும் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் அவர்களே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நண்பர் நல்லக்கண்ணு அவர்களே, பேராயர் சேவியர் அருள்ராசு அவர்களே, எஸ்றா சற்குணம், பீட்டர் பெர்னாண்டோ அவர்களே, தொகுப்புரையாற்றும் தமிமுன் அன்சாரி அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே...
நன்றி கூறுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்
அரங்கத்தின் உள்ளும் புறமும் பல்லாயிரக்கணக்கிலே குழுமியிருக்கிறீர்கள் என்ற நிலையை நானும் அறிவேன். இது நம்முடைய உள்ளமும் புறமும் நிரம்பியிருக்கின்றது என்பதற்கு அடையாளம். உள்ளும் புறமும் நிரம்பியிருந்தால் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உள்ளே காலியாக இருந்து, வெளியேயும் அதே நிலை என்றால் நமக்கு மக்கள் தருகின்ற ஆதரவு எவ்வளவு என்ற கணக்கை சுலபத்திலே எடுத்துவிட முடியும். ஆனால் இப்போதெல்லாம் நாட்டிலே நன்றி கூறுகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக, எடுத்துக்காட்டாக இந்த விழா அமைந்திருக்கின்றது.
தமிழகத்தில் நன்றி கூறுகின்றவர்களா? அடடே, ஆச்சர்யமாக இருக்கிறதே என்று நாம் நினைத்த காலம் உண்டு. இப்போது நன்றி கூறுகின்றவர்கள் இவ்வளவு பேரா? ஆயிரக்கணக்கிலா, இலட்சக்கணக்கிலா? என்று நாம் மகிழ்ச்சி யடையக் கூடிய நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது.
இது எண்ண கணிதம்
ஒன்றைக் கவனித்தால் வேடிக்கையாக அல்ல, ஏதோ ஒரு குறிப்பை உணர்த்துவதாக அமைந்திருக்கின்றது. இன்று விழா நடைபெறும் நாள் 24ஆம் தேதி சிறுபான்மை சமுதாயத்தாருக்கு, முஸ்லிம் களுக்கும், கிறிஸ்தவ பெருமக்களுக்கும் இடஒதுக்கீடு சம நிலையிலே இருவருக்கும் அளிப்பது என்ற முடிவெடுத்து, அதை முதன்முதலாக அறிவித்தது, கவர்னர் பேரவையிலேயே உரையாற்றிய போது தான் - அப்படி அவர் உரையாற்றியது 24-05-2006. கவர்னர் உரையில் நாங்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி இந்த அரசு விரைவில் சிறுபான்மை சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டைச் செய்யுமென்ற செய்தியை அறிவிப்பாக வெளியிட்டது 24.05.2006. ஆளுநர் உரையிலே அறிவித்ததும் 24, அது நிறைவேறி நன்றி கூறுவதும் 24.
இன்னொரு ஒற்றுமை. நம்முடைய தமுமுக பொதுச் செயலாளர் அவர்கள் வரவேற்புரையாற்றும்போது சொன்னார், 1995ஆம் ஆண்டு தமுமுக உதயமாயிற்று என்று. நாம் இந்த நான்கு எண்களையும் கூட்டிப்பார்த்தால் அதுவும் 24. அவ்வளவு ஏன்? நான் பிறந்த ஆண்டே 1924. நம்மிடையே எவ்வளவு ஒற்றுமை இயல்பாகவே அமைந்திருக்கிறது என்பதை இதை விட அழுத்தந்திருத்தமாக, சிறப்பாக எண் வைத்து ஜாதகம் கணிப்பாளர்களே, எண் இல்லாமலே எண்ணத்தை வைத்து இந்த ஜாதகம் கணிக்கப்பட்டிருக்கின்றது.
ரத்தத்தில் ஊறிய ஒன்று.
இன்று நேற்றல்ல, நெடுங்காலமாக நாம் உறவு கொண்ட இரு சமுதாயத்தினர். மன்னிக்க வேண்டும். இரு சமுதாயம் என்று சொன்னதற்காக - ஒரு சமுதாயத்தினர் தான் - எல்லோருக்கும் சகோதரர்கள் தான் - சிறுபான்மைச் சமுதாயம் முன்னேற வேண்டும், உரிமைகளைப் பெறவேண்டு மென்பதற்காக நீண்டகாலமாக கோரிக்கை வைத்து, குரலெழுப்பி, போராடி இந்த உண்மையை உணர்ந்து உணர்வுகளை மதித்து, நாங்கள் செயல்பட்டு தேர்தல் நேரத்திலே அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோமென்றால் - அது மன்னிக்க வேண்டும் - யாரும் தவறாக கருதிக் கொள்ளக்கூடாது - இது எங்களுடைய ரத்ததோடு ஊறிய ஒன்று.
1920-25ம் ஆண்டுகளில் இந்த மாநிலத்தை ஆண்ட கட்சி, முழுமையான பலத்தோடு ஆண்ட கட்சி என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒருபுறத்திலே வெள்ளைக்காரர்களுடைய ஆதரவோடும், மக்களுடைய வாக்குகளைப் பெற்றும் நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்ற போதே, இப்போது இடஒதுக்கீடு என்று சொல்கிற இந்தத் தத்துவத்திற்கு , இந்தக் கொள்கைகைக்கு அப்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் பயனை சிறுபான்மைச் சமுதாயத்திற்கு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு - பச்சையாகச் சொல்ல வேண்டுமேயானால் மேலார், உயர்ந்தோர், என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனர்களை அன்னியில் உள்ள பார்ப்பனர் அல்லாத சமுதாயத்திற்காக நீதி வழங்கிய ஆட்சிதான் - நீதிக்கட்சியின் ஆட்சி. 1920-25ஆம் ஆண்டுகளில் எப்படி எங்களுக்கு திடீரென்று - கருணாநிதிக்கு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் நினைவு வந்ததென்றால், இது ரத்ததிலே ஊறிய உணர்வு. இன்று நேற்றல்ல - நீங்கள் கூறுகின்ற நன்றி இதற்கெல்லாம் நமக்கு ஆதரவளித்த, மத்தியிலே இருக்கின்ற காங்கிரஸ் கட்சியினுடைய துணையாக, வழிகாட்டுதலாக இருக்கின்ற அம்மையார் சோனியா காந்தி அவர்களுடைய ஆதரவோடு மாத்திரமல்ல - பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுடைய ஆதரவோடு மாத்திரமல்ல, குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால் - நான் அல்ல, என்னுடைய அமைச்சரவையிலே இருக்கின்ற நண்பர்கள் அல்ல எங்களையெல்லாம் இப்படிப்பட்ட கொள்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்து, நீங்கள் சொன்னவுடன் அதைப் புரிந்து கொள்கின்ற சக்தியையும் அளித்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழி இது - எனவே இந்த நன்றியெல்லாம் அவ்வழி செல்ல வேண்டிய நன்றியே தவிர இவ்வழி எனக்குத் தர வேண்டிய நன்றியல்ல. நன்றி கூறியிருக்கிறீர்கள். நான் நன்றிக்கு நன்றி கூறுகிறேன். நன்றி கூறிய உங்களுக்கெல்லாம் நன்றி கூறுகிறேன்.
நலிந்தோருக்கு உதவும் தமுமுக
நம்முடைய வரவேற்புரை ஆற்றிய பொதுச் செயலாளர் (ஹைதர் அலி) குறிப்பிட்டார், நம்முடைய மாநாட்டின் தலைவரிடமும் அதைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தேன். அவர்களும் 'ஆமாம்' என்றார்கள். இந்த தமுமுக இயக்கம் 1995ஆம் ஆண்டிலே தோன்றிய போது அப்போது ஐந்து ஆம்புலன்ஸ் வண்டிகளோடு பணிகளை ஆற்றியது என்றும், இப்போது 31 ஆம்புலன்ஸ் வண்டிகள் என்றும் சொன்னார்கள். ஆக இந்த இயக்கத்தினுடைய பணி, ஆக்க வேலை மக்களுக்குத் தொண்டாற்றுவது - மக்கள் சமுதாயத்திலே நலிந்த பிரிவினருக்கு நன்மைகளைச் செய்வது, அவர்களுடைய உடனடி உதவிகளிலே ஒன்றாக இயலாதவர்களுக்கு, ஆதரவற்ற வர்களுக்கு, அனாதைகளுக்கு உதவுகின்ற இந்தப் பணியையும் சில கருணை இல்லங்களைப் போல, அன்பு இல்லங்களைப் போல, இந்தப் பணிகளையும் இவ்வளவு பெரிய இயக்கம், தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கின்ற தமுமுக என்ற இந்த இயக்கம் ஏற்றுக் கொண்டு அதற்காக மிகக் குறுகிய காலத்திலே ஐந்தாக இருந்த ஆம்புலன்ஸ் வண்டிகளை 31, என்ற அளவிற்கு பெருக்கி யிருக்கின்றது என்பது வரவேற்கத்தக்க, மகிழத்தக்க ஒரு முன்னேற்றமாகும்.
எண்ண சொந்த செலவில்
ஆம்புலன்ஸ் அதிகமாகப் பயன்படுகின்ற அளவிற்கு நோய்நொடிகள், நலிவுகள் வரவேண்டுமென்று நான் விரும்பவில்லை. ஆனால் வந்த நலிவுகளைப் போக்க ஆம்புலன்ஸ் வண்டிகள் தேவை. அப்படிப்பட்ட ஆம்புலன்ஸ் வண்டிகளின் உதவிகளை அளிக்க, சில ஆண்டுகளிலேயே - ஐந்தாக இருந்தது 31 ஆக ஆகியிருக்கின்றது. எனக்கு அவர்கள் நன்றி பாராட்டுகின்ற இந்த விழாவிலே நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய பொறுப்பில் உங்களுடைய 31 ஆம்புலன்ஸ் வண்டிகளோடு இன்னும் இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகளை நீங்கள் வாங்கிக் கொள்ள அதற்குரிய நிதி எவ்வளவு என்று இந்த அமைப்பின் சார்பில் தலைவரும், பொதுச் செய லாளரும் எனக்கு எடுத்துச் சொன்னால், என் சொந்தப் பொறுப்பிலே நான் இந்தத் தொகையை வழங்கி - இந்த நாள் நம்முடைய நினைவிலே நிற்க வேண்டிய நாள், நலிந்தோருக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள - நமக்கு வழிகாட்டியாக உள்ளவர்களின் பெயரால் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறை வேற்றிய நாள் என்ற வகையிலே இது அமையும் என்ற முறையிலே நான் இதை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் உங்களில் ஒருவன்
நான் சிறப்பு விருந்தினர் என்று இங்கே வாழ்த்துரை வழங்கியவர்கள் எல்லாம் சொன்னார்கள். நான் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன் என்றார்கள். மன்னிக்க வேண்டும், நான் விருந்தினர் அல்ல - விருந்தினர்களாக உள்ளவர்களையெல்லாம் வரவேற்கின்ற உங்களில் ஒருவன். என்னைப் பெருமைப்படுத்துவதாக எண்ணி விருந்தினர் என்று சொல்லி, என்னை வேறுபடுத்த வேண்டாம், நீங்கள் வேறு, நான் வேறல்ல என்ற இந்த தத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடிப்போம்.
நாம் தமிழ்நாட்டிலே இன்று நேற்றல்ல, இங்கே என்னை அறிமுகப்படுத்திப் பேசிய நண்பர் (தமிமுன் அன்சாரி) குறிப்பிட்டதைப் போல தாருல் இஸ்லாம் ஒரு கையிலே, குடியரசு பத்திரிக்கை இன்னொரு கையிலே என்ற அளவிற்கு இளம்பிராயத்திலேயே முஸ்லிம் லீக்கின் பிறைக் கொடியை ஒரு கையிலும், திராவிட இயக்கத்தின் கொடியை ஒரு கையிலுமாக வளர்ந்தவன் நான்.
காப்பாற்றிய லுங்கி
ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பொது வாழ்வுக்கு சொந்தக் காரன். நான் பாண்டிச்சேரியிலே அடிபட்டு, உதைப்பட்டு, உயிர் போய் விட்டது என்று என்னை குண்டர்கள் விட்டு விட்டு சென்ற பிறகு, நான் அங்கிருந்து தப்பித்து பெரியார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது, மீண்டும் யாரும் என்னை அடையாளம் கண்டு தாக்கிவிடக் கூடாது என்பதற்காக நான் கட்டிச் சென்ற ஆடை 'லுங்கி' தான் என்பதையும் - நான் இன்று நேற்றல்ல, இந்த விழாவிற்காக அல்ல, இதை என்னுடைய 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தி லேயே குறிப்பிட்டிருக்கிறேன் என்பதைச் சொல்லி - நாம் ஆடையில், எண்ணத்தில், உணர்வுகளில், ஒன்றுபட்டு நிற்கின்றோம். அப்படிப்பட்ட சமுதாய ஒற்றுமையைப் பேணிக்காக்கின்ற தலைவர்களால் வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஒரு பக்கத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா. இன்னொரு பக்கத்திலே கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இவர்கள் எல்லாம் இணைந்து நம்மை வழி நடத்திச் சென்றிருக் கின்றார்கள். தொடர்ந்து இந்த வழியிலே சகோதரர்களாக செல்வோம் என்று குறிப்பிட்டு, நான் ஒரு கூட்டத்தில் சொன்னதைப் போல, 'இந்து முஸ்லிம் சீக் ஈசாயி. ஆபஸ் மே ஹை பாயி பாயி' என்ற அந்தத் தத்துவத்தை இந்தியாவிலே கடைப்பிடிப்போம், அதுதான் இந்த விழாவின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டு, நீங்கள் இதயம் மலர்ந்து உங்களுடைய மனம் கனிந்து நன்றியை அரும்புகளாக, மலர்களாக, ஆக்கி என் தலையிலே சொரிந்தமைக்காக என்னுடைய வணக்கத்தை, நன்றியை, மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு - இவைகள் எல்லாம் தொடர்ந்து நான் உங்களுக்கு பணியாற்றுவதற்காக தரப்பட்ட முன்பணம் என்பதைச் சுட்டிக்காட்டி இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கின்றேன்.
- இவ்வாறு முதல்வர் கலைஞர் உரையாற்றினார்.
(நன்றி: முரசொலி 25.11.2007)
0 Comments:
Post a Comment
<< Home