உச்சநீதிமன்றமா? உச்சி குடுமி மன்றமா?
ஜி.அத்தேஷ்
காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றிவிடும், வடுக்கள் அதன் நினைவுகளை அறிவுறுத்திக் கொண்டிருக்கும். ஒரு சமுதாயத்தின் தனித்தனி இதயங்களை உடைத்து நொறுக்க முடியாதவர்கள், இதயங்களில் வாழும் புனிதங்களை அவமதித்து மனங்களைப் புண்படுத்தி விடுகின்றனர். அப்படித்தான் நிகழ்ந்தது அந்த தேசிய சோகம்.
14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்பட்ட நிகழ்வு. 1992 டிசம்பர் 6ம் நாள் அஃது ஓர் ஞாயிற்றுக்கிழமை. மதவெறி பிடித்த ஒரு கடப்பாரை கூட்டம், இந்நாட்டின் பெரும்பான்மை சமூகம் மதிக்கும் இந்து மதத்தின் பெயரால், ராமனின் பெயரால், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது. ராமரின் பக்தனை வெறியனாக்கிய ஜனசங்கம், நீறுபூத்த நெருப்பாக, இந்திய ஜனநாயகத்தையும், மத சகிப்புத்தன்மையையும் வேர் பிடித்து வளர்ந்திருக்கிறது. ஆதிக்க சக்திகளால் எழுதப்படும் ஊடகங்களும், வாசிக்கப்படும் செய்திகளும் இந்துத்துவ வகுப்பு வெறியை கொழுந்து விட்டு எரியச் செய்தன. இவற்றின் அறுவடையாக, சர்வதேச அளவில் முன்னுதாரணமாக நிகழ்திருக்க வேண்டிய நம் இந்திய தேசம் அவமானப்பட்டுக் கிடக்கிறது. 1992 டிசம்பர் 7ம் நாள் (மஸ்ஜித் இடிக்கப்பட்ட மறுநாள்) தொலைக்காட்சியில் அன்றைய காங்கிரஸ் அரசின் பிரதமர் நரசிம்மராவ், ''மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டித் தரப்படும்'' என்றார். நாட்டின் தலைமை பீடமான பிரதமரின் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தனர். இளம் வயதில் ஜனசங்கம் ஊட்டிய வகுப்பு வெறி, நரசிம்மராவை இறுதிவரை மன்னிப்புக் கேட்க அனுமதிக்கவில்லை. நரசிம்மராவ் தவறிழைத்து விட்டார் என்று நேரு குடும்பம் தற்போது கூறிவருகிறது. அதே நேரம், 1949 டிசம்பர் மாதம் 22ம் தேதி, அயோத்தியில் இருந்த பாபர் மஸ்ஜித்தில் சமூக விரோதிகள் ராமன், லட்சுமணன் மற்றும் சீதையின் கற்சிலைகளை தொழுகை தலத்தில் வைத்துவிட்டு திரும்பியதில் இருந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் நேரு பிரதமராக இருந்திருக்கிறார். அப்போது உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதே, யாருக்கும் தெரியாமல் வைக்கப்பட்ட சிலைகளை யாருக்கும் தெரியாமல் வெளியே எறிந்து விட நேருவுக்கு தைரியமும், தொலை நோக்குப் பார்வையும் இருந்திருக்க வில்லை.
மஸ்ஜித்தை உடனே பூட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது எவ்வளவு அடிமுட்டாள்தனமான செயலாகும் என்பதையும் அவர் உணர்ந்திருக்கவில்லை. இந்திய விடுதலைக்குப் பின்னர் தேசிய அளவில் முடிவெடுக்கும் தார்மீக உரிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு என்று கூறிய நேருவுக்கு, சிலைகள் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் யாருக்கு சொந்தமாக இருக்க முடியும் என்பதில் முடிவெடுக்கும் உரிமை எப்படி இல்லாது போனது? சர்வாதிகாரி சர்தார் வல்லபாய் பட்டேலுடன் இணைந்து குஜராத்தின் சோம்நாத் நகரில் இருந்த ஒரு பள்ளிவாசலை தகர்த்துவிட்டு அந்த இடத்தில் கோயில் கட்டப்பட காரணமான நேருவுக்கு, பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் மதச்சார்பற்ற முடிவெடுக்கும் மனம் இருந்திருக்க வாய்ப்பில்லை.
1949ல் பூட்டப்பட்ட பள்ளிவாசல் வளாகம் 1987ஆம் ஆண்டு ராம்நியாஸ் என்ற சிறப்பு பூசைக்காக வளாகம் திறந்து விடப்பட்ட போது தான், இப்படி ஒரு பிரச்சனை இருந்து வருவது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. பாபர் மஸ்ஜித் நிர்வாகத்திற்கும், அதை கோயில் என்று வாதாடும் ஒரு கூட்டத்திற்கும் இடையே மட்டும் இருந்து வந்த வழக்கு தேசிய இனங்களின் தன்மானப் பிரச்சனையாக்கப் பட்டது. 1987ல் ஷாபானு தொடர்பான ஜீவனாம்ச பிரச்சினையில் - பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, நாடாளுமன்றத்தின் ஓட்டெடுப்பு மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முறியடித்தார். அதற்கு பரிகாரமாக இந்துத்துவ கும்பலின் நீண்டநாள் கோரிக்கையான பாபரி மஸ்ஜித் பிரச்சினைக்கு ராஜீவ் காந்தி வழிவிட்டார். இதிலிருந்துதான் இந்திய ஒற்றமையை சீர்குலைக்கும் சில்மிஷ வேலைகள் ஆரம்பமாயின. 1987க்குப் பிறகே 1992 டிசம்பர் 6ல் பூஜைகள் செய்வதற்காக அத்வானி தலைமையிலான மதவெறிக் கூட்டம், பாபர் மஸ்ஜித் வளாகம் சென்றது. மஸ்ஜித் இடிக்கப்பட மாட்டாது என்று அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு வாக்குறுதி அளித்தனர். மஸ்ஜித் பாதுகாக்கப்படும் என மத்திய அரசும் உறுதி கூறியது. பாதுகாப்புக்காக(?) சில மைல் தொலைவுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ராணுவம், ராம பக்தர்களாக மாறி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட கோயிலை நோக்கி கையெடுத்து கும்பிட்டு நின்றது. இடிக்கப்பட்ட இடத்தில் மஸ்ஜித் கட்டப்படும் என்பதே முன்னாள் பிரதமரின் வாக்குறுதி, மற்றும் முஸ்லிம்களின் கோரிக்கை, எல்லாவற்றிற்கும் மேலாக 1947க்குப் பிறகு, எந்தெந்த இடத்தில் எந்தெந்த சமயத்தின் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றனவோ அவை அவ்வாறே பாதுகாக்கப்படும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அந்தச் சட்டம் பாபர் மஸ்ஜிதையும் உள்ளடக்குகிறது.
இதற்காகத்தான் முஸ்லிம் சமூகம் 14 ஆண்டுகளாக விடாமல் போராடி வருகின்றது. எனவே இடித்த இடத்தில் மஸ்ஜித் மீண்டும் கட்டப்படுவதும், அமைப்புச் சட்டத்தின் உறுதிமொழியை நிறைவேற்றுவதும் அரசுக்கும், நீதித்துறைக்கும் கடமையாக இருக்கும் போது, அந்த அமைவிடம் யாருக்குச் சொந்தம் என்ற விவாதம் அர்த்தமற்ற தாகும். ஓர் உதாரணத்திற்கு, இடம் R.S.S.க்கு சொந்தம் என்று தீர்ப்பானால், இடித்த இடத்தில் அளித்த வாக்குறுதிப்படி பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்டி அதன் நிர்வாகம் பொறுப்பை நரேந்திர மோடியிடமா கொடுப்பது? என்ன பிதற்றலான வாதம். ஆனால் அறிவு ரீதியான வாதங்களை புறந்தள்ளி விட்டு, பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் முன்னர் ராமர் கோயில் இருந்ததா? அங்கே ராமர் பிறந்து, வாழ்ந்து, ஆட்சி செய்தாரா? என்றும் ஆய்வு செய்து விளக்கம் அளிக்கும் படி தொல்லியல் துறை பணிக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு பெரிய வேடிக்கை.
புராண கணக்கீட்டின் படி ஒரு யுகத்திற்கு 5 லட்சம் வருடங்கள், முதல் யுகமான திரேதா யுகத்தில் ராமர் பிறந்தார் என்பது இந்துத்துவாக்களின் நம்பிக்கை. அரசியலமைப்பு சட்டத்தால் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்பட்ட பெரும்பான்மை இந்திய சமுதாயத்திற்கு இந்த கணக்கு எல்லாம் தெரியாது. அப்படியானால் 4 யுகங்களில் முதல் யுகமான திரேதா யுகத்தின் இன்றைய ஆயுள் கிட்டத்தட்ட 20 இலட்சம் வருடங்களுக்கு முந்தியது. கற்காலத்திற்கும் முற்பட்டதாக கருதப்படும் இதிகாச மனிதர்களின் தடம் பற்றி தகவல் அறிய தொல்லியல் துறை சம்மதித்து இருப்பது தேசிய நகைச்சுவை. ஒரு வேளை இந்துத்துவ சக்திகள் சில தகிடு தத்தங்களின் வழியே தங்களுக்குத் தோதான ஒரு தீர்ப்பினை உச்சநீதி மன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டால், அதன் வழியே, ராமர் அங்குதான் பிறந்தார் என்றோ, அல்லது கோயில் இடிக்கப்பட்டது என்றோ முடிவுகள் வெளியாகுமானால், பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் வழக்கு என்ன வாகும்? அதற்காக சட்டத்தால் யாரையும் தண்டிக்க முடியாதே. மஸ்ஜித் இடிக்கப் பட்ட இடத்தில் கோயில் கட்டுவது சரி என்றால் மஸ்ஜித் இடித்தவர்களை தண்டிப்பது நியாயமாகாது. இடித்தவர்களை தண்டிப்பது சரி என்றால் கோயில் கட்டுவது நியாயமாகாது. அரசும், நீதித் துறையும் என்ன செய்யப் போகின்றன?
மஸ்ஜித் இடிக்கப்பட்ட அன்று, உமா பாரதியும், முரளிமனோகர் ஜோஷியும் கட்டித் தழுவி மகிழ்ச்சி வெளிப்படுத்திய காட்சி ஊடகங்களிலே உலா வந்தது. மாநிலம்தோறும் ர(த்)தம் ஓட்டி கூட்டம் திரட்டிச் சென்றவர் அத்வானி. இவர்கள் எல்லாம் தண்டனையில் இருந்து தப்பி இன்றுவரை சுதந்திரமாக உலாவருகிறார்கள். மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் பின்னணியில் கிடைத்த அரசியல் வளர்ச்சியைக் கொண்டே பிரதமர்களாகவும், மாநில முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி சுகம் கண்டார்கள்.
14 ஆண்டுகள் ஆகியும் வெளிவரத் தயங்கும் இவர்கள் மீதான தீர்ப்பு, வெளிவரும் தினத்தில், இவர்கள் ஆண்டு அனுபவித்து நீதியின் தண்டனைக்கு தப்பியவர்களாக மரணித்திருக்கலாம். நீதிமன்றம் தீர்ப்புகளை வாசிக்கும் போது, அதனை கேட்பதற்குக் கூட குற்றவாளிகள் பூமியில் உயிருடன் இருக்க மாட்டார்கள்.
பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கும் அங்கு ராமர் கோயில் இருந்தது என்ற வாதத்திற்கான வழக்கும் சேர்த்து விசாரித்து வரும் லிபரான் கமிஷனின் முடிவுகள் இன்னும் சில மாதங்களில் வெளி வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தீர்ப்புகளின் மீது நெருப்புகளை பற்ற வைக்கும் சதித்திட்டங்களை மோடிகளும், கேடிகளும் உருவாக்குவார்கள். ராமர் கோயில் பிரச்சனையில் வெளிவர இருக்கும் தீர்ப்புகளை மிரட்டும் ஒரு முன்னோட்டமாகத்தான் ராமர் பாலம் தொடர்பான சர்ச்சையை நீதிமன்றம் மூலம் பிரச்சனையாக்கினார்கள்.
நாம் எதிர்பார்ப்பது வெறும் தீர்ப்புகளை மட்டுமல்ல, பிரச்சனைக்கான தீர்வுகள். பாபர் மஸ்ஜித் வளாகம் முஸ்லிம்களுக்குத்தான் சொந்தம் என்ற உரிமைப் பூர்வமான தீர்வும், இடித்த இடத்தில் மீண்டும் பழம் பெருமையுடன் மஸ்ஜித் கட்டப்பட வேண்டும் என்ற தீர்ப்பும், அவ்வாறு தீர்ப்பளிக்கும் தைரியமும், நியாய உணர்ச்சியும் நீதிபதிகளுக்கு அவசியப்படுகிறது.
இந்திய ஜனநாயகத்தின் அதிகபட்ச அதிகாரம் நாடாளு மன்றத்துக்கே உரியது என்றாலும், அரசியல் வாதிகள் எப்போதும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு தூரமாகவே இருந்து வருகின்றனர். அதனால் அறிவுஜீவிகள் தொடங்கி சாமானிய மக்கள் வரை அனைவரும் நம்பிக்கை வைத்திருக்கும் அமைப்பு நீதிமன்றம் தான். அந்த நம்பிக்கையின் உச்சபட்சம் உச்ச நீதிமன்றத்தின் மீது இருக்கிறது. ஆனால், நீதிமன்றங்களின் செயல்பாடுகளிலும், கூட பாரபட்சங் களும், சமயச்சார்பும் காணப்படுகின்றன. உச்சநீதிமன்றமா? உச்சி குடுமி மன்றமா? என்று கிண்டல் செய்யும் அளவுக்கு அதன் நடவடிக்கைகள் பாரதூரமாக அமைந்திருக்கின்றன.
பாபர் மஸ்ஜித் பூட்டப்பட்டு 58 ஆண்டுகள் ஆகியும் அதன் மீதான நியாயத்தை நீதிமன்றங்களால் வெளிப்படுத்த முடியவில்லை. அதேநேரம், இந்துத்துவ சக்திகளுக்கு ஓர் ஆபத்து ஏற்படும் என்றால் விடுமுறை நாட்களிலும் கூட நீதியின் கதவுகள் திறந்து கொள்கின்றன. கொலைக்குற்றமும், காமவெறிக்குற்றமும் சுமத்தப்பட்டு காஞ்சி காமகோடி ஜெயேந்திரர் கைது செய்யப்படுகிறார். நீதிமன்றங்களின் விடுமுறை நாளான அன்று சிறப்புச் சலுகையாக நீதிமன்றம் திறக்கப்பட்டு ஜாமின் வழங்கப்படுகிறது. அதுவே, எந்தக் குற்றம் செய்யாதவர் என்று கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையான அப்துந் நாசர் மதானிக்கு மூன்று முறை உச்சநீதிமன்றமே ஜாமின் மனுவை நிராகரித்துள்ளது, சிறுபான்மையினரை சில சமூக விரோதிகளும், அரசியல் விரோதிகளும், தேசிய மதச்சார்பின்மை யின் எதிரிகளும்தான் இரண்டாம் தர குடிமக்களாக கருதுகிறார்கள் என்றால், சில நேரங்களில் நீதிமன்றங்களும் அந்தப் புள்ளியை நோக்கி நகர்த்தப்படுகின்றன.
நீதிமன்றங்களிலே இருக்கும் கறுப்பு ஆடுகளுக்கும், வெளியே திரியும் வகுப்பு வெறி சக்திகளுக்கும் இடையே கண்ணுக்கு புலப்படாததோர் மெல்லிய இழை இரு முனைகளையும் இணைத்துக் கொண்டிருப்பதை மனித நேயர்கள் சுட்டிக் காட்டவும் தவறுவதில்லை. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின் வடிகட்டிய மீதமாக நீதிமன்றங்களே இருப்பதால் இந்த ஆண்டின் டிசம்பர் 6ஆம் தினத்தில், நீதிமன்றங்களின் கவனத்தையும், சட்டக் காப்பாளர்களின் நடவடிக்கையையும் துரிதப்படுத்தும் வண்ணம், நீதிமன்றங்களின் முன் போராட்டம் நடத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முடிவு செய்திருக்கிறது.
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் ஆத்திரத்தில் எழுந்த அறிவு மயக்கத்தால், நாடெங்கும் வீசியெறிப்பட்ட வன்மு றைக்கு ஏதும் அறியாத அப்பாவி மக்கள் பலியாகி வந்தனர். ஒவ்வொரு குண்டு வெடிப்பு ஒலங்களின் இரைச்சலால் முஸ்லிம் வீடுகளின் இரவுகள் அச்சத்துடன் விழித்திருந்தன. கைதுகளும், வழக்குகளும், அவமானங்களும், வழமையாயின.
அதுவே, குஜராத்தின் கோர படுகொலைகளை நியாயப்படுத்தவும் காரணமாயின. தமிழ்நாட்டு இளைய சமுதாயமும் மதவாத சக்திகளின் சதிகளுக்கு பலியாகிப் போகாமல் தடுக்க, த.மு.மு.க. சாத்வீகமான, அமைதி வழிப் போராட்டங்களை கையிலெடுத்தது. ஆரம்பக் கட்டத்தில் அதன் மீது விழுந்த சந்தேகப்பார்வைகளையும், எதிர்ப்புகளையும், பழிச் சொற்களையும் தன் மீதே சுமந்து, சமூகத்தின், இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலம், பாதுகாவல், குடும்பங்களில் நிலவவேண்டிய சாந்தி சமாதானத்திற்காக பல்வேறு தியாகங்களைச் செய்து பல வெற்றிகளை இறையருளால் பெற்றிருக்கிறது.
பாபர் மஸ்ஜித் விவகாரத்தில், தேசிய அளவில் முஸ்லிம்களை ஒருமுகப்படுத்தி போராடவும் தமுமுக திட்டங்களை வகுத்து வருகிறது.
பாபர் மஸ்ஜித் மீதான உரிமை மீட்புக்காக தொடர்ந்து தன் முனைப்பான போராட்டங்களை வருடம் தவறாமல் நடத்தி, உறங்குபவர்களையும் தட்டி எழுப்பி, எதிரிகளை எச்சரித்து வருகிறது. அதன் போராட்டப் பயணத்தில் நீதிமன்றங்களுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்க மைல்கல். .
நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்
0 Comments:
Post a Comment
<< Home