Monday, December 10, 2007

மலேசியத் தமிழர்களுக்கு உரிமைகள் இல்லையா?

மலேசியத் தமிழர்களுக்கு ஒரேயடியாக உரிமைகள் இல்லை என்று கூறிவிட முடியாது

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அரசியலில் நேரடியாகக் களமிறங்குவது என்று முடிவெடுத்திருக்கிறது. இந்நிலையில் டிசம்பர் 6 என்றாலே ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் பதற்றம், மலேசியத் தமிழர்கள் பிரச்னை உள்ளிட்ட தற்போதைய பிரச்னைகள் பற்றி தமுமுகவின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவிடம் பேசினோம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் அகிவிட்டன. இன்னும் டிசம்பர் ஆறாம் தேதி என்றால் பதற்றமான சூழல் உருவாகி விடுகிறதே...?

காவல் துறையினர் ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இதை நான் தவறென்று சொல்லமாட்டேன். வருமுன் காப்பது சிறந்ததே. ஆனால் பெருமளவில் தமிழகம் அமைதியாகத் தான் இருந்து வருகிறது. 1997-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் செல்வராஜ் என்ற காவலர் கொல்லப்பட்டார். அதையடுத்து நடந்த கலவரத்தில் 19 முஸ்லிம்கள் இறந்தார்கள். முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆனால் அதற்கு பிறகு பொதுவாக அமைதியே நிலவுகிறது. முஸ்லிம் மக்கள் வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ள விரும்பவில்லை. எங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை நாங்கள் போராட்டங்கள் மூலம் எதிர்கொள்கிறோம். தடைகளை மீறி போராட்டங்களும் நடத்துகிறோம். ஆனால் வன்முறையை விரும்புவதில்லை. இந்த பதற்றமான சூழல் தேவையற்றது.

கர்நாடகாவில் பா.ஜ.க முதன்முதலாக ஆட்சி அமைக்கும் முயற்சி வெற்றி பெற்றது. ஆனால் அதனால் தொடர முடியவில்லை. தென்னிந்தியாவில் பா.ஜ.க. வலுப்பெறுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

அப்படி நினைக்கவில்லை. கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸும் செய்த தவறுகளால் தான், பா.ஜ.க. அதிக இடங்கள் பெற்றன. ஆட்சி அமைத்ததும் அதனால் தான். ஆனால் கடைசியில் கோமாளிகள் போல் அவர்கள் ஆக்கப்பட்டார்கள். கொள்கை வழியாக நடக்கும் கட்சி என்று பெருமை அடித்துக் கொள்ளும் அவர்கள், கடைசியில் பதவிக்காக எந்த நிலைக்கும் அடிபணிந்து போகக்கூடியவர்கள் என்பதை நிரூபித்தார்கள். அங்கே காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.

பொதுவாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் முஸ்லிம்களை எப்படி நடத்தி வந்திருக்கின்றன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

முஸ்லிம்களுக்கு அதிக அளவில் நன்மைகள் செய்தது தி.மு.க.தான். அ.தி.மு.க. அப்படிச் செய்ததாகக் கூற முடியாது. சிறுபான்மையினரின் மனத்தைப் புண்படுத்தும் நடவடிக்கைகள் தான் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்திருக்கின்றன. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே இப்படித்தான். எண்பதுகளில் ராமகோபாலன், ராஜகோபாலன், திருக்கோவிலூர் சுந்தரம் போன்றவர்கள் பொதுக்கூட்டங்களில் மிகமோசமாக இஸ்லாம் பற்றிப் பேசி வந்தார்கள். அவர்கள் முஸ்லிம்களை எப்படி வேண்டுமானாலும் திட்டட்டும். ஆனால் நபிகள் நாயகம் அவர்களை மிக மோசமாக விமர்சித்தார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அவர்கள் மீது ஒரு வழக்குகூட பதிவு செய்யப்பட வில்லை. இவர்களின் இந்தப் பேச்சுகள் தான். பின்னாளில் பல பிரச்னைகளுக்கு வழி வகுத்தன. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வந்தார். குஜராத் கலவரத்துக்குப் பிறகு நடந்த தேர்தலில் நரேந்திர மோடி வென்ற போது, அவருக்கு அம்மாநிலத்துக்கே சென்று பூங்கொத்து கொடுத்தார். இதெல்லாம் சிறுபான்மையினரைப் புண்படுத்தின.

சிறுபான்மையினருக்கு தமிழக அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அறிவித்துள்ளது. ஆனால் ஆந்திராவில் அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு தடைபட்டிருக்கிறது. இங்கேயும் அப்படி நேராமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டா?

ஆந்திர நிலையும் தமிழக நிலையும் வேறு. ஆந்திராவில் அது சிறுபான்மையினர் நலத்துறையின் பரிந்துரையில் செய்யப்பட்டது என்பதால் அதற்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால் இங்கே பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் பரிந்துரை பெறப்பட்டு இந்த இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மதரீதியான ஒதுக்கீடு அல்ல. ஏற்கனவே பிற்படுத்தப்பட்டவர்களில் இடஒதுக்கீடு பெற்றுவந்த முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் தனித்தனி சதவிகித ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள். ஆகவே இதற்கு சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு.

தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளீர்களே?

1995-ல் த.மு.மு.க தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் எங்கள் ஆதரவு யாருக்கு என்பதைத் தெளிவாகச் சொல்லி வந்துள்ளோம். அத்துடன் அரசியல் கட்சிகளுக்கு இணையாகத் தேர்தல்களில் பிரச்சாரமும் செய்து வந்துள்ளோம். ஆனால் இப்போது நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக உணர்கிறோம். எனவே, முஸ்லிம்கள் பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப தேர்தலில் போட்டியிடுவது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. ஆனால் எப்படி எந்த வடிவத்தில் போட்டியிடுவது என்பதெல்லாம் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. அது பற்றி உள்கட்சி ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

மலேசியாவில் தமிழர்கள் போராட்டம் பற்றி? முஸ்லிம் பெரும்பான்மையினர் வசிக்கும் அந்த நாட்டில் இந்துக்கோயில்கள் இடிக்கப்படுவதாகச் சொல்கிறார்களே?

முதல் விஷயமாக அங்கு இந்திய வம்சாவளியினர் மீது அந்த அரசு தாக்குதல் நடத்தியதை நாங்கள் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால் பேரணியில் கலந்து கொண்டவர்கள் வழிபாடு, கல்வி உரிமை இல்லை என்றெல்லாம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் பி.ஆர் எனப்படும் பெர்மனென்ட் ரெஸிடென்ஸ் உரிமை பெற்றவர்களே. சிட்டிசன்ஷிப் என்ற குடியுரிமை பெற்றவர்கள் அல்ல. குடியுரிமை பெற்றவர்களுக்குக் கிடைக்கும் உரிமைகளும் பி.ஆர். பெற்றவர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமாகாது. தீபாவளிக்கு முதல்நாள் ஒர் இந்துக் கோயில் இடிக்கப்பட்டது என்கிறார்கள். அன்று அங்கே நான்கு பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டன. 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் இடிக்கப்பட்டன. மலேசியாவில் மொத்தம் 60 சதவிகிதம் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு 4,000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. ஆனால் 8 சதவிகிதம் இருக்கும் இந்துக்களுக்கு 17,000 கோயில்கள் இருக்கின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் வழிபாட்டுத்தலங்கள் தான் பொதுவாக இடிக்கப்படுகின்றன.. ..

என்.அசோகன்
த சன்டே இந்தியன்

0 Comments:

Post a Comment

<< Home