அயோத்தியில் இறைவனின் இல்லத்தை விரைவில் கட்டுவோம்
அபூசாலிஹ்
இந்தியாவின் தேசத்தந்தை என்று போற்றப்பட்ட காந்தியின் படுகொலைக்குப் பிறகு ஒட்டுமொத்த இந்தியாவே பதறிய, கதறிய நிகழ்வாக அது அமைந்து விட்டது.
நாட்டின் எங்காவது ஒரு மூலையில் ஒரு சிலை சேதப்படுத்தப்பட்டால் உடனே அந்தப் பிராந்தியமே கலவரத்தால் கொந்தளிக்கும். சமூக மோதல்களுக்கு அடிக்கல் நடப்படும். வன்முறை தலை விரித்தாடும். வாகனங்கள் எல்லாம் தீக்கிரையாக்கப்படும். உடனே வட்டாட்சியரும், கோட்டாட்சியரும் வாரிச் சுருட்டிக் கொண்டு சம்பவ இடத்திற்கு, ஆர்ப்பாட்டக்காரர்களின் தாடையைப் பிடித்து தாங்காத குறையாக தாஜா செய்வார்கள். சேதப்படுத்தப்பட்ட 'சிலை' உடனடியாக அரசு செலவில் வைக்கப்படும் என வாக்குறுதிகள் தந்த பின்னரே சகஜ நிலைக்கு அந்தப் பகுதி திரும்பும். இது நாம் அடிக்கடி காணும் நம் நாட்டு நிலவரம். ஆனால் முஸ்லிம்கள் இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும், நீதிமன்ற அமைப்புகளின் மீதும் முழுமையாக நம்பிக்கை வைத்து இந்தியப் பேரரசு பாப்ரி மஸ்ஜித்துக்கு எத்தகைய ஊறும் நிகழாமல் பார்த்துக் கொள்ளும் என நிம்மதியுடன் இருந்த வேளையில்தான் 20ஆம் நூற்றாண்டின் நம்பர் ஒன் பேடித்தனம் நம்பவே முடியாத கோழைத்தனம் நடந்தது.
முஸ்லிம்கள் நம்பிக்கையுடன் இருந்த வேளையில் தான் இந்த ''நம்பிக்கைத் துரோகம்'' நடந்தது.
முஸ்லிம்கள் அவ்வாறு பொறுமை காட்டியதும், அளவுக்கு மீறிய நம்பிக்கை வைத்ததும் தான் தவறோ என பிறகு நினைக்கும் அளவுக்கு பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு சதிச் செயல் நடந்தது.
மேற்படியாளர்களை நம்பாமல் முஸ்லிம்கள் தன் கையே தனக்குதவி என 1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியை நோக்கி புறப்பட்டிருந்தால் பாப்ரி மஸ்ஜிதின் ஒரு செங்கல்லைக் கூட எந்த மனிதப் பதராலும் அசைத்திருக்க முடியாது. முஸ்லிம்களின் பிணங்களைத் தாண்டித் தான் அந்த பிண்டங்கள் செல்ல வேண்டும் என்ற நிலை அன்று ஏற்பட்டிருக்கக் கூடும்.
அரசு அமைப்புகளின் மீதும் நாட்டின் உயரிய மாண்புகளின் மீதும் வைத்திருந்த மதிப்பீட்டின் காரணமாக, மதிப்புமிக்க பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு மண்மேடாக்கப்பட்டது.
அன்று ஏமாற்றப்பட்ட இந்த திருச்சமூகம் அதிர்ச்சியிலிருந்து மீளவேயில்லை என்பதை 15 ஆண்டுகளுக்குப் பிறகும் 2007 டிசம்பர் 6லும் இந்த நாடும் மக்களும் உணர்ந்து கொண்டனர்.
நிலம் யாருக்குச் சொந்தம் என தீர்ப்பளிக்கப்படாமல் நெடிய 49 ஆண்டுகள். இடிக்கப்பட்ட பின்பு இடிக்கப்பட்ட மஸ்ஜிதைக் கட்டாமலும், இடித்த சதிகாரர்களை தண்டிக்க மனமில்லாமலும் 15 ஆண்டுகள் கழிந்தன.
பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நான்காவது நாளே சதிச் செயல் குறித்து விசாரிக்க லிபர்ஹான் ஆணையம் 'நயவஞ்சக திலகம்' நரசிம்மராவால் அமைக்கப்பட்டது. 10.12.1992ல் அமைக்கப்பட்ட லிபர்ஹான் ஆணையம் 16ஆம் தேதி தனது கடமையைத் (?) தொடங்கியது.
ஆம், தங்களது ஒத்தி வைப்பு வைபவத்தை தொடங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை 42 தடவை ஒத்தி வைக்கப்பட்டது.
43ஆவது தடவையும் லிபர்ஹான் ஆணையம் கூடும், ஒத்திவைப்பில் மேலும் ஒரு எண்ணிக்கைக் கூடும், கிரிக்கெட் வீரர்களைப் பார்த்து இவர்களுக்கு என்ன பொறாமையோ தெரியவில்லை? ஒத்திவைப்பு விவகாரத்தில் செஞ்சுரி அடிக்கும் அளவுக்கு லிபர்ஹான் ஆணையம் முனைவது வெட்கக் கேடல்லவா?
இதுவரை 330 அமர்வுகள் நடத்தப்பட்டு விட்டன. இன்னும் நீதி நிலைநாட்டப்படவும் இல்லை. அநீதி 'பிடுங்கி' எறியப்படவும் இல்லை.
இதுவரை கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்பட்டு விட்டது. நீதிபதி லிபர்ஹானின் ஊதியமாக இதுவரை 37 லட்ச ரூபாயும், அலவன்சாக 34 லட்ச ரூபாயும் (தண்ட) செலவு செய்யப்பட்டிருக்கிறது. நீதி இதுவரை கானல் நீராகவே உள்ளது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் முதல் சாட்சியிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா, அசோக் சிங்கால் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
கடந்த பாஜக ஆட்சியில் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று உரிமை மீட்பு இயக்கமாம் தமுமுக டெல்லியில் கண்டனப் பேரணி நடத்தியது. பிரதமர் மன்மோகன் சிங்கை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான குழு சந்தித்தது. மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது. பாஜக ஆட்சியில் நிகழ்ந்த அந்த அநீதி சரி செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பிரதமரிடம் தமுமுக கோரிக்கை வலியுறுத்தப்பட்டு தமுமுக உரிமைப் போராளிகள் சென்னை வந்து சேரும் முன்பே - பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் சி.பி.ஐயின் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் ஆரம்ப சூரத்தனம் காட்டிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதன் பிறகு பாராமுகமாக இருந்தது. தமுமுகவின் நீதிமன்ற முற்றுகைக்குப் பிறகு இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் அனுமன் பிரசாத்திடம் இப்போது தான் விசாரணைத் தொடங்கியுள்ளது.
முதலில் வழக்குப் பதிவு செய்தது இவர்தான். 1992 டிசம்பரில் பெரிய கூட்டமாக வந்ததால் சாட்சிகளை அடையாளம் காண சிரமம் ஏற்பட்டதாக சிபிஐ கூறியுள்ளது. அதாவது 15 ஆண்டுகளாக சாட்சிகள் அடையாளம் காணப்படவில்லையாம்.
இது மத்திய புலனாய்வுக் குழுவின் அசட்டையா? இவர்களை வேலை வாங்குவோரின் கையாலாகாத் தன்மையா? கண்டும் காணாதிருக்கும் யுக்தியா? என நடுநிலையாளர்கள், நாட்டு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பாபரி பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகளான அத்வானி, உமா பாரதி உள்ளிட்டோரை விசாரிக்கும் ரேய்பரேலி நீதிமன்றத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி நான்கு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையை பிடிக்காத ஏதோ ஒரு சக்திதான் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் வெறும் பட்டாசு வகையைச் சேர்ந்தது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகள் எத்தகைய ரூபத்தில் உலா வருகின்றார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஐந்து குண்டுகள் டிசம்பர் 6ல் கண்டு பிடிக்கப்பட்டன. காவல்துறையினர் ராஜாராம் லோத் என்பவரை வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் திருமண ஊர்வலங்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு வகையைச் சேர்ந்தவை என்றும் கைது செய்யப்பட்ட ராஜாராம் லோத் எந்த பயங்கரவாத இயக்கத்துடனும் தொடர்புடையவர் அல்ல என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மொகித் அகர்வால் தெரிவித்திருக்கிறார். ரொம்ப காலமாக நிலுவையில் இருக்கும் தனது வழக்கிற்காகவே ராஜராம் லோத் அங்கு வந்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். ஒருவேளை பிடிபட்டவன் முஸ்லிமாக இருந்தால் இந்த சாதாரணக் கதை 'மர்மக் கதை'யாக மாறியிருக்கும்.
நாடாளுமன்றத்தில்..
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீதி நிலை நாட்டப்படவில்லை. அநீதி 'பிடுங்கி' எறியப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று நாடாளு மன்றத்தில் இந்தப் பிரச்சினை வெடித்தது.
மாநிலங்களவை இந்தப் பிரச்சினையால் இரண்டுமுறை தள்ளி வைக்கப் பட்டது. மக்களவையில் அன்றைய அலுவல்களுக்கான பட்டியலை, சபாநாயகர் அவை துவக்கத்தில் பார்வையிடத் தொடங்கும் போது பாஜக உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பத் தொடங்கினர்.
உடனே, வெகுண்டெழுந்த சமாஜ் வாடிக் கட்சி உறுப்பினர்கள் 16ஆம் நூற்றாண்டின் வரலாற்று சிறப்பு மிக்க பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் எனக் குரல் எழுப்பினர்.
ராஜ்யசபாவில் சமாஜ்வாடி கட்சியின் ஷஹீத் சித்திக்கி மற்றும் அபூ அஸ்மியும் முழக்கங்களை எழுப்பினர். லிபர்ஹான் கமிஷன் ஆணையத்தின் அறிக்கைகளை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தொடர் முழக்கங்கள் எழுப்பினர்.
நாடாளுமன்ற பிரதான வாசலில் இடதுசாரி கட்சியினரும், சமாஜ்வாடி கட்சியினரும் தெலுங்கு தேசக் கட்சியினரும் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
'ஜனநாயகப் படுகொலையாளர்களை தூக்கிலிடு, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளை கைது செய், என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகைகள் உயர்த்திப் பிடிக்கப்பட்டன.
பாப்ரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படை - பிரிட்டன் வாழ் இந்திய முஸ்லிம்கள் கோரிக்கை பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு மற்றும் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை போன்றவற்றுக்கு எதிரான உறுதியான நடவடிக்கையினை இந்திய அரசு மேற் கொள்ள வேண்டும் என பிரிட்டனின் இந்திய முஸ்லிம் கவுன்சில் தலைவர் முஹம்மத் முனாஃப் தெரிவித்தார்.
பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் அரசு ஒப்படைக்க வேண்டும், முஸ்லிம்கள் அந்த இடத்தில் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டிக் கொள்வார்கள் - என்ற முஹம்மத் முனாஃப், 1528ல் முகலாயப் பேரரசர் பாபரின் கவர்னரால் அயோத்தியில் மஸ்ஜித் கட்டப்பட்டது. பாபரின் படைகள் பதான் மன்னர் சிக்கந்தர் லோடியை வெற்றிக்கொண்டதின் விளைவாக அயோத்தியில் கட்டப்பட்ட மஸ்ஜித்துக்கு பாப்ரி மஸ்ஜித் என பெயரிடப்பட்டது. பாபர் அயோத்திக்குச் சென்றதாகவோ அப்போது ராமர் கோவில் அந்த இடத்தில் இருந்ததாகவோ ஆதாரம் இல்லை எனக் கூறினார். முதலில் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உறுதியுடன் முனாஃப் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் கடையடைப்பு
பழைய ஹைதராபாத் நகரில் முழுமையான கடையடைப்பு நடந்தது. சார்மினார் மற்றும் மக்கா மஸ்ஜித் பகுதிகள் வெறிச்சோடிச் காணப்பட்டன. அனைத்துக் கட்டடங்களின் மீதும் கறுப்புக் கொடிகள் பறந்தன. முழு அடைப்பிற்கு ஹைதராபாத்தின் முக்கியக் கட்சியான மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பு அழைப்பு விடுத்தது.
இந்தியா முழுவதும் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்றன.
இந்திய மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அணிவகுத்தனர்.
பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டி யெழுப்ப வேண்டும் என்பதை ஜனநாயகரீதியில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி 13 ஆண்டுகளாக தமுமுக போராட்டம் நடத்தி வருகிறது.
அதுவரை பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் கறுப்புக் கொடி ஏற்றுதல் கறுப்புநாள் என அறிவித்தல் என்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என அன்றைய முஸ்லிம் அமைப்புகள் கருதின. டிசம்பர் 6 வருவதற்கு முன்பாகவே முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப் பிடித்து காவல்துறை கைது செய்வதும் நடக்கும். காவல்துறையினரின் அதிரடி சோதனைகளால் பல்வேறு இடங்களில் முஸ்லிம்களுக்கு துயரங்கள் தொடர்ந்தன.
மஸ்ஜிதை இடித்தவர்களை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு மஸ்ஜிதை இழந்த மக்களை துன்புறுத்திய கொடுமை தொடர்ந்த போது வெகுண்டெழுந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பிரச்சினையை அதன் பீடத்திலேயே சந்திக்க ஆயத்த மாகியது.
தேடித்தேடி கைது செய்கிறாயா வா, வந்து இனி எங்களை கைது செய், கைது செய்து கைது செய்து களைத்துப் போவாய்' எனக் கூறி அதிரடியாய் இறங்கிய தமுமுக உரிமைப் போராளிகளின் படை அதுவரை காவல்துறை நடத்திய டிசம்பர் 6 அடாவடித் தனங்களை சந்திக்க முடிவு செய்தது. தேடித்தேடி கைது செய்த காவல்துறை, ஆயிரக்கணக்கில் திரண்ட முஸ்லிம் இளைஞர்களைக் கண்டு திணறித்தான் போனது.
தமுமுகவின் எழுச்சியால், டிசம்பர் 6ஐ காரணம் வைத்து நசுக்கும் அதிகார வர்க்கம் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை வந்தது.
தலைநகர் தொடங்கி பட்டி தொட்டியெங்கும் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டங்களின் மூலம் தமிழகம் கிடுகிடுக்கத் தொடங்கியது.
டிசம்பர் 6 வந்தால் துரத்தி துரத்தி கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களால் தன்னெழுச்சியாக பாப்ரி மஸ்ஜிதைக் கட்டித் தரவேண்டும் என போராடி கைதாயினர்.
தமுமுகவின் இந்த அறப்போராட்ட எழுச்சி பற்றிப்பரவிய எழுச்சித் தீ திக்கென பரவியது.
கடந்த ஆண்டு 42 இடங்களில் தமுமுக உரிமைப் போராளிகள் கறுப்புக் கொடிகளுடன் நெருப்பு விழிகளுடன் போராட்டக் களம் புகுந்தனர்.
அதனைத் தொடர்ந்து சில வாரங்களிலேயே அமெரிக்க கொடுங்கோலர்களால் மாவீரன் சதாம் ஹுஸைன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு ஆர்த்தெழுந்த கழகம் அறுபதுக்கு மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
கடந்த ஆண்டு சில வாரங்களுக்கு இடையே ஏற்பட்ட எழுச்சி இந்த ஆண்டு சில நாட்களிலேயே நிகழ்த்திக் காட்டி விட்டனர் கழகக் கண்மணிகள்.
வரலாற்று திருப்புமுனையாய் திகழ்ந்த நன்றியறிவிப்பு மாநாட்டை நவம்பர் 24ல் பல்லாயிரக்கணக்கில் மக்களை திரட்டி நடத்திக் காட்டி சென்னையை திணறடித்த பின்னர் சில நாட்களிலேயே டிசம்பர் 6 போராட்டத்தினை சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கி மாவட்ட நீதிமன்றங்கள் வரை முற்றுகையும் ஆர்ப்பாட்டமும் நடத்தி தேசிய அளவில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது தமுமுக.
தமுமுகவின் டெல்லிப் பேரணி, முஸ்லிம் அமைப்புகளுக்கு தன்னம்பிக்கையையும் ஒரு புத்தெழுச்சியையும் ஏற்படுத்தியது.
இதனை நிரூபிக்கும் விதமாக டெல்லியில் முஸ்லிம் அமைப்புகள் டிசம்பர் 6 போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன. தமுமுக, முஸ்லிம் இயக்கங்களுக்கு முன்னோடி இயக்கமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
ஆண்டுகள் 15 கழிந்து விட்ட போதிலும் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டும் அறப்போர்களத்தில் வீரியத்துடன் போராடுவோம். எத்தகைய தியாகத்தையும் செய்து அயோத்தியில் இறைவனின் இல்லத்தை விரைவில் கட்டுவோம் (இன்ஷா அல்லாஹ்) என தமுமுக சூளுரைக்கிறது.
0 Comments:
Post a Comment
<< Home