Saturday, April 08, 2006

'சமதூரத்தில்' ஒரு சர்ச்சையா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

'சமதூரத்தில்' ஒரு சர்ச்சையா?

என்னவானது இந்த ததஜ தலைமைக்கு? என்பது தான் இன்றைய சூழலில் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் சூடான விவாதப் பொருளாகி உள்ளது.
காரணம் இல்லாமலில்லை, எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணியை ஆதரிக்க வேண்டுமென ததஜ அறிவித்ததிலிருந்தே தமிழக முஸ்லிம்கள் ததஜ தலைமை மேல் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அவர்களை சமாதானப்படுத்த ததஜ தலைமை எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த ஒரு பலனுமில்லை.
அவசரமாக முன்தேதியிடப்பட்ட (ஆனால், வெளியிடப்படாத) ஆணையை உயர்த்திப் பிடித்து அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றனர். அந்த ஆணையத்தின் லட்சணத்தையும், அதனை உயர்த்திப் பிடிப்பவர்களின் அவலட்சணத்தையும் தமுமுக வெட்டவெளிச்சமாக்கியதன் பின், தனது வழக்கப்படி தமுமுகவை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்.
அந்த வரிசையில் தற்பொழுது ததஜ தலைவர் எடுத்து வைக்கும் வாதம்:
ஜெயலலிதா மீது அடுக்கடுக்கான புகார்களை கூறும் நமது முன்னாள் சகாக்கள், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை, அவரை (ஜெ ஜெவை)யும் திமுகவையும் சமதூரத்தில் வைத்தது எப்படி?
வாதங்களிலும், விவாதங்களிலும், விதண்டாவாதங்களிலும் மட்டுமே தற்சமயம் நம்பிக்கை வைத்துள்ளதால், பாவம் பிஜே அவர்கள் நிகழ்கால நடப்புகள் பற்றி கவலை கொள்வதில்லை.
கடந்த 26.02.2006 அன்று சென்னையில் கூடிய ததஜ செயற்குழு தேர்தல் - 2006 குறித்து என்ன முடிவெடுத்தது?அதற்கு முன் ஜனவரியில் குலுங்கிய கும்பகோணத்தில் தேர்தல் நிலைபாடு குறித்து ததஜ என்ன அறிவித்தது?
அப்பொழுதெல்லாம் யார் இடஒதுக்கீடு அளிக்கிறார்களோ அவர்களுக்கே ஆதரவு என்றும், இருவருமே அறிவிக்காவிட்டால் மாற்றுவழி அல்லது மூன்றாவது அணி என்று முழக்கமிட்டாரே.
இப்பொழுது ததஜ தலைவர் திமுக குறித்து பட்டியலிட்ட விஷயங்கள் அதற்கு பின் உருவானவையா? அல்லது காங்கிரஸ் குறித்து ஆவேசமாக உரையாற்றினாரே அவை அனைத்தும் பிப்ரவரி 26 க்கு பின்னால் உள்ளவையா? இல்லையே. இத்தனைக்கும் பிறகு தான் இடஒதுக்கீட்டிற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டால், இவற்றை பெரிதுபடுத்தாமல் தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்ற தீர்மானம் எடுத்தீர்கள்.
இதற்கும், தமுமுக, இரு திராவிட கட்சிகளை சமதூரத்தில் வைத்திருக்கிறோம் என ஒரு மாதம் முன்பு வரை சொன்னதற்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்?
இரு திராவிட கட்சிகளில், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலைக்கு எவர் உத்திரவாதம் அளிக்கிறாரோ, எவர் தனி இட ஒதுக்கீட்டிற்கான ஆணை வெளியிடுகிறாரோ அவருக்கே ஆதரவு. இவ்விஷயத்தில் இருவரும் சமதூரத்தில் தான் இருக்கின்றனர். எவர் நெருங்கி வருகிறாரோ அவருக்கே ஆதரவு. எவர் இவ்விஷயங்களில் நமது கருத்துக்கு நெருக்கமாகின்றனரோ அவரது முந்தய தவறுகளை மன்னித்து தேர்தலில் ஆதரவளிக்க தமுமுக தயார் எனும் பிரகடனம் இல்லையா அது. இது தவறா?
எப்படி ஒரு மாதம் முன்பு, ததஜ - திமுகவின் தவறுகளை மன்னிக்க தயாராக இருந்ததோ, அப்படித்தான் அதிமுகவின் தவறுகளை மறக்க தமுமுக தயாராக இருந்தது.
ஆனால் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் காட்டிய தொடர் அலட்சியத்தாலும், இடஒதுக்கீட்டிற்காக இம்மியளவு முயற்சியும் செய்யாமல் இறுமாப்போடு இருந்த காரணத்தாலும் - அவருடைய முந்தைய தவறுகளை அதுவும் கடந்த ஆட்சியில் (2001 - 2006) மட்டும் நடந்த இஸ்லாமிய விரோத போக்கினை தமுமுக பட்டியலிடுகிறது. இதனை கண்டு கொள்ளப்படாமல் விட்டு விடுவதற்கு தமுமுக யாரிடத்திலும் விலை போகவில்லை.
இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டிருந்தால் அது இக்கொடுமைகளுக்கு மருந்தாக அமைந்திருக்கும். ஆனால் காலாவதியான ஒரு ஆணையத்தை தனது அரசு காலாவதியான பின், முன் தேதியிட்டு நீட்டித்து தந்து அதற்காக, ஜெ ஜெவின் தவறுகளை மன்னிக்க வேண்டுமென்றால் - அதற்கு தமுமுக தயாரில்லை. அதைவிட மறுமுனையில் முஸ்லிம்களின் சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து முன் முயற்சி எடுத்து வரும் காங்-திமுக அணி, தங்களை நோக்கி நெருங்கி வந்ததை உணர்ந்த தமுமுக திமுக தலைமையிலான அணியை ஆதரிக்க முடிவு செய்தது.
எனவே, சமதூரத்தில் இருந்ததும், சமுதாய சீரமைப்பால் முன்னுரிமை அளித்து ஒரு அணி நெருங்கி வந்ததும், மற்றொன்று அலட்சியத்தாலும், பணத்திமிரினாலும் நமது கோரிக்கைகளை கவனிப்பாரற்று கைவிட்டதும் சமூக அக்கறையுள்ள அரசியல் பார்வையாளர்கள் அனைவருக்கும் தெரியும்.

ஆனாலும், சமதூரத்தில் வைத்திருக்கிறோம் என்று சமமான வாய்ப்பு வழங்கியதையே இன்று ஒருவர் சர்ச்சைக்குள்ளாக்குகிறார் எனில் அவர் பெற்ற கையூட்டுக்கு விசுவாசமாக, அவரால் விவாதிக்க முடிந்தது இது மட்டும் தானேயல்லாமல் தமுமுக கூறும் அதிமுக (ஜெ ஜெவின்) முஸ்லிம் விரோத காரியங்களில் வேறெதையும் சர்ச்சையாக்க முடியாது என்று தான் அர்த்தம்.
ஆனால் பாவம், அவர் ஆதரிக்கும் ஆணையம் போலவே அக்கருத்தும் வலுவில்லாமல் உள்ளதே. என்ன செய்வது? அதற்காக அவர் வாங்கியதை திருப்பிக் கொடுக்க முடியாதே.
தேர்தல் முடியும் வரை இப்படி தமாஷ் அறிக்கைகளை அவர் வெளியிடத்தான் செய்வார்.
அவருக்கு நேர்வழி கிடைக்க துஆச் செய்வோம்.
அபூஇஸ்மத் 08.04.2006

0 Comments:

Post a Comment

<< Home