தமுமுக தனிமனிதரைச் சார்ந்த இயக்கமல்ல,
சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தமுமுகவின் மாநில அமைப்பாளர் உட்பட அனைத்து பொருப்புக்களிலிருந்தும் விலகிக் கொண்டபோது அவர் எழுதிய 'மனம் திறந்த மடல்'
மனம் திறந்த மடல்
என் மீது அன்பு கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் பி. ஜைனுல் ஆபிதீன் எழுதும் மனம் திறந்த மடல். அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த இருபது ஆண்டுகளாக என்னால் இயன்ற பொதுப் பணிகளைச் செய்து வந்தேன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பாளராகவும் ஐந்த ஆண்டுகளாக நான் இருந்து வருகிறேன்.
எதிர் வரும் ஜனவரி மாதம் பத்தாம் தேதியிலிருந்து தமுமுகவின் மாநில அமைப்பாளர் பொறுப்பு உட்பட நான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புக் களிலிருந்தும் இன்ஷா அல்லாஹ் விலகிக் கொள்கிறேன். இது குறித்து மனம் விட்டு பேசவே இந்த மடலை வரைகிறேன்.
விலகும் நேரத்தில் இதை அறிவிக்காமல் முன் கூட்டியே அறிவிப்பதற்குக் காரணம் இருக்கிறது. தமுமுகவின் மீது எனக்கு அதிருப்தி ஏற்பட்டு, அதனால் நான் விலகுவதாகப் பிரச்சாரம் செய்ய சிலர் காத்துக் கிடக்கின்றனர்.
தமுமுக எனும் சமுதாயப் பேரியக்கம் இன்று அவசியத்திலும் அவசியம் என்பதை உங்களைவிட நான் அதிகமாகவே நம்புகிறேன். இந்தக் கழகம்
சிதறுண்டு விட்டால் மீண்டும் இந்தச் சமுதாயத்தை ஒன்று திரட்டுவதற்கு எத்தனையோ ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதன் காரணமாகத் தான் இக்கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நான் விலகுவதாக இல்லை.
தமுமுகவின் இன்றைய தலைமை நிர்வாகிகள் மீது நான் அதிருப்தியடைந்து ஒதுங்குவதாகவும் யாரும் நினைத்து விட வேண்டும். இன்று இருக்கின்ற தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் உறுப்பினராக நான் இருப்பதே இதற்குச் சான்று.
மறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத்தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி மோகத்தையும், பணம் திரட்டும் குறிக்கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியைச் செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன்.
ஆனால் உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காகத் துவக்கப்பட்ட தமுமுகவின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காணவில்லை.
மறுமைக்கான பணியைக் கூட சில பேர் இவ்வுலக ஆதாயத்துக்காக ஆக்கி விட்ட நிலையில் இவ்வுலகிற்காக மட்டுமே உரிய பணிகளை கூட இவர்கள் மறுமைக்காக ஆக்கிக் கொண்டதை நான் பார்க்கிறேன்.
? தமுமுகவின் தலைமை நிர்வாகிகளில் எவருக்கும் இப்பொறுப்பைச் செய்வதற்காக மாத ஊதியம் இல்லை.
? கூட்டங்களில் பேசச் சென்றால் அதற்காகக் கட்டணம் கேட்பதில்லை.
? எந்த நேரத்தில் கதவைத் தட்டினாலும் சொந்த வேலையைப் புறந்தள்ளிவிட்டு பிரச்சனைகளைத் தீர்க்கும் தியாக மனப்பான்மை.
? எந்தப் பிரச்சனையை யாருக்கு முடித்துத் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராத தன்மை.
? எத்தகைய மிரட்டலுக்கும் அடக்கு முறைகளுக்கும் அஞ்சாத துணிவு.
? கலவரத் தீ மூண்ட நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்துச் சென்று களப் பணியாற்றும் பாங்கு.
? தங்களை முன்னிறுத்தாமல் கழகத்தை முன்னிறுத்தும் அடக்கம்.
? எந்தவொரு பிரச்சனை குறித்தும் கலந்து ஆலோசித்து அல்லாஹ்வின் திருப்தியையே குறிக்கோளாகக் கொண்டு முடிவெடுத்தல்.
? சிறை செல்லும் நிலை ஏற்பட்டால் தங்களை முதலில் நிறுத்திக் கொள்ளக் கூடிய பொறுப்புணர்வு.
? உணர்வுகளைக் தூண்டி விட்டு குளிர்காய நினைக்காமல் சமுதாயத்தால் தாங்கிக் கொள்ளக் கூடிய முடிவுகளை மேற்கொள்ளுதல்.
இப்படி சரியான தலைமைக்கு உரிய எல்லா பண்புகளையும் மாநிலத் தலைமை நிர்வாகிகளிடம் நான் காண்கின்றேன். தன்னலமற்ற இந்தத் தலைவர்களை
வழங்கியதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
இதன் பிறகும் வேறு காரணங்களை யாரேனும் கற்பித்தால் மறுமை நாளில் அவர்களுக்கு எதிராக நான் அல்லாஹ்விடம் முறையிடுவேன்.
நான் விலகிக் கொள்வதாக முடிவு செய்ததற்குரிய காரணங்களைச் சொல்கிறேன்.
இந்த முடிவை நான் இப்போது எடுக்கவில்லை. எனது உடல் நிலை மோசமடைந்து மாரடைப்பு ஏற்பட்டது முதலே இந்த முடிவை எடுத்திருந்தேன்.
ஆனால் அந்த நேரங்களில் எல்லாம் தமுமுகவை அழிக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. கோவை குண்டு வெடிப்பு, அதற்கு முந்தைய கலவரம், வெடிக்காத குண்டுகள், டிசம்பர் போராட்டங்களுக்கு எதிரான அடக்கு முறை, தமுமுக என்று தன்னை சொல்லிக் கொண்டாலே சிறைவாசம், என்றெல்லாம்
மிரட்டல்கள் வந்தன. இந்த இக்கட்டான நிலையில் ஒதுங்குவது கோழைத்தனமாகக் கருதப்படும். மற்றவர்களின் மன உறுதியையும் இது பாதிக்கும் என்பதால் முடிவைத் தள்ளிப் போட வேண்டிய நிலை.
இன்று கழுகத்துக்கு எந்த நெருக்கடியும் இல்லை. கிளைக் கழகத்தில் பொறுப்பு வகிப்பது கூட மரியாதைக்குரிய ஒன்றாகவுள்ளது. அனைத்துக் கட்சியினரும் தமுமுகவைப் பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளனர். இக்கட்டான நிலையில் தமுமுகவை விட்டு விட்டு நான் ஓடி விடவில்லை.
தமுமுகவின் மூலம் புகழும், மரியாதையும் கிடைத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் தான் ஒதுங்குகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக கொலைச் சதியும் - மிரட்டலும், மொட்டைப் பிரசுரங்களும் உள்ளனவே தவிர கழகத்துக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அந்த மிரட்டல்களை எல்லாம் கால் செருப்பாகத் தான் நான் மதிப்பதால் இதைப் பற்றி எனக்கு அச்சமோ, கவலையோ இல்லை.
எனது உடல் நிலை காரணமாக அமைப்பாளர் என்ற பொறுப்பை என்னால் நிறைவேற்ற இயலவில்லை. நான் சில ஆண்டுகளாகவே பெயருக்குத் தான் அமைப்பாளராக இருக்கிறேனே தவிர பணியைச் செய்ய இயலவில்லை. தமுமுக தலைமை நிர்வாகிகளில் செயல்படாத ஒரே நிர்வாகியாக நான் மட்டுமே இருக்கிறேன். ஏற்றுக் கொண்ட பொறுப்பை நிறைவேற்றா விட்டால் மறுமையில் அதற்கும் பதில் சொல்லியாகவேண்டும். இது முக்கியமான காரணம்.
எல்லா முஸ்லிம் இயக்கங்களும் சாகும் வரை பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தலைவர்களால் தான் வீரியம் இழந்தன. இள ரத்தம் பாய்ச்சப்படாத எந்த இயக்கமும் செல்லாக் காசாகி விட்ட வரலாறு நம் கண் முன்னே உள்ளது. இயலாதவர்கள் வழி விடுவது தான் தமுமுகவின் எதிர்காலத்துக்கு நல்லது. வயதைப் பொருத்த வரை இன்னும் சில காலம் நான்
பணியாற்ற இயலும் என்றாலும் உடல்நிலையைப் பொருத்த வரை மற்றவர்களுக்கு வழி விடக்கூடிய நிலையில் தான் நான் இருக்கிறேன். இது இரண்டாவது காரணம்.
திருக்குர்ஆனுக்கு தமிழில் ஒரு விளக்கவுரை (தப்ஸீர்) எழுத வேண்டும் என்ற ஆவல் நீண்ட காலமாக எனக்கு உண்டு. ஆனால் பல்வேறு பொறுப்புக்களால் அப்பணியில் நூறில் ஒரு பங்கைக்கூட நான் நினைவு செய்யவில்லை. எனது இந்த நீண்ட காலக் கனவு நிறைவேற நான் விலகித் தான் ஆகவேண்டும்.
கருணாநிதியை மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரது அழைப்பின் பேரில் நானும் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வும், துணைத் தலைவர் அப்துல் ஜலீல் அவர்களும் ஒருதடவை சந்தித்திருக்கிறோம். அவரைத் தவிர ஜெயலலிதா, மூப்பனார், ராமதாஸ், திண்டிவனம் ராமமூர்த்தி, இளங்கோவன் உள்ளிட்ட வேறு எந்த அரசியல் கட்சியின் பெருந்தலைவர்களை எப்போதும் நான் சந்தித்ததில்லை.
நமது அலுவலகம் தேடி வந்த தங்கபாலு, நல்லகண்ணு மற்றும் தேர்தல் பிரச்சார மேடையில் சந்தித்த மணிசங்கர அய்யர், பி.எம். சயீத், பி.ஹெச். பாண்டியன் ஆகியோர் தவிர வேறு யாரையும் சந்திக்கவில்லை.
ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்கின்ற சில அழைப்பாளர்கள் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை மாதச் சம்பளமாகப்
பெற்று வருகின்றனர்.
பிரச்சாரப் பணிகளுக்காக எந்த வெளிநாட்டிலிருந்தும் நான் பத்து பைசா பெற்றுக் கொண்டதில்லை.
இவற்றையெல்லாம் குறிப்பிடக் காரணம் இதன் பிறகும் யாரேனும் அவதூறு பரப்பினால் மறுமையில் அல்லாஹ்விடம் அவர்களுக்கு எதிராக நான் வழக்குத் தொடர்வேன் என்று எச்சரிப்பதற்குத் தான்.
முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி தவிர வேறு எந்த பொதுக் கூட்டத்திலும் மாநட்டிலும், கருத்தரங்கத்திலும் பேச்சாளனாகக் கலந்து கொள்ள மாட்டேன்.
இன்றைய தேதி வரை நான் எந்தெந்த இயக்கங்களை எதிர்த்து வந்தேனோ அதிலிருந்து நான் மாறவில்லை. நான் ஒதுங்கியதைப் பயன்படுத்தி அத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டால் நம்பவேண்டாம்!
எவர்கள் எல்லாம் சமுதாயத்தை ஏமாற்றி வயிறு வளர்க்கிறார்கள் என்று நான் குற்றம் சாட்டினேனோ அதிலிருந்தும் நான் மாறவில்லை. நான் மாறிவிட்டதாகக் கூறினால் நம்ப வேண்டாம்.
என்னைப் பற்றி யார் எந்த அவதூறுகளைப் பரப்பினாலும் அதை என் கவனத்துக்கு யாரும் கொண்டு வரத்தேவையில்லை. இதற்கு முன்னரும், இனியும் அவதூறுப் பிரச்சாரம் செய்யும் எவரையும் நான் மன்னிக்க மாட்டேன். அவற்றை மறுமை நாளுக்கான தயாரிப்பாக நான் பயன்படுத்துவேன்.
ஏனெனில் அவர்களின் இலக்கு நான் அல்ல. எனக்கும் அவர்களுக்கும் எந்தப் பகையும் இல்லை. என்னைப் பற்றி அவதூறு பரப்புவதன் மூலம் தமுமுகவின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். எனவே எந்த அளவுக்கு அவதூறை விளம்பரம் செய்தார்களோ அந்த அளவுக்கு மன்னிப்பையும் பகிரங்கமாகக் கேட்காத வரை அவர்களை நான் மன்னிக்க
மாட்டேன்.
உங்களிடம் இறுதியாக ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கிறேன். சமுதாயத்திற்காகவே படுபாடும் தமுமுகவை நீங்கள் எல்லா வகையிலும் நம்பலாம். தமுமுகவை நம்பி எந்தப் பணிக்காகவும் பணம் அனுப்பலாம். எந்த முறைகேடும் இல்லாமல் சரியான முiறியல் அதைச் செலவு செய்யும் ஒரே இயக்கம் தமுமுக. எந்த அளவுக்கு அது பொருளாதாரத் தன்னிறைவை அடைகிறதோ அந்த அளவுக்கு அதன் பணிகள் சிறப்பாக அமையும். தாரளமாக நிதியுதவி செய்யுங்கள்.
ஏகத்துவப் பிரச்சார்த்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அந்த வகைக்காக நிதி உதவி செய்வதாக இருந்தால் ஹாமித் பக்ரீ தலைமையில் அமைந்த அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்புக்கு அனுப்பலாம். அவர்களும் முறையான நிர்வாகம் அமைத்து செயல்படுகிறார்கள். ஒளிவு மறைவில்லாமல் திறந்த புத்தகமாகக் கணக்குகளைப் பாராமரிக்கின்றனர். யாரும் எப்போதும் கணக்குக் கேட்கலாம்.
இவ்விரு அமைப்புகளைத் தவிர வேறு எந்த அமைப்புக்கும் நிதியுதவி செய்யுமாறு நான் பரிந்துரைத்ததாக யார் கூறினாலும் நம்ப வேண்டாம்.
நான் ஒதுங்கிக் கொள்வதால், தமுமுகவுக்கும், மார்க்கப் பிரச்சாரத்திற்கும் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று சில நண்பர்கள் கவலை தெரிவித்தனர். முதலில் அவ்வாறு எண்ணுவதே மார்க்க அடிப்படையில் தவறு.
எந்த இயக்கமும் தனி மனிதனைச் சார்ந்து இருக்கக் கூடாது. தனி மனிதக் கவர்ச்சியில் இயங்கும் இயக்கங்கள் காலப் போக்கில் தடம் புரண்டு விடும் என்பதை நான் ஆரம்ப காலம் முதலே வலியுறுத்தி வந்துள்ளேன். தமுமுக தனிமனிதரைச் சார்ந்த இயக்கமல்ல. அது ஒரு மகத்தான மக்கள் இயக்கம்.
நான் ஓய்வு பெறுவதால் தமுமுகவுக்குப் பின்னடைவு ஏற்படும் என நான் நம்பவில்லை.
ஒரு சிறந்த தலைமை விடை பெற்றுச் சென்ற பிறகு அந்த இயக்கம் அழிந்து விடுமானால் மனிதகுலத்தின் மிகச் சிறந்த தலைமையான ரசூல்(ஸல்) அவர்களுக்குப் பின் இஸ்லாம் தடைப்பட்டுத் தேங்கிப் போயிருக்கும். இறைவன் இஸ்லாமிய மார்க்கத்தை அப்படியாக்கி விடவில்லை. இஸ்லாம் ஒவ்வொரு நாளும் ஏற்றமிகு தோற்றத்தோடு எழுச்சி பெற்று வருகிறது.
இறைவனின் கிருபையும் கருணையுமே நம்முடைய ஒரே பலம் அதன் என்றென்றும் நம்மைத் தொடர உளத்தூய்மையுடன் பிரார்த்திப்போம்.
என்றும் அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்
நன்றி : உணர்வு 5:06
0 Comments:
Post a Comment
<< Home