Tuesday, August 08, 2006

களவாடப்பட்ட உணர்வின் கள்ளத்தனம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தமுமுகவினரிடமிருந்து களவாடப்பட்ட 'உணர்வு' வார இதழ் சுடச்சுட செய்தி தருகிறோம் என்ற பெயரில் தமுமுகவினர் பற்றி பொய்யான செய்திகளைத் தருவது ஒரு புறம் இருந்தாலும், தமுமுகவினர் சம்பந்தப்படாத செய்திகளைக் கூட கொஞ்சம் தூக்கலாக எழுதி படிப்பவர்களை மடையர்களாக ஆக்கிவருகிறது.

அனைத்துத் தவ்ஹீது கூட்டமைப்பு என்ற பெயர் கொண்ட தவ்ஹீது அமைப்பை ததஜ என்ற அரசியல் கட்சியாக பெயர் மாற்றம் செய்து கொண்ட பிறகு பிஜே, பல தில்லுமுல்லுகளை செய்து வந்தார். அதில் ஒன்று தான் சவூதி அரேபியாவில் இருக்கும் தஃவா சென்டர் சம்பந்தப்பட்ட விஷயங்களாகும்.

சவூதி அரேபியாவில் தஃவா சென்டரில் தமிழ் பிரிவு நடத்தும் ஒருநாள் நிகழ்ச்சிகள் தொடர்பாக 'உணர்வு' வார இதழில் விளம்பரம் கொடுப்பது வழக்கம். முன்பெல்லாம் எப்படி விளம்பரம் வடிவமைக்கப்பட்டு கொடுக்கப்படுகிறதோ அப்படியே அது வெளிவரும்.

பிஜே தமுமுகவிலிருந்து பிரிந்த பிறகு உணர்வு வார இதழில் வெளிவந்த விளம்பரங்களில் ஒருநாள் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் வித்தியாசமாக வெளிவந்தது. சவூதியில் இல்லாதவர்களுக்கு வேண்டுமானால் அதன் எதார்த்த நிலை தெரியாமல் இருக்கலாம். ஆனால், சவூதியில் உள்ளவர்கள் அந்த விளம்பரங்களைப் பார்த்து விட்டு காரித் துப்பினார்கள் என்பது தான் உண்மை.

தஃவா சென்டர் நடத்தும் ஒருநாள் நிகழ்ச்சியை ததஜவினர் தான் நடத்துகிறார்கள் என்று திரித்து விளம்பரம் செய்தார்கள். அதற்கு கடுமையான எதிர்ப்பு அலை கிளம்பியவுடன் கொஞ்சம் அடக்கி வாசிக்கலானார்கள்.

ஆனாலும் தனது தில்லுமுல்லு திருட்டுத்தனத்தை, எதிர்ப்பிற்கு பிறகும் கைவிட வில்லை. தஃவா சென்டர் தரும் விளம்பரத்தை அப்படியே போட்டு விட்டு அடிக்குறிப்பு எழுதினார்கள். எப்படி தெரியுமா? இதைத்தான் முக்கியமாக கவனிக்க வேண்டும்.

'டிஎன்டிஜே நடத்தும் ஒருநாள் நிகழ்ச்சி வெற்றி அடைய வாழ்த்துகிறோம்' என்று அடிக்குறிப்பு எழுதினார்கள். ஏதோ சவூதிஅரேபியா தஃவா சென்டர்களிலெல்லாம் டிஎன்டிஜே யின் ஆட்சி நடப்பதாக காட்டிக் கொண்டார்கள்.

இப்படித்தான் சமீபத்திய உணர்வு 10:47 ல் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. 'வரதட்சணை இல்லாத் திருமணத்திற்கு எதிர்ப்பு' -நேரடி ரிப்போர்ட் என்று தலைப்பு தரப்பட்டுள்ளது.

இந்த தலைப்பிற்கும் இதன் கீழ் தரப்பட்டிருக்கும் மேட்டருக்கும் சம்பந்தமே இல்லை. வரதட்சணை கொடுத்துத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எதிர் தரப்பினர் கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் ததஜவினர்.

அதுசரி, இந்தத் திருமணம் - 'நபிவழித் திருமணமா?' அல்லது 'வரதட்சணையில்லா திருமணமா?' எது சரி. வரதட்சணை இல்லாத திருமணம் என்றால் அந்த விஷயம் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். குராபிகளின் திருமணங்களில் கூட பல திருமணங்கள் வரதட்சணை இல்லாமல் நடக்கத்தான் செய்கின்றன. அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. உண்மையைச் சொல்லுங்கள்! இந்த தலைப்பு இடப்பட்டதற்கான நோக்கம் என்ன? தவ்ஹீது திருமணம், நபிவழித் திருமணம் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் வரதட்சணை இல்லாத் திருமணம் என்று கூற ஆரம்பித்து இருப்பதன் நோக்கம் என்ன?

'மணமக்கள் மாலை அணிய வேண்டும்' என்று தான் ஆவணியாபுரம் ஜமாஅத்தினர் கூறியிருக்கிறார்கள். (பார்க்க உணர்வு வார இதழ்) இதை ஒரு பெரிய விஷயமாக ஆக்க முடியாது என்பதை உணர்ந்த 'உணர்வு' பத்திரிக்கையினர் இல்லாத விஷயத்தை இருப்பதாக கதை கட்டியிருக்கிறார்கள்.

'திருமணம் எனது சுன்னத்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், அதனால் எப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று அவர்கள் சொன்னார்களோ அப்படித்தான் செய்ய வேண்டும். ததஜ என்பது அரசியல் கட்சியாக இருப்பதால் தான் 'நபிவழித் திருமணம்' என்று எழுதுவதற்கு கை கூசுகிறதோ? எழுதுங்கள்! எழுதுங்கள்! வரதட்சணையில்லாத திருமணம் என்றே எழுதுங்கள்.

'வரதட்சணை வாங்க வேண்டும், அப்போது தான் ஊர் ஓலை கொடுப்போம், நிக்காஹ் ரிஜிஸ்டர் கொடுப்போம் என்று நாங்கள் எப்போது சொன்னோம் என்று ஊர் ஜமாஅத்தினர் கேட்கிறார்கள்?

உணர்வில் வெளியிடப்பட்ட செய்திபடி, ததஜ எனும் அரசியல் கட்சியின் நிர்வாகிகள் மட்டுமே, வரதட்சணையில்லா திருமணம் நடத்தக்கூடாது என்று ஜமாத்தினர் சொன்னதாக கூறப்படுகிறது. இதை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது.

வரதட்சணையில்லாத திருமணம் நடத்தக்கூடாது என்று நீங்கள் சொன்னீர்களா? என்று ஊர் ஜமாஅத் நிர்வாகிகளிடம் இவர்கள் கேட்கவும் இல்லை, அவர்கள் இது விஷயமாக தப்பித்தவறி கூட பதில் எதும் கூறவில்லை.

மாப்பிள்ளை கூட 'வரதட்சணை வாங்கினால் தான் திருமணம் செய்து வைப்போம்' என்று ஊர் ஜமாஅத்தினர் கூறியதாக உணர்வில் எந்த தகவலும் இடம் பெறவில்லை.

வரதட்சணையில்லாத திருமணம் நடத்தக் கூடாது என்று சொல்வது உணர்வின் பில்ட்அப்.

'உணர்வு' உள்ளதை உள்ளபடி எழுத வேண்டும் என்பது தான் எம்முடைய, வாசகர்களுடைய, தமிழ்நாடு மக்களுடைய எதிர்பார்ப்பாகும். உணர்வில் உண்மைதான் வெளிவரும், பொய் வெளிவராது என்ற நிலைமை மாறி, உணர்வில் உண்மையே வெளிவராது என்ற நிலைக்கு வந்திருப்பது மனவருத்தத்தை தருகிறது.

அதற்காக ஊர் ஜமாஅத்தினரின் நடவடிக்கையில் மாலை அணிந்தால் தான் திருமணம் செய்து வைப்போம் என்ற போக்கை நாம் கண்டிக்கிறோம்.

நபி (ஸல்) காலத்தில் இவ்வளவு பூக்களுக்கு எங்கே செல்வார்கள்?, நவீன காலத்தில் இப்பொழுது கூட சவூதி அரேபியாவுக்கு பூக்கள் எல்லாம் விமானம் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் மாலை அணிந்திராத போது நாம் ஏன் அணிய வேண்டும் என்று ஊர் ஜமாஅத்தினர் யோசிக்க வேண்டும்.

தவ்ஹீது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறும் ஊர் ஜமாஅத்தினருக்கு எமது நன்றியை தெரிவிப்பதோடு, மாலை அணியும் விஷயமும் ஒரு பொருட்டே அல்ல என்பதையும் சிந்திக்க வேண்டும்.

மாலை அணிவது மட்டும் மாற்றுமத கலாச்சாரமாக இல்லாமல் இருந்தால் நாமும் மாலை அணியுமாறு பரிந்துரை செய்திருப்போம், ஏனெனில் அது ஒரு நறுமணப் பொருள் அவ்வளவு தான். மாற்றுமதத்தினர் தனது மத சடங்குகளாக மாலையை பயன்படுத்துவதால் ஹதீஸின் அடிப்படையில் அதை வேண்டாம் என்கிறோம். அதற்கு பதிலாக நறுமணப் பொருள்களான அத்தர், செண்ட் வகைகளை உபயோகிப்பது நபிவழியும் சஹாபாக்களின் வழிமுறையாகும்.

மிகச் சிறிய அர்ப்ப விஷயத்தை பூதாகரமாக்கி மதரஸாக்களை கைப்பற்ற முயற்சிப்பது, பள்ளி வாயில்களை கைப்பற்ற முயற்சிப்பது, அல்லது இழுத்து மூடுவது, பிரச்னையின்றி அண்ணன் தம்பிகளாக பழகும் ஊர்களில் மார்க்கத்தின் பெயரால் பகையை மூட்டி கலவரங்களை மூட்டிவிடுவது ததஜவினருக்குரிய பிறவிக்குணமாகும். இவர்களை புரிந்து கொண்டு ஊர் ஜமாஅத்தினரே! எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.

இப்னு ஃபாத்திமா 08.08.2006


0 Comments:

Post a Comment

<< Home