Saturday, April 23, 2011

வெளிச்சம் வரும் நேரம்: உரத்த சிந்தனை


வெளிச்சம் வரும் நேரம்: உரத்த சிந்தனை, எம்.முகமது அனீஸ்


"விடியும் வேளை வரப்போகுது, தர்மம் தீர்ப்பை தரப்போகுது...' என, இனிதொரு மாற்றம் வேண்டி மக்கள், தங்கள் ஜனநாயகக் கடமையை அமைதியுடன் நிறைவேற்றிய திருப்தியில் காத்திருக்கின்றனர்.


இந்த தேர்தலில் மறக்க முடியாத நிகழ்வு ஒன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் அரங்கேறியது. அமைச்சர் சுப.தங்கவேலன் போட்டியிடும் திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட பிச்சங்குறிச்சி கிராமத்தில் ஓட்டுக் கேட்க, சுப.தங்கவேலன் வருகிறார் என்றதும், அக்கிராம மக்கள், அவரை ஊருக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பதற்காக, சாலையை வெட்டிப் போட்டனர். அதனால் ஏற்பட்ட அடிதடியில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த நடிகரும், தி.மு.க., எம்.பி.,யுமான ரித்திஷ் குமார் ஈடுபட்டதால், உடனடியாக கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். ஆளுங்கட்சி எம்.பி., தேர்தல் பிரசார ரகளையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதோடு, ராமநாதபுரம் மாவட்ட எல்லைக்குள்ளேயே நுழையக் கூடாது என, ஐகோர்ட் எச்சரித்து, ஜாமீன் வழங்கிய சம்பவம், தமிழக தேர்தல் கண்டிராத நிகழ்வு. சரி... ஒரு
அமைச்சர் வேட்பாளரையே, குக்கிராமத்தினர் அனுமதிக்காதது ஏன், அதற்கான பின்னணி என்ன என ஆராய்ந்தால், கண்ணீர் வரும். சுப.தங்கவேலன், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைச்சர் பொறுப்பில் இருந்தும், மாவட்டத்தில் குறிப்பிடும்படியான எந்த நலப்பணியையும் செய்யவில்லை.


தற்சமயம் அவர் போட்டியிடும் இந்த திருவாடானை தொகுதியில், அடிப்படை வசதிகளுக்காக ஏங்கி நிற்கும் கிராமங்கள் ஏராளம். அந்த கிராமங்களில் ஒன்று தான், "பிச்சங்குறிச்சி!' குடிநீர், சாலை, சுகாதாரம், போக்குவரத்து வசதி என, எதையுமே கண்டிராத அக்கிராமத்தினர் வாழ்க்கை பரிதாபகரமானது. குளிக்கவும், குடிக்கவும் ஒரே குளத்தையே பயன்படுத்தும் அவலம், அவசரத்திற்கு, 5 கி.மீ., தூரத்தில் இருக்கும் சோழந்தூர் என்ற ஊருக்கு வந்து தான், பஸ் ஏற வேண்டும். இன்றைய நவீன காலத்திலும், இதுபோன்ற பரிதாபகரமான கிராமங்கள் இன்னும் ஏராளமாய் உள்ளன. ஐந்து ஆண்டுகளாக அமைச்சராய் இருந்தவர், இக்கிராம மக்களை திரும்பிக் கூட பார்க்காத சூழ்நிலையில் தான், வேட்பாளராய் ஓட்டுக் கேட்டு போய், கடைசியில் ஓடி ஒளிந்திருக்கிறார். "அடப்பாவிகளா!' என, சொல்லத் தோன்றுகிறது. பின் எப்படி மாற்றம் வேண்டும் என, மக்கள் கேட்காமல் இருப்பர்? ஆனால், "எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற கதை போல், தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை, "எமர்ஜென்சி' என, விமர்சித்ததால், ஆளுங்கட்சியினர் தங்களைத் தாங்களே தோலுரித்துக் காட்டியுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


ஆதிக்க நாடுகளில் முதன்மை நாடான, அமெரிக்காவிலேயே, அரசியல் மாற்றங்களை அனைவரும் கவரும் வண்ணம் கொண்டு வந்த, எளிமைமிக்க ஒபாமாவின் மந்திர வார்த்தையே, "நமக்கு மாற்றம் தேவை' என்பது தான். சமீபகாலமாக, தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனித்து வந்த அறிஞர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல விரும்பிகள், கல்லூரி மாணவர்கள், ஏன், பாமர மக்கள் வரை, அனைவரும் மனம் உருக விரும்பிய வார்த்தை, "நமக்கு மாற்றம் தேவை' என்பது தான். மாற்றி யோசிக்க வேண்டும்; என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என, இன்றைய ஆட்சியாளர்கள் துளிக்கூட சிந்திக்காமல், கடந்த தேர்தலில் மக்களை மயக்கிய இலவசங்களையே
பிரதானப்படுத்தி, இந்த தேர்தலிலும் அறிவித்து மகிழ்ந்தது வேதனை அளிக்கக் கூடிய விஷயங்கள். "ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டாலே தமிழகம் ஒளிர்ந்துவிடும்; இலவசமாய் "டிவி' கொடுத்தாலே தமிழக குடும்பங்கள் செழித்துவிடும்' என, குருட்டாம்போக்கில் எண்ணிய ஆட்சியாளர்கள், மக்களின் அடிப்படை பிரச்னைகளையோ, நடுத்தர ஏழை மக்களின் வாழ்வாதாரங்களைப் பெருக்கவோ, நாட்டை பிரகாசமான வழியில் கொண்டு செல்லும் எண்ணங்கள்
கொண்ட செயல்பாடுகளையோ, கொஞ்சமும் கொண்டிராமல், தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் உயர வைத்து, அழகு பார்த்து, மக்கள் மனங்களில் இன்று தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது உண்மை.


இந்த ஆட்சியாளர்களிடம் மக்கள் என்ன எதிர்பார்த்தனர்? சென்னை அண்ணாநகரில் பங்களா கேட்டனரா அல்லது சென்னை முழுக்க வீடு கட்ட நிலம் கேட்டனரா? மீளாத துயரம் தந்த மின்வெட்டிலிருந்து விடுதலை கேட்டனர். தமிழகத்தில், 2008ன் துவக்கத்தில் இருந்து, மின்வெட்டு படிப்படியாக அதிகரித்தது. பற்றாக்குறையை சமாளிக்க, நகரில் இரண்டு மணி நேரமும், புறநகரில் மூன்று மணி நேரமும், மின்வெட்டை கொண்டு வந்தனர். ஆனால், தமிழக கிராமப்பகுதிகளிலோ, எந்த நேரமென்று குறிப்பிடாமல், இஷ்டத்துக்கு மின்வெட்டு வேட்டை நடத்தினர்; ஏன், இன்று வரை நடத்திக் கொண்டிருக்கின்றனர். மின் உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என தெரியாத அமைச்சரையும், அவர் சார்ந்த அரசையும், ஆண்டவன் கூட எப்படி மன்னிப்பான்? அண்ணாதுரையின் அறிவுப் பாசறையில் உருவான தி.மு.க.,வுக்கு, இன்று தேர்தல் பிரசாரம் செய்ய, ஒரு காமெடி நடிகர் தேவைப்படும் அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்ட நிலை, பரிதாபமானது தான். "ஒரு ரூபாய் அரிசி திட்டத்தை, இந்தியாவே போற்றுகிறது' என, பெருமிதத்தோடு பிரசாரம் செய்தவர்கள், 1.76 லட்ச கோடி ரூபாய் ஊழலை உலகமே தூற்றுகிறது' என்றும் அல்லவா சொல்லியிருக்க வேண்டும்.


சமீபத்தில், தேர்தல் பிரசாரத்திற்காக ராமநாதபுரம் வந்த பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, "குஜராத்தின் மோடி ஆட்சிக்கும், இங்கே நடக்கும் கருணாநிதி ஆட்சிக்கும் ஒரு ஒற்றுமையுள்ளது... மோடி, குஜராத்தை சிங்கப்பூராக மாற்றுகிறார்; கருணாநிதி அடுத்து வந்தால், சிங்கப்பூரையே விலைக்கு வாங்குவார்' என, தமிழக பிரசாரத்தில் கூறியது, காமெடியாக இருந்தாலும், மக்களை சிந்திக்கவும் வைத்தது.


தமிழக மக்கள், தங்கமான உள்ளம் படைத்தவர்கள். ஆட்சியாளர்கள் கோடீஸ்வரர்களாக இருந்தாலும், குபேரர்களாக இருந்தாலும், கல்வித் தந்தைகளாக இருந்தாலும், பெரும் முதலாளிகளாக இருந்தாலும், பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு எல்லாம், மின்வெட்டு, விலைவாசி ஏற்றம் ஆகியவற்றில் இருந்து விடுதலையும், அமைதியான சமூக சூழலையும் தான்! அடுத்து வரும் முதல்வர், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதல் வேலையாய், மின் உற்பத்தியில் தமிழகம் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவிலக்கு கொள்கையை மாநிலத்தில் படிப்படியாகக் கொண்டு வந்து, மக்களைக் காக்க முயற்சி செய்ய வேண்டும். விண்ணை முட்டும் விலைவாசி ஏற்றங்களை கட்டுப்படுத்தி, விக்கித்து நிற்கும் மக்களுக்கு விடியல் தர வேண்டும். அமைதியான சூழலில் மக்கள் நிம்மதியாய் வாழ, புதிய பாதை அமைக்க வேண்டும். புதிய விடியலை நோக்கி, வழி மீது விழி வைத்துக் காத்திருக்கின்றனர் மக்கள். email: sarianees@gmail.com


எம்.முகமது அனீஸ், சமூக ஆர்வலர்


Source: dinamalar

Saturday, April 02, 2011

அழகிரி நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரிக்கு அடி


அழகிரி நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரிக்கு அடி

03-04-2011

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நிகழ்ச்சியில், பணம் பட்டுவாடா நடக்கிறதா என விசாரிக்க சென்ற தேர்தல் அதிகாரி காளிமுத்துவை தி.மு.க.,வினர் தாக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 4 மணிக்கு, வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி கோயிலுக்கு மு.க.அழகிரி வந்தார். கோயில் கதவுகள் அடைக்கப்பட்டு, உள்ளே கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் பணம் பட்டுவாடா நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, மேலூர் தேர்தல் அதிகாரி காளிமுத்து மற்றும் அலுவலர்கள், வீடியோ கிராபருடன் அங்கு வந்தனர். அப்போது, கோயிலில் தீபாராதனை செய்த போது தட்டில் அழகிரி 100 ரூபாய் போட்டதை வீடியோவில் பதிவு செய்தனர். இதை கவனித்த அவர், "யாருய்யா வீடியோ எடுக்கிறது?' என கேட்க, அருகில் இருந்த மதுரை துணை மேயர் மன்னன், மேலூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் ஆகியோர், "கேமராவை கொடுத்துட்டு வெளியே போங்கய்யா' என்றனர். பயந்துபோன வீடியோகிராபர், கேமராவை தேர்தல் அதிகாரி காளிமுத்துவிடம் கொடுத்தார். பின், அதிகாரிகள் கிளம்பும்போது, காளிமுத்துவின் தலையை மூவரும் தாக்கினர். காளிமுத்துவை அழைத்துக் கொண்டு அதிகாரிகள் ஜீப்பில் தப்பினர்.


இது தொடர்பாக காளிமுத்து கீழவளவு போலீசில் புகார் செய்தார். மு.க.அழகிரி, மன்னன், ரகுபதி, திருஞானம் உட்பட பலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 (ஐந்து பேருக்கு மேல் கூடுதல்), 341 (வழிமறித்து தடுத்தல்), 332 (அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அடித்தல்), 188 (அரசு உத்தரவு, விதி மற்றும் தடையை மீறுதல்) பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப் பதிவு செய்தார். தாக்குதலை கண்டித்து, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சதாசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாக்கியவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் கைது செய்யவேண்டும், என கோஷமிட்டனர்.


மாநில துணைத்தலைவர் ஞானகுணாளன் கூறியதாவது: தேர்தல் கமிஷன் பல புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அதை நாங்கள் பின்பற்றி, விதிமீறலை கண்காணிக்கிறோம். வெள்ளலூரில் அனுமதியின்றி கூட்டம் நடத்துவதை வீடியோ படம் எடுக்க தாசில்தார் சென்றார். அவரை தாக்கியுள்ளனர். எனவே, நாங்கள் தேர்தல் பணியை புறக்கணிக்கலாமா? என ஆலோசனை நடத்துகிறோம். கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.


Dinamalar

Sunday, March 27, 2011

ஜெயாவை இஸ்லாமியர்கள் நம்ப மாட்டார்களா?

தமிழக முதல்வர் கருணாநிதி: சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கு ஆதரவாகவும் பேசிவிட்டு, இப்போது, "முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவேன்' என ஜெயலலிதா கூறுவதை, இஸ்லாமியர் நம்ப மாட்டார்கள்.


டவுட் தனபாலு: விடுங்க சார்... குஜராத் கலவரத்தின் போது, பா.ஜ.,வுடன் கூட்டணியிலயும் இருந்துட்டு, அந்த கலவரத்தை, "அது அந்த மாநில பிரச்னை'ன்னு சொன்ன உங்களையே இஸ்லாமியர் நம்பும் போது, அவங்களை நம்ப மாட்டாங்களா...?


நன்றி: தினமலர் 28.03.௨௦௧௧