Friday, March 31, 2006

நான்காம் கிளாஸ் கூறும் சட்ட விளக்கம்

தேர்தல் திருவிழா தமிழகத்தில் களை கட்டிவிட்டது.

தமிழக முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்று தனியார் தொலைகாட்சியில் ததஜ தலைவர்
தோன்றி உரையாற்றினார்.

இதுநாள் வரை மார்க்க பிரச்சனைகளானாலும், சமுதாய பிரச்சனைகளானாலும், மிகத்
தெளிவாக பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் உரையாற்றும் அவர், தற்சமயம் ஏன்
இந்தளவு தள்ளாடினார் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

அவரது ஒரு மணி நேர உரையில், காங்கிரஸ் முதல் திமுக வரை சகலரையும் சகட்டு
மேனிக்கு விளாசியவர், அதிமுகவிற்கு மட்டும் சாமரம் வீசியது ஏன் என்பது தான்
விளங்க வில்லை.

முடிவாக அதிமுக அணியை ஆதரிக்க வேண்டும் என்று அனைவருக்கும் வேண்டுகோள்
விடுத்தார். ஆனால் ஏன் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு தெளிவான விளக்கம்
எதையுமே எடுத்துக் கூறவில்லை.

திரும்ப திரும்ப மற்ற கட்சியினரை சாடியவர், அதிமுக அரசு அந்திம காலத்தில்
அறிவித்த ஆணையை அளவுக்கதிகமாக புகழ்ந்தார்.

நமது கேள்வியெல்லாம்,

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, ஜெயலலிதாவை (அதிமுகவை) எதிர்க்க எதையெல்லாம்
காரணமாக கூறினாரோ அவற்றில் ஒரே ஒரு அம்சம் குறைந்து, அதே
சமயம் எண்ணற்ற புதிய அம்சங்கள் இணைந்திருக்கும் வேளையில் அதிமுகவை ஆதரிக்கச்
சொல்வதன் மர்மம் என்ன?

பாராளுமன்றத் தேர்தலின் போது பிஜேபி உடன் அதிமுக இணைந்திருந்தது. இந்தத்
தேர்தலில் பிஜேபி யை விட்டு விலகியுள்ளது உண்மை. ஆனால் பிஜேபி
கொள்கையிலிருந்து விலகியுள்ளாரா என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் உண்மை.

அப்பாவிகளுக்கு கூட விசாரணையைத் தொடங்காமல், ஜாமீன் அளிக்காமல் சிறையிலேயே
சித்திரவதை செய்வது, மதமாற்றத் தடைச் சட்டத்தை இன்றுவரை வாபஸ் பெறாமல்
இருப்பது போன்றவை அவரது முஸ்லிம் எதிர்ப்பு சாதனையில் 2004க்குப் பிறகு
சேர்க்கப்பட வேண்டியவைகள்.

இத்தனைக்குப் பிறகும் அதிமுகவை ஆதரித்து ஆக வேண்டியது அவசியம் என்பதற்கு ததஜ
தலைவர் கூறும் காரணம் சர்ச்சைக்குரிய அந்திமகால அரசு ஆணை.

இந்த அரசு ஆணையின் அவலட்சணத்தை பலர் எடுத்துரைத்து விட்டனர். அவர்களில்
குறிப்பிடத்தக்கவர்கள் சகோ. சிராஜுத்தீன், பாஸ்டர் சின்னப்பா மற்றும்
கருஞ்சட்டை தோழர் மானமிகு வீரமணி அவர்கள். இவர்களில் சகோ. சிராஜுத்தீனும்
வீரமணியும் சட்டம் பயின்றவர்கள்.

சட்டம் பயின்றவர்கள் இந்த அரசு ஆணையின் குறைபாடுகளை சுட்டிக் காட்டும் பொழுது,
பள்ளிப் படிப்பை தாண்டாத தலைவர், தனது வாதத்திறமையால் சப்பைக்கட்டு கட்டுவது
ஏன்? விளக்க வேண்டியது அவரது கடமை.

இது வரை அவரது தரப்பிலிருந்து படித்த மேதைகளோ அல்லது சட்ட வல்லுனர்களோ இந்த
ஆணையை ஆதரித்து பேசாததிலிருந்தே, இந்த ஆணை ஒரு குப்பைதான் என்பது ஐயமின்றி
தெளிவாகிறது.

சமூகத்திற்கு தீங்கிழைப்பவர்களை அவர்களது செயல்களைக் கொண்டே அடையாளம் காட்டிய
வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்.

அன்புடன்

உம்மு ஹாஜரா 01.04.2006

Tuesday, March 28, 2006

ஒரு பொருளுக்கு ஒரு விலை:

தமிழக முஸ்லிம் வாக்காளர் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் பரபரப்போடு இத்தேர்தலை எதிர் நோக்குகின்றது.

காரணம் கடந்த 2004, மார்ச் 21 இல் தஞ்சை தரணியை திணற வைத்த சமுதாயம், ஒரு மாத காலத்திற்குள் ஆட்சி அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சிக்கு சில தலைவர்களை பலி கொடுத்த காரணத்தால் சற்று திணறிப் போனது.

ஆனாலும், அவ்வமயம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற பொது அம்சத்தின் அடிப்படையில், ஒற்றுமையாக காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து ஆட்சியில் அமர வைத்தது.

ஆனால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அத்தகைய ஒற்றுமையான போக்கை காண முடியவில்லை. காரணம் சுயநலம். காசுக்காக விலை போனவர்கள் தங்களது விசுவாசத்தை காட்ட வேண்டுமல்லவா. எனவே ஒரு கூட்டம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்புவதை தெரிவு செய்து கொள்ள எவருக்கும் உரிமையுண்டு. ஆனால் அவரவரது விருப்பத்திற்கிணங்க சமுதாயத்தை அடகு வைக்க எண்ணினால், வெகு விரைவில் சமுதாயம் அவர்களை தூக்கி எறிந்து விடும்.

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள தலைவர் ஒரு வாதத்தை எடுத்து வைக்கிறார். அவருக்கு எப்போதும் வாத நோய். எதற்கும் தீர்வு (வி)வாதத்தில் உண்டு என்று நம்புகிறவர் அவர். வாத திறமையால் அனைவரையும் வீழ்த்தி விடலாம் என மனப்பால் குடிப்பவர். எதற்கும் விவாதிப்பார். விவாத களத்தில் எதிராளியை மட்டம் தட்ட எந்த அளவுக்கும் அநாகரீகத்தை கையாள தயங்காதவர். இதற்காக பலர் அவரை ஒதுக்கியதுண்டு. அச்சமயங்களில் தான் வெற்றி பெற்றதாக சுயதம்பட்டம் அடிப்பார். சரி எந்த அளவுக்குத்தான் செல்வார், பார்க்கலாம் என துணிந்து வருபவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுபவர்.
அதெல்லாம் இருக்கட்டும். இப்பொழுதுள்ள பிரச்சனையை பார்ப்போம்.

இத்தகைய பின்னணியுள்ள அந்த தலைவர் அதிமுகவை ஆதரித்து தனியார் தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து ஏராளமான ஈமெயில்களும் வருகின்றன. வழக்கம் போல விவாத அழைப்புக்களை அள்ளித் தெளித்து விட்டு, திமுகவை எதிர்ப்பதற்கு தர்க்க ரீதியான ஒரு வாதத்தையும் எடுத்து வைக்கிறார். (இது அவரது மேனரிஸம். இவ்வாறு சொல்லிவிட்டால் பின்னர் அவரது வார்த்தைகள் அனைத்தும் உண்மையாகத்தான் இருக்கும் என நம்ப வைக்க முயலும் யுக்தி இது.)

அதன்படி அவர் எடுத்து வைக்கும் வாதம்: ஒரு பொருளுக்கு ஒரு விலைதான்.


அதாவது, இடஒதுக்கீடு தருவோம் என திமுக தலைமையிலான அணி பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு கொடுத்தனர். அதற்காக முஸ்லிம்களின் வாக்கு (ஓட்டு)கள் அனைத்தையும் வாரி வழங்கி விட்டோம். எனவே அதே வாக்குறுதியின் பேரில் மீண்டும் அந்த அணிக்கு வாக்களிக்கக் கூடாது. ஏனெனில் நாம் முஸ்லிம்கள் நீதமாக நடந்து கொள்ள வேண்டும். எனவே தற்சமயம் ஆணையம் அமைத்துள்ள அதிமுகவைத்தான் நாம் ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விலை போனதாலோ, காசு வாங்கியதாலோ என்னவோ தற்பொழுது இது போன்ற உதாரணங்களையே கையாளுகிறார். குலுங்கிய கும்பகோணத்தில் கையில காசு, வாயில தோசை என்றார். தற்சமயம் ஒரு பொருள் ஒரு விலை என்கிறார். என்ன விலைக்கு விற்றார்? எவ்வளவு காசு பெற்றார்? என நாம் விவாதிக்க வரவில்லை.

அரசு அறிவித்த (?) ஆணையம் முறையானதா? பயனுள்ளதா என பலரும் கருத்து தெரிவித்து அது ஒரு குப்பை என தெளிவுபடுத்தி விட்டதால், அவர் எடுத்து வைத்த வாதத்தை மட்டும் நாம் அலசுவோம்.

ஏனெனில் கடந்த சட்டசபைத் தேர்தலின் போது கனம் ஜெ.ஜெ அவர்கள் கூட இதே வாக்குறுதியைத்தான் அளித்தார். அவரை ஜெயிக்க வைத்தோம். ததஜ தலைவர் வாதப்படி கணக்கு நேர் செய்யப்பட்டு விட்டது. (பொய்யான வாக்குறுதிக்காக விலைகொடுத்து ஏமாந்தோம்.) அதன்பிறகு முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த ஜெ.ஜெ. வீட்டுக்குப் போகும் வழியில் வீசிவிட்டுப் போன ஆணைய அறிவிப்பு (இன்று வரை அரசாங்க கெஸட்டில் வெளியிடப்படாத அபூர்வ அறிவிப்பு)க்காக பொன்னான ஓட்டுக்களை வீணாக்கலாமா?

அவரது வாதப்படி எடுத்துக் கொண்டாலும், மத்தியில் திமுக கூட்டணி அளித்த வாக்குறுதிக்காக நாம் வாக்களித்த பின் மத்திய அரசு, இங்குள்ள ஜெ.ஜெ. வைப் போல் தனது பதவிக்காலம் முழுக்க வாளாவிருக்க வில்லையே. நமக்களித்த வாக்குப் படி சிறுபான்மையினரின் சமூக பொருளாதார மேம்பாட்டை ஆய்வு செய்ய நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் குழு அமைத்து அதனை முடுக்கி விட்டு உள்ளனரே.

நம்மிடம் ஏமாற்றி ஓட்டு வாங்கிய ஜே.ஜே அதன்பின் இது போன்ற முன்முயற்சி எதுவும் எடுத்தாரா? இல்லையே. பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு ஆள் அனுப்பிய பாவத்திற்கு பகிரங்க மன்னிப்பு கொரியதால் நாமும் பெருந்தன்மையாக மன்னித்து, வருங்காலம் வளமாக அமைய தனி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றோம். கண்டிப்பாக தருவேன் என்றார். தந்தாரா இலலையே.

நாம் கேட்காமலேயே நமது வாழ்வுரிமை மாநாட்டில், பிஜேபி உடன் கூட்டு சேர்ந்த பாவத்திற்கு மன்னிப்பு கோரினார். மன்னித்தோம். என்ன நடந்தது 2004 தேர்தலில் பிஜேபி உடன் கூட்டுச் சேர்ந்தார். அதற்கு பரிசாக இப்பொழுது ததஜ - அதிமுகவிற்கு ஓட்டு கேட்கிறதா?

பாபரி மஸ்ஜித் உடைப்பிற்கு ஆள் அனுப்பியதற்கு பிராயசித்தம் தேடினார். மன்னிப்பு கிடைத்து கூடவே ஓட்டும் கிடைத்ததும், ராமர் கோவில் இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது? என திருவாய் மலர்ந்தருளினார். இதனால் தான் ததஜ அதிமுகவிற்கு ஓட்டுப் பேடச் சொல்கிறதோ.

முஸ்லிம்களின் பிரச்சனைகளை பரிவோடு பரிசீலிப்பேன் என்று பசப்பினார். ஆனால் வதந்தியின் மூலமாக வன்மத் தீ வளர்த்து முஸ்லிம்கள் நரமாமிச குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நேரடி கண்காணிப்பில் தீக்கிரையாக்கப்பட்ட போது, சிறுபான்மையினரின் நலன் குறித்து கவலைப்படுவோர், பெரும்பான்மையினர் பாதிக்கப்பட்ட போது ஏன் குரல் எழுப்பவில்லை என குமுறி வெடித்தாரே.... இதற்கு நன்றிக் கடனாகவா ததஜ தலைமை அதிமுகவிற்கு ஓட்டுப் போடச் சொல்கிறதோ.

இத்தோடு விட்டாரா அச்சுறுத்தல், அடாவடி மூலம் மீண்டும் முதலமைச்சரான நரமாமிச பட்சிணி நரேந்திர மோடியின் முடிசூட்டு விழாவிற்கு விசேஷ விமானம் எடுத்துக் கொண்டு ஓடோடிச் சென்று வாழ்த்தினாரே... இதனை அங்கீகரிக்கத்தான் அதிமுகவிற்கு ததஜ தலைமை ஓட்டுக் கேட்கிறதோ.

யார் அதிகம் அநீதி இழைத்தவர் என பட்டியலிடலாமா என ததஜ தலைவர் படு சூடாக கேட்கிறார். ஆனால் பட்டியலிடும் போது 1999 க்கு முன் நடந்தவைகளுக்கு ஜெ.ஜெ மன்னிப்புக் கேட்டதால் விட்டு விடலாம் என்கிறார். விட்டு விடுவோம். 2004 ல் திமுக இட ஒதுக்கீடு சம்பந்தமாக தேர்தல் அறிக்கை வெளியிட்டதால் அதற்கு முன் நடந்தவைகளை மன்னித்து ஆதரவளித்தோம். அவரும் சேர்ந்திருந்ததே இம்முடிவுகள் எடுக்கப்பட்டன.

2001 ல் இனி சேரவே மாட்டேன் என்று கூறிய ஜெ.ஜெ 2004 இல் பிஜேபியுடன் கூட்டணி கண்டாரே அதற்கு நன்றிக்கடனாக அதிமுகவிற்கு ஓட்டுப்போட ததஜ தலைமை கட்டளையிடுகிறதோ.

2001 முதல் 2006 வரை ஆட்சியிலிருந்த ஜெ.ஜெ முஸ்லிம்களுக்காக, முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்காக எந்த அளவு பாடுபட்டார் என்றால், பாரம்பரியமிக்க முஸ்லிம் வேட்பாளர்களையே தமது பிரதிநியாகக் கண்டிருந்த வாணியம்பாடியில் முஸ்லிம் அல்லாத ஒருவரை எம் எல் ஏ வாக்கி அழகு பார்த்தாரே அதற்காகத் தான் அதிமுகவிற்கு ஓட்டுப் போடச் சொல்லி ததஜ தலைமை நம்மை நிர்பந்திக்கிறதோ.

1999 க்கு முன் நடந்த தவறுகளை மன்னித்து 2001 தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ததினால், 2001 முதல் 2006 வரையிலான கால அளவில் தம்மால் முடிந்த அளவு முஸ்லிம்களை வஞ்சித்தும், நிந்தித்தும், நிர்கதியாக்கியும், பரிகசித்தும், பழிவாங்கியும் ஆணவத்தோடு நடந்து கொண்ட ஜெ.ஜெ அந்திம காலத்தில் புதுப்பித்து வெளியிட்ட ஆதாயமில்லாத ஆணயத்திற்கு பகரமாக மீண்டும் மன்னிக்க முடியுமா. மீண்டும் அதிமுகவிற்கு வாக்களிக்க முடியுமா? மீண்டும் அவருக்கு முடி சூட்ட முடியுமா?

ஒருபோதும் முடியாது என்பது தான் ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலாக இருக்க முடியும். இதற்கு மாற்றமான முடிவெடுத்தால் நிகழ்காலம் நிந்திப்பதோடு, வருங்காலத்திலும் வருந்த வேண்டியது வரும். அதுதான் 2001 முதல் 2006 வரை நடந்தது. இதற்கு பின்னும் பாடம் படிக்க வேண்டுமா?

சகோதரர்களே! இவ்வளவுக்கு பிறகும் அதிமுகவை ஆதரியுங்கள் என்று சொல்ல வேண்டுமானால் அதிமுகவிடம் விலை போயிருக்க வேண்டும், அல்லது இஸ்லாமிய வட்டத்தைவிட்டு வெளியேறியவராக இருக்க வேண்டும்.

இரண்டில் எது உண்மை என்பது தேர்தல் முடிந்தால் தெளிவு பிறந்து விடும். காத்திருப்போம். அதற்கு முன் அதிமுகவை வீட்டுக்கு அனுப்பி கோவை சிறையிலுள்ள நம் சொந்தங்களை வீட்டுக் கழைப்போம்.


அல்லாஹ் நம் எண்ணங்களை தூய்மையாக்கி முயற்சிகளை வெற்றிகளாக்கி அருள்வானாக!

அபூஇஸ்மத்
28.03.2006

Thursday, March 16, 2006

கொதித்துப் போயுள்ள முஸ்லிம் சமுதாயம்:

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதைப் போலவே, தமிழக முஸ்லிம்கள் மத்தியிலும் கொதிப்புடன் ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. இது நேரடி அரசியல் நிகழ்வாக இல்லாவிட்டாலும், சமுதாய சிந்தனையில் கலந்து விட்ட அரசியல் பற்றியது என்பதால், அதன் பின்னணியை அறிந்த முஸ்லிம்கள் கொதித்துப் போயுள்ளார்கள்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக தனக்கென ஒரு அமைப்பை ஜனாப் ஜெயினுலாபிதீன் ஆரம்பித்த பொழுதே அரசல், புரசலாக ஆங்காங்கே பேசப்பட்டு வந்த விஷயம் தற்சமயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. புதிய அமைப்பு கண்ட பொழுது, அது தனக்கு மகுடம் சூட்டிக் கொள்வதற்காக அல்ல, மாறாக நலிந்து விட்ட ஏகத்துவ பிரச்சாரத்தை முடுக்கி விடுவதற்காக என அறிவித்த காரணத்தால், அவரது பிரச்சாரத்தால் கவரப்பட்டோர் அவரது பின்னால் அணி வகுத்தனர். ஆனால் அன்றே சிலர், இவர் ஜெயலலிதாவிடம் விலைபோய் விட்டதாக குற்றம் சாட்டினர். இக்குற்றச்சாட்டை அவர் மறுத்து வந்தாலும் அவரது சமீபகால செயல்பாடுகள் அதனை மெய்ப்படுத்தியே வகிகின்றன. புதிய அமைப்புக்கு மொம்மை தலைவரை நியமித்தவர், ஆறே மாதத்தில் அவரை கழற்றிவிட்டு தானே தலைவராகிக் கொண்டார்.

ஆந்திர அரசு அறிவித்த முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு சட்டத்தை விமர்சித்த ஜெயலலிதாவை எதிர்த்து தமுமுக முதல்வர் வீட்டு முற்றகை போராட்டம் நடத்திய பொழுது, அதனை இழிவுபடுத்தி பேசினார். அதில் கலந்து கொண்ட பெரும் திரளான மக்களை தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளும் வெளியிட்ட பொழுது அவர் கையகப்படுத்திய உணர்வு பத்திரிக்கையில் அப்போராட்டத்தையே கொச்சைப் படுத்தி எழுதி தனது ஜெயலலிதா விசுவாசத்தை வெளிச்சம் போட்டு காட்டினார். கோவை சிறையில் அப்பாவி முஸ்லிம்கள் அடைபட்டு, வதைபட்டு வாழ வழியில்லாமல் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் விடுதலைக்காக முயற்சிக்காதது மட்டுமல்லாமல் அவர்கள் வெளியாகி விடக்கூடாது என்பதற்காக அரசு சாட்சியாக மாறி சாட்சியமளித்துள்ளார். ஆனால் இன்று சிறைவாசிகளுக்காக அனுதாபப்படுவது போல் ஆக்ட் கொடுக்கிறார்.

இதெல்லாம் பரவலாக யாருக்கும் தெரியாமல் நடந்தவைகளாகும்.ஆனால் தனது நடிப்பின் உச்சகட்டமாக மேடத்திற்கு முன்னால் விசுவாசத்தை காட்டப்போக அது தற்சமயம் வெளியாகி சந்தி சிரித்துக் கொண்டுள்ளது. இச்சம்பவமும் கூட மறுமையை நம்பக்கூடிய ஒருவர் உடனிருந்ததால் அறைக்கு வெளியே விண்டிவி கேமராவைக் கண்டவுடன் பீஜே நடித்த நடிப்பைக் கண்டு மனம் பொறுக்காமல் உண்மையைப் போட்டு உடைத்ததால் இன்று சமூகம் ஒரு தவ்ஹீது வேடதாரியை முழுவதுமாக அடையாளம் காண முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

முதலமைச்சர் சந்திப்பு நடந்த அறையில் நடந்தது என்ன?
இட ஒதுக்கீட்டுக்காக கமிஷன் அமைத்த ஜெயலலிதாவை பாராட்ட சென்றதாக ஜெயினுலாபிதீன் கூறுகிறார். ஆனால் அவருடன் சென்ற காஸிமியோ, முதல்வரிடம் முஸ்லிம்களின் பிரச்சனைகள் பற்றி பேசலாம் வாருங்கள் என அழைத்ததால் சென்றேன் எனக் கூறுகிறார். நடந்த நிகழ்வுகளை நிதானமாக ஆராய்ந்தால் காஸிமி சொல்வதில் உண்மை இருக்கிறது என உணர முடிகிறது. ஏனெனில் இவர்கள் அனைவரும் கூடி முதல்வரை சந்திப்பதற்கு முன் இப்படி ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக எங்கும் எதிலும் செய்தி இல்லை.

பீஜே உடன் சென்றவர்களும் கூட ஆஹா சீட் கேட்டு வந்த இடத்தில் சுவீட் கிடைக்கிறதே என்று அந்த நிமிடம் இன்ப அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். அதனை வாங்கிப் படித்தவர்கள், இது போலி, எதற்கும் உதவாத முன்தேதியிட்ட மறுசீரமைப்பு ஆணை என அறிந்து உண்மையாகவே அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால் ஆன்மீக அரசியல்வாதி பீஜே மட்டும், ஆஹா, இதனை வைத்தே தனது ரசிகர்களை குஷப்படுத்தி விடலாம் என திட்டமிட்டுள்ளார். அதனால் தான் நாலாவது வரை மட்டுமே படித்த பீ.ஜெயினுலாபிதீன் ஆங்கிலத்தில் இருந்த அரசாணையை ஒழுங்காக படிக்காமல், புரியாமல் அதற்கென எந்த முயற்சியும் எடுக்காமல் தடாலடியாக தனது கைத்தடி விண் டிவிஐ கண்டவுடன் முந்திரிக் கொட்டையாய் முந்திக் கொண்டு பொய் செய்தியை பரப்பி விட்டார். தனது தவறுகளை என்றுமே ஒத்துக் கொள்ள துணிவில்லாத பீஜேதனது டிவிபேட்டியை நிலை நிறுத்துவதற்காக மேலும் மேலும் பொய்யான பல செட்டப்களை செய்து வருகிறார்.அடுத்தவர்களை யெல்லாம் அரசியல்வாதியின் பின்னால் அலைவதாக குறைகூறி வந்த பீஜெயின் புதிய கூட்டாளி தேசிய லீக் தலைவர் கோனிகா பஷீர் மே 8, 2006 வரை இவர்களது கூட்டு தொடரும். தேர்தல் முடிந்தவுடன் இதுவரை பீஜெ உடன் இருந்து வெளியேறிய பலரைப் போல் இவரும் வெருண்டோடுவார்.

இதை நாம் சொன்னதும் விபரமறியாத ததஜவினர், 'இல்லையே அவருடைய பழைய நண்பர்கள் பாக்கர் அலாவுதீன் போன்றோர் இப்பொழுதும் கூடவே தானே இருக்கிறார்கள். அவர் மீது நீங்கள் அவதூறு பேசுகிறீர்கள் என வெகுண்டெழுவார்கள்.உண்மைதான், இவர்கள் இன்றும் அவருடன் தான் இருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களைப் போல அல்லர். ஏனென்றால் இவர்கள் இலாபத்திலும், இப்பொழுது சம்பாதிக்கும் பாவத்திலும் பங்காளிகள். ஜெயலலிதாவிடம் பெற்ற 4 கோடியை பிரித்துக் கொள்வதில் சச்சரவு ஏற்பட்டாலொழிய மற்றபடி இதுபோன்ற சமுதாய பிரச்சனைகளுக்காகவோ, அல்லது ஏகத்துவ கொள்கையில் அவர் எடுக்கும் குழப்ப முடிவுகளுக்காகவோ அவரை விட்டு விலக மாட்டார்கள், இது திண்ணம்.

இந்த கோனிகா பஷீரை இதற்கு முன் பலமுறை கேவலமாக பீஜே விமர்சித்திருந்தாலும் பெட்டி வாங்கும் அளவுக்கு இன்றைய தேதியில் முதல்வருக்கு இண்க்கமானவராக பீஜே இருப்பதால் அவருடன் ஒட்டிக் கொண்டு தனக்கு சீட் வாங்கலாம் என்று தான் பஷீர் பீஜேயின் தாளத்திற்கு தப்பாட்டம் ஆடி வருகிறார். தேர்தல் முடிந்தும் கூத்தும் முடியும், அவருடனான கூட்டும் முறியும்.
அரசாணை விஷயத்தில் இன்று வரை அது கெஸட்டிலோ, அரசாங்க வெப்தளத்திலோ வெளியிடப்படாதது மட்டுமல்லாமல், முதல்வரோ அவரது அமைச்சரவை சகாக்களோ ஏன் அடுத்த மூன்றாம் கட்ட அதிமுக பேச்சாளர்களோ கூட இதுவரை வெளிப்படையாக அரசின் சாதனையாக இதனை குறிப்பிட்ட எந்த ஒரு செய்தியும் இல்லை. இது ஒரு டம்மி பேப்பர் என்பதற்கு இதற்கு மேல் ஒருவருக்கு ஆதாரம் அவசியமில்லை.
முதல்வருடனான சந்திப்பிற்கு ததஜ தலைமையில் 12 அமைப்புகள் சென்றதாக மற்றொரு தகவல். இதுவும் உண்மைக்கு மாற்றமான செய்தி என்பதற்கு பீஜே மற்றும் பாக்கரே சாட்சி. சென்றது ததஜ, இவிக. இதேலீ ஆகிய மூன்று அமைப்புகளும் சில பிரமுகர்களும் தான் என பீஜெ பாக்கர் தொலைக்காட்சி பேட்டி மூலமாக அம்பலமாகியுள்ளது. அப்படியானால் 12 அமைப்பினர் என பிலட்அப் செய்தது ஏன்? முதலாவது அப்படிபிலட் அப் செய்தால்தான் முதல்வரிடம் சந்திப்புக்கு அனுமதி கிடைக்கும்.

இரண்டாவது சமுதாய மக்கள் மத்தியில் ததஜ அனைவரையும் ஒற்றுமைபடுத்தியது என படம் காட்ட முடியும்.அந்தோ பரிதாபம் அவர்களின் டிவி பேட்டி மூலமாக இந்த பிலட் அப் சிதைந்து சுக்கு நூறாகிப் போனது. சமுதாய மக்களிடம் இவர்களது நாணயம் சந்தி சிரிக்கிறது.
அடுத்ததாக குலுங்கிய கும்பகோணம் விஷயமாக முதல்வர் முன் நடந்த உரையாடல். முதல்வரின் அறைக்கு வெளியே டிவிகளில், பத்திரிக்கைகளில், இமெயில்களில் அவர்களது இணைய வலைகளில் இறுமாப்போடு 10 லட்சத்திற்கும் மேல் என பறை சாற்றியவர்கள் அறைக்குள்ளே முதல்வரின் முன்னிலையில் சுமார் ஒரு லட்சம் என சுருக்கிக் கொண்டது ஏன்?

இப்படி ஒரு செய்தி வெளியே கசிந்து விடும் என கற்பனை பண்ணாதவர்கள், இந்த கேள்வி முன் வைக்கப்பட்டவுடன் தடுமாறி வழக்கம் போல் சமாளிக்க முயற்சிக்கின்றனர். முதல்வர் முன்னிலையில் ஒரு லட்சம் என சொல்லப்பட்டதாக கூறப்படுவது அபாண்டம் இலட்சக்கணக்கான மக்கள் என்று தான் சொல்லப்பட்டது என் புது கதை (கரடி?!) விட்டு வருகின்றனர்.நமது கேள்வி: உண்மையில் 10 லட்சத்திற்கு மேல் கூடியிருந்தால், அதனை முதல்வரிடம் சொல்வதற்கு ஏன் பயப்பட வேண்டும். அல்லது முதல்வரிடம் கூறியது போல் சுமார் ஒரு லட்சம் தான் எனில் சமுதாய மக்களிடம் கூற ஏன் வெட்கப்பட வேண்டும்.
உண்மையைச் சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டும். சுய இலாபம் காண திட்டம் வகுப்பவர்கள் என்றுமே உண்மையாளர்களாக இருக்க மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.சுமார் ஒரு லட்சம்தான் கூடினார்கள் என சமுதாய மக்களிடம் ஒப்புக் கொண்டால் இதற்காகவா இத்தனை ஆடம்பரம் , இத்தனை விளம்பரங்கள், இத்தனை டிஜிட்டல் பேனர்கள் இத்தியாதி இத்தியாதி என கொதிக்க ஆரம்பித்து விடுவார்கள். 10 இலட்சம் என்ற பரபரப்பான பிலட் அப் பில் மயங்கி இலட்சம் இலட்சமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து பணம் அனுப்பியவர்கள் கழுத்தை நெரிக்க வந்து விடுவார்கள் என்ற பயம். அதேபோல் முதல்வரிடம் 10 லட்சம் என்று சொல்லி விட்டால் உளவுத்துறை மூலம் 50,000 பேர்தான் திரண்டனர் என்ற செய்தியை அறிந்து வைத்திருக்கும் ஜெயலலிதா தன்னை ஒதுக்கி விடுவார் என அவருக்குத் தெரியும்.

அதனால் தான் ஜெயலலிதாவிடம் ஒரு லட்சம் பேர் என்றும், சமுதாய மக்களிடம் 10 லட்சம்பேர் என்று (அவரது ரசிகர்கள் அதற்கும் மேலான தொகையை) சொல்லிக் கொண்டு திரிகின்றனர். இந்த இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்ததால் தற்சமயம் இலட்சக்கணக்கான என திருத்திக் கொண்டுள்ளனர். அமெரிக்க என் ஆர் ஐ களை ராமர் பெயரால் இன்னமும் சுரண்டிக் கொழுக்கும் பிஜேபி க்கும் ஏகத்துவம், இடஒதுக்கீடு என்ற பெயரில் வளைகுடா மற்றம் ஐரோப்பிய வாழ் இஸ்லாமிய சமூகத்தினரை ஏமாற்றி பணம் பிடுங்கும் பீஜே வகையராவிற்கும் வேறுபாடு இல்லை, என்று தான் முஸ்லிம்கள் அனைவரும் தற்சமயம் எண்ணுகின்றனர்.
இந்நிலை மாற வேண்டுமானால்....

மக்களுக்கு அஞ்சி தனது வார்த்தைகளை திருத்திக் கொளபவர்கள், அல்லாஹ்விற்கு அஞ்சி தனது செயல்கள் அனைத்தையும் திருத்திக் கொள்வதுடன் இதுவரை செய்த அனைத்து அத்துமீறலுக்காவும் பரப்பிய அபாண்டங்களுக்காகவும் இறைவனிடமும் சம்பந்தப்பட்டவாகளிடமும் மன்னிப்பு கோர முன்வர வேண்டும். அவ்வாறு முன்வந்தால் அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும். செய்வார்களா???
அபூஇஸ்மத் 16.03.2006

Tuesday, March 14, 2006

உண்மையாகிப் போன தினகரன் நியூஸ்:
தமுமுகவை விட்டு பீஜே பிரிந்து செல்வதற்கு வாயில் வந்தவாரெல்லாம் பல காரணங்களை பீஜே கூறினார். அவைகளாவன.
1. தமுமுக தன்னை திட்டமிட்டு சதிசெய்து நீக்கிவிட்டதாக கூறினார்.

பல காரணங்களுக்காக அவர் கூறும் இந்த வாதத்தை ஏற்க எனது மனம் மறுத்தது. (அ) தமுமுகவுக்கு என்று தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் வேறு பல பதவிகளில் பொறுப்பாளர்கள் இருந்தாலும், பீஜேயின் சொல்லை அப்படியே பின்பற்றக் கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் மட்டுமின்றி கடைநிலை தொண்டன் கூட அவரது சொல்லுக்கு மதிப்புக் கொடுத்தான். இன்னும் சொல்லப்போனால் தமுமுகவின் மீது பீஜே அவர் பிரிந்து செல்லும் வரை எதேச்சை அதிகாரம் செலுத்தி வந்தார். இது நான் அறிந்த செய்தியாகும். தமுமுகவில் இருக்கும் மற்றவர்கள் திட்டமிட்டிருந்தாலோ அல்லது சதித்திட்டம் தீட்டியிருந்தாலோ ஒரேயொரு வார்த்தையில் அவற்றை தட்டிவிட்டிருக்க முடியும். அடுத்து,
(ஆ) மசூரா என்னும் ஆலோசனைக் கூட்டம் என்பது நபி (ஸல்) அவர்களின் சுன்னத் என்றும் நடைமுறையாகும். இயக்கம் என்று இருந்தால் ஒரு நிர்வாகி மற்ற நிர்வாகிகள் மீது தவறான எண்ணம் தோன்றவோ, மனத்தாங்கள் ஏற்படவோ வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட கசப்பான சம்பவங்களை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விவாதித்து மீண்டும் சுமுக நிலைக்கு வருவதற்குத் தான் இந்த மசூராக்கள் கூட்டப்படுகின்றன.ஆனால் இந்த மசூராவில் பீஜே தன்னைப்பற்றிய விமர்சனங்களை கேட்டவுடன் அதற்கான பதிலையும் தந்துவிட்டு ஓர் அறிவிப்பையும் செய்கிறார். தான் தமுமுகவிலிருந்து அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் கூட விலகிக் கொள்வதாக அறிவித்தார். மனிதர்கள் என்றால் விமர்சனங்களுக்கு அப்பார்ப்பட்டவர்களா?இப்படியொரு சம்பவத்தை நடத்திக்காட்டி மசூராவிற்கு புது இலக்கணம் வகுத்ததோடு, மசூரா என்றால் நன்மை ஏற்படுவதை விட தீமைதான் ஏற்படுகிறது என்ற மனப்போக்கிற்கு வழி வகுத்தார்.

2.தமுமுக தவ்ஹீது கொள்கைக்கு எதிரானது என்று குற்றம் சுமத்தினார்.

நான் அறிந்தவரை தவ்ஹீது என்பது தனி மனிதனின் பால்பட்டது. அதை இயக்கத்தோடு தொடர்புபடுத்துவது என்பது சரியில்லை. தமுமுகவில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் தவ்ஹீதுவாதிகள் அல்ல. ஜாக் இயக்கத்தில் இருக்கும் அத்தனை பேரும் எப்படி தவ்ஹீதுவாதிகள் இல்லையோ அப்படி. ஏன் தவ்ஹீது வட்டத்தில் இருக்கும் தங்களை தவ்ஹீதவாதிகள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களுக்கு இடையிலும் தவ்ஹீதை பின்பற்றாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.தமுமுக தவ்ஹீதுக்கு எதிரான இயக்கம் என்பது போன்ற மாயையை பீஜே ஏற்படுத்தினார். முதலில் தமுமுக தவ்ஹீதுக்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. தவ்ஹீதுவாதிகளால் கலிமாச் சொன்ன அனைத்து முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சமுதாய பேரியக்கம் தான் தமுமுக. இதில் தமுமுகவை எந்தவகையில் தவ்ஹீதோடு தொடர்புபடுத்த முடியும். தமுமுகவா? தவ்ஹீதா? என்ற கேள்வியே பிழையான கேள்வியாகும். அதாவது, சமுதாயமா? தவ்ஹீதா? என்று கேட்பது எவ்வாறு தவறானதோ அதுபோன்ற கேள்வியாகும். யாராக இருந்தாலும் இரண்டும் வேண்டும் என்று தான் கூறுவார்கள். இந்த சமுதாய பேரியக்கத்தைத்தான் தவ்ஹீதோடு தொடர்பு படுத்தி இது தவ்ஹீதுக்கு எதிரானது என்று பீஜே செய்யும் பிரச்சாரத்தை ஒன்றும் அறியா மக்கள் நம்பி சரி காணுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு தெளிவைத் தருவானாக. அதனால் நான் அறிந்தவரை இதுவும் அவர் தமுமுகவிலிருந்து விலகிச் செல்வதற்கு சரியான காரணமாக எனக்குப்பட வில்லை.

3.இதற்கிடையில் தினகரனில் ஒரு செய்தி 25.04.2004 அன்று வெளியாகி இருந்தது. அந்த செய்தியில்,
அனைத்து முஸ்லிம்களின் முழு ஆதரவைப் பெற்ற தமுமுகவை சிதைப்பதற்காக அம்மா கட்சியினர் திட்டமிட்டனர் என்றும், அதற்காக முன்னால் அமைப்பாளர் ஒருவரை தேடிப்பிடித்தார்களாம் என்று எழுதப்பட்டுள்ளது.

கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி, துபையிலிருந்து சொல்கிறார்.
நான் தாயகத்தில்; இருந்தபோது ஒரு அதிகாரி 2005 ஆம் ஆண்டே சொன்னார். வருகின்ற தேர்தலில் த.த.ஜ. ஆதரவு அ.தி.மு.க.வுக்குத்தான். எல்லாம் முடிந்து விட்டது. பார்லிமெண்ட் தேர்தலில் த.மு.மு.க.வை உடைக்க பி.ஜெ.க்கு நாங்கள்தான் பணம் வாங்கிக் கொடுத்தோம் என்றார். அதிகாரி சொல்லாமல் பொய்யாக நான் இதைச் சொல்லி இருந்தால் அல்லாஹ் என்னை நாசமாக்கட்டும். அதிகாரி சொல்லாமல் பழுலுல் இலாஹி பொய் சொல்கிறார் என்று யார் மறுத்தாலும். அவர்கள் மறுப்பது பொய்யாக இருந்தால் அல்லாஹ் அவர்களை நாசமாகட்டும் என்று கூறி மறுக்கச் சொல்லுங்கள். பி.ஜெ. பின்னால் இருப்பவர்களில் அப்பாவிகள் இருந்தால் அவர்களது ஹிதாயத்துக்குத் துஆச் செய்வோம். பொய் என்று தெரிந்து கொண்டே பி.ஜெ. மாதிரி பித்தலாட்டம் பண்ணி சமுதாயத்திற்கு துரோகம் செய்தால். யா அல்லாஹ் நீ அவர்களை எப்படி பிடிக்க வேண்டுமோ அப்படி பிடி என பிரார்த்திப்போம்.
முஸ்லிம்களிடம் அதிக செல்வாக்கைப் பெற்ற தமுமுக எனும் தன்னலமற்ற இயக்கத்திலிருந்து விலகுவதற்கு பீஜேக்கு எப்படி மனது வந்தது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது பீஜே சொன்ன அத்தனை காரணங்களும் பச்சைப் பொய், அதிமுகவினர் சந்தித்தது தான் காரணம் என்று இப்போது விளங்கிக் கொண்டேன்.
அபூஅன்சாரி 15.03.2006

Monday, March 06, 2006

கமிஷன் - அரசு ஆணை:

அன்புச் சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தமிழகமெங்கும் பரபரப்பாக வைகோவின் அணிமாற்றம் குறித்து பேசப்பட்டு வரும் வேளையில், முஸ்லிம்கள் மத்தியில் அதைவிட பரபரப்பாகவும், குதூகலத்தோடும் பேசப்படுகின்ற விஷயம் - இட ஒதுக்கீட்டிற்கான அரசு ஆணை.

இந்த அரசு ஆணை - முஸ்லிம்கள் சிலர் கொண்டாடுவது போல் பயனளிக்கக்கூடிய ஒன்றா? இதனை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழ் முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.

முதலில் இந்த ஆணை செல்லுபடியானது தானா?

முஸ்லிம்கள் மற்றும் கிருத்தவர்கள் சமூக பொருளாதார நிலை குறித்து ஆராய கமிஷன் அமைத்து ஜெயலலிதா (ததஜ தலைவர் மற்றும் செயலாளரிடம் கையளிக்கப்பட்டதாக அவர்கள் கூற்றுப் படி) அரசு ஆணை வெளியிடப்பட்டது மார்ச் 01, 2006

மே 8, 2006ல் தமிழக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததும் இதே மார்ச் 01, 2006இல் தான்.

தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட பின் வெளியாகும் அரசு அணைகள், சலுகைகள் செல்லுபடியாகாது என்பது ஊரறிந்த உண்மை.

எனவே இந்த ஆணையால் மகிழ்ந்து போகிறவர்கள், மகுடிக்கு மயங்கும் பாம்புகள் அன்றி சிந்திக்கும் திறன் படைத்தவர்களல்லர்.

அரசு ஆணையில் அமையவிருக்கும் கமிஷனின் பணி:

ஜெயலலிதா அமைத்திருக்கும் இந்த கமிஷனின் செயல்பாடுகள் என்னவென்று அறியாததும் சிலரின் கொண்டாட்டத்திற்கு காரணமாகும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில், பிற்படுத்தப்பட்டவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்கள் சமூக பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை பதிவு செய்வது தான் இந்த கமிஷனின் பணியாகும். முஸ்லிம்கள் போராடி வரும் இட ஒதுக்கீடு விஷயத்தில் இக்கமிஷனின் பங்களிப்பு முக்கியமானது அல்லவா என்றும் சிலர் எண்ணிக் கொண்டுள்ளனர். அவர்கள் அரசியல் நிலையறியாத அப்பாவிகள். தமிழகத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட பட்டியலில் தான் இடம் பெற்றுள்ளனர். எனவே இப்படியொரு கமிஷன் அமைக்காமலேயே முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிலிருந்து உள் ஒதுக்கீடாக தனி இட ஒதுக்கீடு தர முடியும்.


இப்படியொரு தனிஇடஒதுக்கீடு கேட்டு தமுமுக பல்வேறு போராட்டங்களையும் மாநில மாநாடுகளையும் நடத்தி வருகிறது. அதைப் போல்தான் ததஜவும் போராடுவதாகவும் சொல்லிக் கொண்டது. ஆனால் இப்போது வெளியான கண்துடைப்பு கமிஷன் பற்றிய அரசு ஆணையை தங்களது வெற்றியாக ததஜவினர் பரைசாற்றுவதைப் பார்த்தால் அவர்கள் அதிமுகவிடம் 'பெட்டி' வாங்கியதாக பலர் பேசிக் கொள்வது உண்மையாக இருக்குமோ என்று கருத வேண்டியுள்ளது.

தவிர, தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட பின் இந்த அரசு ஆணை வெளியிடப்பட்டிருப்பதால் இது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிவித்துள்ளார்.

ஆக, அவசியமில்லாத செல்லுபடியாகாத விதிமுறைகளுக்கு மாறாக அமைக்கப்பட்டுள்ள ஒரு கமிஷனைக் கண்டு களியாட்டம் போடுபவர்கள் கமிஷன் (கைக்கூலி) பெற்றிருப்பார்கள் என்பதே கலப்பற்ற உண்மையாகும்.

அன்புச் சகோதர சகோதரிகளே!

இத்தகைய கைக்கூலிகளை (கோவை விஷயத்தில்) காட்டிக் கொடுக்கும் கயவர்களை, சமுதாயத்தை அடகுவைக்கும் சுயநலவாதிகளை இன்னுமா நம்பப் போகிறீர்கள்?

அரசு அமைத்துள்ள கமிஷன் போலியானது எனப் புரிந்து, இந்த அரசு ஆணையைக்காட்டி ஏமாற்றும் சமுதாயப் புல்லுருவிகளை புறம் தள்ள நாம் தயாராக வேண்டும். இல்லையேல் ததஜ தலைமை நம் சமுதாயத்தை தலைகுனிய வைத்துவிடும்.

வல்ல அல்லாஹ் இத்தகைய ஷைத்தான்களின் சூழ்ச்சிகளிலிருந்து என்னையும் உங்களையும் நம் சமுதாய மக்கள் அனைவரையும் பாதுகாப்பானாக!

வஸ்ஸலாம்
அபூஇஸ்மத் 06.03.2006

தனி இட ஒதுக்கீடு வழங்க முதல் கட்ட நடவடிக்கை?

கல்வி வேலை வாய்ப்பில் முஸ்­லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க முதல் கட்ட நடவடிக்கை எடுத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது!


இப்படியொரு செய்தியை பரவலாக பரப்பி வருகிறார்கள். இது என்ன என்பதை இப்போது விளங்கிக் கொள்வது அவசியத்திலும் அவசியம்.

எதற்காக கமிஷன்? இது தனி இட ஒதுக்கீட்டுக்கான முதல் கட்ட நடவடிக்கையா?

தமிழக அரசு முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காகவும் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காகவும் ஒரு கமிஷனை நியமித்துள்ளது.

முஸ்லிம்கள் உண்மையில் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்து அரசுக்கு அந்த கமிஷன் தெரியப்படுத்தவே கமிஷன் அமைக்கப்படுகிறது.

தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் போது எதற்காக இந்த கமிஷன்?

இதைக் காரணம் காட்டி அந்தக் கட்சியை வரும் தேர்தலில் ஆதரிக்கப் போவதாக கூறியிருப்பது மிகப்பெரிய முட்டாள்தனமும், மக்களை மடையர்களாக்கும் செயலுமாகும்.

இடஒதுக்கீடு தருபவர்களுக்கு தான் எங்கள் ஆதரவு என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் சுருதி குறைந்து ஒன்றும் இல்லாத கமிஷன் அமைக்கிறோம் என்று சொன்னதற்காக எங்கள் ஆதரவு என்று சொன்னால் அதன் பின்னணியில் ஏதோ காரணம் இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

முஸ்லிம்கள் இப்படிப்பட்ட நயவஞ்சகர்களின் வலையில் சிக்காமல் தூரமாகிக் கொள்ள வேண்டும்.

அபூஅன்சாரி

Saturday, March 04, 2006

புதுவை முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு:

புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

புதுவை மாநில சிறுபான்மையினரின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு அம்மாநில காங்கிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு 6 சதவீத தனி இடஒதுக்கீடும், கிறிஸ்தவர்களுக்கு 7 சதவீத தனி இடஒதுக்கீடும் அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்ற வருடம் ஜூலை 10 அன்று புதுவை மாநில முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி காரைக்காலில் தமுமுக சார்பில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற கவன ஈர்ப்பு மாநாடு நடைபெற்றது.

புதுவை மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரியும், புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற முதலும் கடைசி யுமான மாநாடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டில் புதுவை சட்டமன்ற சபாநாயகர் ஏ.வி.சுப்ரமணியம், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கமலக் கண்ணன் ஆகியோருடன் திமுக சார்பில் நாஜிம், வக்பு போர்டு தலைவர் ஷாஜஹான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இம்மாநாட்டில் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசினார்கள்.

இதுவரை காரைக்காலில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியதில்லை என வியந்த புதுவை சபாநாயகர் ஏ.வி. சுப்ரமணியம், நிச்சயம் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்கப் பாடுபடுவோம் என்றார்.

அம்மாநாட்டில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. அம்மாநாட்டிற்கு புதுவை கவர்னரும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் அக்கோரிக்கையைத் தீவிரப்படுத்தும் பொருட்டு வருகிற மார்ச் 18 அன்று பாண்டிச்சேரியில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்கும் முஸ்லிம்களின் கோரிக்கைப் பேரணியை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இதையறிந்த புதுவை மாநில அதிகாரிகள் தொடர்ந்து இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தமுமுக நிர்வாகிகளிடம் பேசி வந்தனர்.

அதனடிப்படையில் புதுவை மாநில தமுமுக சார்பில் காரைக்கால் மாவட்டத் தலைவர் லியாக்கத் அலி மற்றும் மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் பிப்ரவரி 25 மற்றும் 26 தேதிகளில் பாண்டிச்சேரியில் முகாமிட்டனர்.

புதுவை சட்டமன்றம் இம்மாதத்தோடு முடிவடைவதால் இதே கூட்டத் தொடரில் முஸ்லிம்களுக்கும், இதர சிறுபான்மை மக்களுக்கும் தனி இடஒதுக்கீட்டை அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அலுவ லகத்தில் மனு கொடுத்தனர். அதே தினத்தில் புதுவை கவர்னருக்கும் மனு அளிக்கப் பட்டது.

புதுவை மாநில தலைமைச் செயலாளர் கெய்ர்வால் அவர்களிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது. அத்துடன் சளைக்காமல் தமுமுக நிர்வாகிகள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபல் கென்னடி ஆகியோரை சந்தித்து இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றினால்தான் நாங்கள் தேர்தலில் உங்களுக்கு வாக்களிக்க முடியும் என திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
அதன் இறுதிக் கட்டமாகத்தான் அந்தப் போராட்டத்தின் வெற்றியாக புதுவை சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் முறையே 6 மற்றும் 7 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறைவனின் பெரும் கிருபையால் தமுமுகவின் பத்தாண்டு கால போராட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

தமுமுகவால்தான் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் வாழ் முஸ்லிம்களும், ஜமாஅத்களும் மகிழ்ச்சியில் திளைக்க, அதை ஏற்கும் விதமாக முஸ்லிம் அமைப்புகளில் தமுமுகவுக்கு மட்டுமே தீர்மான நகல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவை மாநில அரசியல்வாதிகளும், பத்திரிக்கையாளர்களும், உளவுத்துறை அதிகாரிகளும் காரைக்கால் மாவட்ட தமுமுக நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமுமுக சார்பில் 1999 ஜூலை 4ல் சென்னையில் நடைபெற்ற இடஒதுக்கீடு கோரும் வாழ்வுரிமை மாநாட்டிலும், 2004 மார்ச் 21 அன்று தஞ்சையில் லட்சக்கணக் கான முஸ்லிம்கள் பங்கேற்ற கோரிக்கைப் பேரணியிலும் புதுவை மாநில முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

எனினும் வேறு எந்த முஸ்லிம் அமைப்புகளும் செய்திராத வகையில் புதுவை மாநிலத்திலேயே நடத்தப்பட்ட (காரைக்கால் ஜூலை 10, 2005) தமுமுகவின் கவன ஈர்ப்பு மாநாட்டில், அரசியல்வாதி களை வரவழைத்து நாம் ஏற்படுத்திய நிர்பந்தமே இத்தகைய நல்விளைவை ஏற்படுத்தியதாக புதுவை மாநில முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
(அல்ஹம்துலில்லாஹ்...)

தமுமுக வரவேற்பு!
புதுவை மாநில முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதை வரவேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

''முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அது தொடங்கப்பட்ட ஆண்டான 1995 முதல் வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் புதுவையிலும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமுமுக வலியுறுத்தி வந்துள்ளது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து 1999 ஜூலை 4 அன்று சென்னையில் 'முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டை'யும், 2004 மார்ச் 21 அன்று தஞ்சையில் 'இடஒதுக்கீடு கோரிக்கைப் பேரணி'யையும் நடத்தியது. தமிழகம் மற்றும் புதுவை மாநிலம் தழுவிய இந்த நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்குகொண்டு முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தினர். மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜூலை 10 அன்று காரைக்காலில் புதுவை மாநிலம் தழுவிய 'கவன ஈர்ப்பு மாநாட்டை' தமுமுக நடத்தியது. முஸ்லிம்களுக்கு புதுவை மாநிலத்தில் தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுவை முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தமுமுக சார்பாக கடிதங்களும் அனுப்பப்பட்டன.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் வகையில் புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சென்ற பிப்.19 அன்று திருச்சியில் நடைபெற்ற தமுமுகவின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.இதைத் தொடர்ந்து இன்று புதுவை சட்டமன்றத்தில், 'முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 13 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனதார வரவேற்கிறது. இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த காங்கிரஸ், திமுக மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

புதுவை சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட இந்த தீர்மானத்திற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு உடனே ஆவண செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங், திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களை தமுமுக கேட்டுக் கொள்கிறது.''
இவ்வாறு தமுமுக தலைவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும். முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு என்பது வெறும் தீர்மானமாக இருந்துவிடாமல் அதனை நடைமுறைப் படுத்த மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று புதுவை முதலமைச்சர் என். ரங்கசாமி, திமுக தலைவர் கருணாநிதி, புதுவை எதிர்க்கட்சித் தலைவர் ஜானகிராமன் ஆகியோருக்கு 27.02.06 அன்று அனுப்பிய கடிதத்தில் தமுமுக தலைவர் வலியுறுத்தி உள்ளார்.