Monday, August 18, 2008

வந்தே மாதரம் : எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!

புதிய ஜனநாயகம் -2006


சக மனிதர்களைக் கூட நம்ப மறுக்கும் அளவிற்கு நாட்டு மக்களை நிரந்தர பயத்தில் ஆழ்த்துவதற்காக ""முஸ்லீம் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, முக்கிய தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் சதி'' என்ற வழக்கமான பீதியை மீண்டும் ஒருமுறை அனைத்து ஊடகங்களும் ஆகஸ்ட் 15ஐ முன்னிட்டு உரக்கச் சொல்லி ஓய்வதற்குள், அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது ""தேசபக்தி'' பஜனையும் அதையொட்டிய லாவணிக் கச்சேரிகளும்.


மைய அமைச்சர் அர்ஜுன் சிங், "வந்தே மாதரம்' பாடலின் நூற்றாண்டு விழாவினை முன்வைத்து, செப்டம்பர் ஏழாம் தேதியன்று நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக "வந்தே மாதரம்' பாடவேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதைத் தொடர்ந்து, தேசபக்தியை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க. கும்பல், பாட மறுப்பதை தேசத் துரோகமாகச் சித்தரித்து, சிறுபான்மையினருக்கு எதிரான தனது வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தான் ஆளும் மாநிலங்களில் இப்பாடலைப் பாடவேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டது. குறிப்பாக அம்மாநிலங்களில், அனைத்து மதரஸாக்களும் இந்தப் பாடலைத் தங்களது மாணவர்களைக் கட்டாயமாகப் பாடச் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.


இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் ""அம்பி''கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், ""வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று பேட்டி கொடுத்துள்ளார். மறுபுறம், ""சுதந்திரப் போராட்டக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்'' என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.


"திராவிட நாடு' கேட்டுக் கொண்டிருந்தபோது, இதே பாடலை "வந்தே ஏமாத்துறோம்' என நக்கலடித்த கருணாநிதியோ, இன்று பெருமுதலாளியாகி, தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதால், "பாட வேண்டியது கட்டாயமில்லை' என்று இந்தப் பஜனைக்குச் சுருதி தப்பாமல் பின்பாட்டுப் பாடுகிறார். சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில், சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி ஒரு மைல் நீளத்துக்கு தேசியக் கொடியைத் தெருவெங்கும் பரத்திப் பரவசப்பட்டவர்கள்தானே இவர்கள்! சமயம் கிட்டும்போதெல்லாம் ""கழக அரசுதான் கார்கில் நிதியை அதிகமாகக் கொடுத்தது'' என்று தம்பட்டம் அடித்து இந்திய தேசிய சாக்கடையில் மூழ்கவும் தயங்காத இவர்கள், இம்முறை பா.ஜ.க.வின் பஜனையில் கரைந்து போனது ஆச்சரியமில்லைதான்.


இவர்கள்தான் இப்படி என்றால், மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டும், தரகு முதலாளிகளின் கையாளுமான புத்ததேவ் பட்டாச்சார்யாவும், ""அனைவரும் பாடலாம்; ஆனால் பாடவேண்டியது கட்டாயம் இல்லை'' என்று கூறி ஒதுங்கிவிட்டார். மதச்சார்பின்மைக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், பா.ஜ.வின் இந்து தேசியவெறியை எதிர்க்கத் துப்பில்லாமல், காங்கிரசும் பா.ஜ.க.வோடு ஓரணியில் நிற்பதைப் பார்த்து அடங்கிப் போய் மவுனம் காக்கின்றனர்.


முதலில் இந்த ஆண்டு, வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டே அல்ல. 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டுக்கு இந்த ஆண்டுதான் நூற்றாண்டு எனத் திடீரென விழா எடுப்பதற்கு அவசியமென்ன வந்தது? அமெரிக்காவின் அடியாளாக மாறிக் கொண்டிருக்கும் இந்த அரசு சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு, அணுசக்தி விஞ்ஞானிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்து சேர்ந்து, தனது முகமூடி கிழிந்து தொங்கியதாலும், மறுகாலனியத் தாக்குதலால் உழைக்கும் மக்களிடம் வெறுப்பும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆத்திரமும் பெருகி வருவதாலும், பிரச்சினையைத் திசைதிருப்பி தேசபக்தித் தீயை மூட்டிக் குளிர்காய அரசு நினைத்தது. ஆளும் கட்சியினருக்கு இது ஒன்றும் புதியதல்ல; முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது தேசிய வெறியைக் கிளப்ப போக்ரானில் அணுகுண்டு வெடித்தும், பிரச்சினைகள் முற்றியபோது எல்லைப்புறத்தில் சிப்பாய்களைக் கொண்டு போய் நிறுத்தி தோட்டா ஒன்றைக் கூடச் சுடாமல் "போர் பீதி'யை கிளப்பியதும் யாவரும் அறிந்ததுதான்.


கட்சிக்குள் நிலவும் கோஷ்டி தகராறால் உமாபாரதி வெளியேற்றம், போதைப் பொருள் உபயோகித்துக் கையும் களவுமாய் மாட்டிய ராகுல் மகாஜன் விவகாரம், ஜார்கண்ட் மாநிலத்தில் பறிபோன ஆட்சி, முக்கிய தலைவர்களின் ஒழுக்கக்கேடுகள் ""வீடியோ சிடி''களாக வெளிவந்த விவகாரம் என அழுகி நாறிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.விற்கு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வரப்போகும் உ.பி., போன்ற மாநிலங்களின் தேர்தலுக்கு உதவிட அருமருந்தாய் இந்த வந்தே மாதரம் விவகாரம் கிடைத்தவுடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. "முஸ்லீம்கள் பாட மறுக்கிறார்கள், அதனால் அவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள்' என மக்களிடையே இந்துமுஸ்லீம் பிளவைக் கூர்மைப்படுத்தி, தனது இந்துவெறி ஓட்டு வங்கியைத் தூசு தட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே "கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் வெடி போடுகிறார்கள்' என்று முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லி வந்த அவதூறின் தொடர்ச்சியாக "வந்தே மாதர' விவகாரத்தை அக்கட்சி கையில் எடுத்துக் கொண்டது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று காங்கிரசு தலைவி சோனியா "வந்தே மாதம்' பஜனையில் கலந்து கொள்ளாததை ஊதிப் பெருக்கி ""சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்'' என்று தனது மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.


வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?


1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.


1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.


""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.


""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.


முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?


வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.


இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது.


இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.


1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.


நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?


முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.


நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.


வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி''தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.


போலியான தேசபக்தி அரட்டைக் கச்சேரி செய்யும் காங்கிரசு கும்பலோ தாம் ஆண்ட ஐம்பது ஆண்டுகளில் அடுத்தடுத்து நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து, இந்திய ராணுவத்திற்கு போர் விமானம், போபர்சு பீரங்கி, நீர் மூழ்கிக் கப்பல் வாங்குவதிலும் ஊழல் செய்து திளைத்தது. அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, "வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி' எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேச பக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?


ஒரு நாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, "வந்தே மாதரம்' பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது.


இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரத்தைவிட வேறு இரண்டு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. அவை: சுபாஷ் சந்திரபோஸின் ""ஜெய்ஹிந்த்'' மற்றும் பகத்சிங்கின் ""இன்குலாப் ஜிந்தாபாத்'' 1929இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தைக் கண்டித்துப் போராடும் விதமாக வெடிகுண்டு வீசியபோதும், பின்பு ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலிடப்பட்டபோதும் பகத்சிங் முழங்கியது இதே "இன்குலாப் ஜிந்தாபாத்'தான். அத்தகைய தேசப்பற்றாளனின், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் பிறந்தநாள் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.


""புரட்சி ஓங்குக!'' (இன்குலாப் ஜிந்தாபாத்!) என பகத்சிங் முழங்கிய முழக்கம்தான் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நூற்றாண்டும் புரட்சியின் நூற்றாண்டாக இருக்கப் போகிறதே அன்றி, இந்துவெறி தேசியவெறிக்கானதாக இருக்கப் போவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் கொண்ட புரட்சியின் முழக்கம்தான் இனி நாடெங்கும் எதிரொலிக்கப் போகிறதே தவிர, ஏகாதிபத்திய கைக்கூலிகளின் வந்தேமாதரம் பஜனை அல்ல.

மு அன்பு

நன்றி: தமிழ் அரங்கம்

Saturday, August 16, 2008

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)

ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கியவர். இன்றைய ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந்தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
-ஆ.ர்

குஞ்சாலி மரைக்காயர்கள்

போர்ச்சுகீசியர்கள்தான் முதன் முதலில் இந்தியாவை நோக்கி படை யெடுத்தவர்கள். அவர்கள் கேரளாவின் கடலோரப் பகுதிகளை கடற்படையுடன் முற்றுகையிட்ட போது, கேரளாவின் பகுதிகளை ஆட்சி செய்து வந்த குஞ்சாலி மரைக்காயர்கள்தான் அவர்களை படு தோல்வி அடையச் செய்தனர். முதலாம் குஞ்சாலி மரைக்காயர், இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் என தலைமுறையாக தொடர்ந்த முதல் விடுதலைப் போரில் அனைவரும் தங்கள் இன்னுயிர்களை நீத்தனர். 16ஆம் நூற்றாண்டிலேயே விடுதலை தீபத்தை ஏற்றிவைத்து முதலில் உயிர்த்தியாகத்தை அர்ப்பணம் செய்தவர்கள் இவர்களே.

சிராஜுத் தௌலா


17ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிளாசி என்ற இடத்தில் கடும் போர் நடத்தி ஆங்கிலேயர்களை திணறடித்தவர் சிராஜுத் தௌலா. சூழ்ச்சிகள் மூலம் துரோகிகளின் துணையுடன் சிராஜுத் தௌலா கைது செய்யப்பட்டார். அவரைப் பணியவைக்க ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அந்த மாவீரனை கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டு கொன்றனர்.

மருதநாயகம்

பிரெஞ்சுக்காரர்கள் படையில் சாதாரண வீரனாக இருந்து தம் திறமைகளால் படைத்தளபதியானவர் மருதநாயகம். இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட யூசுப்கான் என்ற அடையாளத்துடன் பின்னாளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார். நவீன ஆயுதங்களுடன் கூடிய ஆங்கிலப் படை மருதநாயகத்தின் வீரத்தின் முன் பலமுறை மண்டியிட்டது. அந்த மாவீரன் பிராமணன் ஒருவனின் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சியால் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 15.10.1764ல் தூக்கிலிடப்பட்டார். அவரது உடலை பல பாகங்களாக வெட்டி ஆங்கிலேயர்கள் பல்வேறு இடங்களில் புதைத்தனர். இறந்த பிறகும் அவரது உடலைக் கண்டு ஆங்கிலேய தளபதிகள் குலைநடுங்கியதையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
ஹைதர் அலி



17ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் விடுதலை அதிர்வுகளை முதலில் தொடங்கியவர் ஹைதர் அலி அவர்கள்தான். அவர் நடத்திய விடுதலைப் போர் 'முதலாம் கர்நாடகப் போர்' என வர்ணிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களை நாலா புறமும் திணறடித்த ஹைதர் அலி இறுதியில் கொல்லப்படுகிறார். அவர் வழியிலேயே அவர் மகன் திப்பு சுல்தான் விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தினார்.



திப்பு சுல்தான்

'பல நாள் நாயாக வாழ்வதை விட, ஒரு நிமிடம் சிங்கமாக வாழ்ந்துவிட்டு சாவது மேல்' என கர்ஜித்த மாவீரன் திப்பு சுல்தான். ஸ்ரீரங்கப் பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா என தென்னிந்தியாவின் சரிபாதி பகுதிகளை தன் சாம்ராஜ்யத்தில் இணைத்தார். இவர்தான் இந்தியாவில் மதுவிலக்கு கொள்கையை முதன் முதலில் அமல்படுத்தியவர். உலக ஏவுகணை தொழில்நுட்பத்தின் முன்னோடி என அப்துல் கலாம் போன்றவர்களே வியந்து போற்றும் விஞ்ஞானி. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் தனது அரண் மனையில் பிரம்மாண்ட நூலகத்தை வைத்திருந்த ஒரே மன்னனும் திப்பு சுல்தான் தான்.

ஆங்கிலேயர்களை வீழ்த்த அவர்களின் படைகளை ஐரோப்பாவில் குலைநடுங்கச் செய்த பிரெஞ்ச் மன்னர் நெப்போலியனுடனும் ராணுவ ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்த ராஜதந்திரியும் கூட. இந்துக்களின் உரிமைகளைப் பெரிதும் மதித்த பண்பாளர். இவரது வீர வாள் சுழலும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகள் வீழ்ந்தன. இவரது குதிரைப் படைகள் முன்னேறும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் பீரங்கிகள் பின்வாங்கின. இறுதியில் காட்டிக் கொடுக்கும் துரோகிகளால் திப்பு கொல்லப்பட்டார். ஆனால் வரலாற்றில் இன்றும் எழுந்து நிற்கிறார் தியாகியாக! அவர் 4.5.1799 அன்று கொல்லப்பட்டார்.

திப்புவின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். அவர்கள் தங்களது தாத்தா ஹைதர் அலி, தந்தை திப்புவின் வழியில் சிறை வைக்கப்பட்ட சூழலிலும் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேய தளபதிகளையும், சிப்பாய்களையும் கோட்டைக்குள் கொன்றனர். இது 1806-ஆம் ஆண்டு நடைபெற்றது. இது வேலூர் புரட்சி என அழைக்கப்படுகிறது. இதில் திப்புவின் வாரிசுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பீரங்கிகளால் துளைக்கப்பட்டு ஷஹீதுகளாய் வீழ்ந்தார்கள் வேலூரில். அவர்களது ரத்தம் வேலூரின் கோட்டையிலும், சுற்றி ஓடும் அகழியிலும் கொட்டிக் கிடக்கிறது.

இரண்டாம் பகதூர்ஷா

1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கிணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ''எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்'' என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர். இதுதான் ''சிப்பாய் கலகம்'' என ஆங்கிலேயர்களாலும், ''முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்த னர். இறுதியில் புரட்சி ஒடுக்கப்பட்டு மன்னர் பகதூர்ஷா நாடு கடத்தப்பட்டார். பர்மாவின் ரங்கூன் சிறையில் மனைவி ஜீனத் மஹலுடன் அடைக்கப்பட்டு உயிர் துறந்தார். நேதாஜி அவர்கள் பர்மா வந்ததும், பேரரசர் பகதூர்ஷாவின் கல்லறைக்குச் சென்று தன் அன்பை வெளிப்படுத்தினார். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் பர்மா சென்றபோது இவரது கல்லறைக்கு சென்று தன் மரியாதையை வெளிப்படுத்தினார். பாபரில் தொடங்கிய முகலாய பேரரசு இரண்டாம் பகதூர்ஷாவுடன் நிறைவுற்றது.

ஜான்சி ராணி லெட்சுமிபாய்


ஜான்சி ராணி லெட்சுமிபாய் விடுதலைப் போரில் பங்கெடுத்தார். இன்றைய உ.பி. மற்றும் ம.பி. மாநிலங்களின் சில பகுதிகள் இவரது ஆட்சியில் இருந்தது. இவரது படைத் தளபதி காஸாகான் என்பவர்தான் ஆங்கிலேயர்களை வீழ்த்தி கோட்டையைக் கைப்பற்றினார். ஜான்சி ராணியை ஆங்கிலேய தளபதி கேப்டன் கென் என்பவன் கொல்ல முயன்றபோது, அவனை வீழ்த்தி ஜான்சி ராணியைக் காப்பாற்றியவர் பக்ஷீஸ் அலி என்பவராவார். ஜான்சி ராணியை ஆங்கிலேயர்கள் தாக்கியபோது, அவர்களுக்கு கடும் தோல்வியைக் கொடுத்து தன்னுயிரை ஈத்தவர் குலாம் கவுஸ்கான் என்பவராவார்.

முதல் இந்திய இடைக்கால அரசு

1915ல் ஆப்கானிஸ்தானில் ஆங்கிலேயப் படையை முஸ்லிம்கள் தோற்கடித்தனர். ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு வெளியே இந்தியாவுக்கான முதல் இந்திய சுதந்திர அரசை தற்காலிகமாக அமைத்தவர்கள் முஸ்லிம்கள்தான். முதல் பிரதமராக இருந்தவர் பரக்கத்துல்லாஹ், உள்துறை அமைச்சராக இருந்தவர் உபைதுல்லாஹ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்ருதீன் தையாப்ஜி

இந்தியாவின் இன்றைய மூவர்ணக் கொடியை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம். அவர் பெயர் பத்ருதீன் தையாப்ஜி. இவர் 1902ல் பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர்தான் ஆர்எஸ்எஸ்காரர்கள் மதிக்கும் பால கங்காதர திலகரை விடுதலை செய்தவர். இவரது மனைவி பீபி ரஹ்மத்-உன்-நபா என்பவர் இந்திய தேசிய மகளிர் சங்கத்தை உருவாக்கினார். இதுதான் இந்தியாவில் உருவான முதல் மகளிர் மேம்பாட்டுக்கான அமைப்பாகும். பத்ருதீன் தயாப்ஜியை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் ஒரு தெருக் கோடிக்கு கூட அவர் பெயர் சூட்டப்பட வில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

காங்கிரஸில் முஸ்லிம்கள்

காங்கிரஸின் முதல் தலைவராக சைமன் என்ற ஆங்கிலேயர் இருந்தார். ஆங்கிலேயர்களில் சில நல்லவர்கள் தான் காங்கிரஸ் கட்சியைத் துவக்கினார். இரண்டாவது தலைவராக ரஹ்மத்துல்லாஹ் சயானி என்பவரும், மூன்றாவது தலைவராக பத்ருதீன் தையாப்ஜியும் பணியாற்றினார்கள். அப்போது காந்தி இந்தியாவுக்கே வரவில்லை, அவர் அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி 1915-ல்தான் இந்தியாவுக்கு வருகை தந்தார். 1915ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மௌலானா முகம்மது அலி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1930ல் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் அவர்தான் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.

1935ல் காங்கிரஸின் தலைவராக அபுல்கலாம் ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது 'அல்லிஹிலால்' என்ற இதழ் மூலம் முஸ்லிம்களிடம் விடுதலைத் தீயை மூட்டினார். முஹம்மது அலி ஜின்னாவும் ஒருமுறை காங்கிரஸ் தலைவராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் பெண்கள்


இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இரண்டாம் பகதூர்ஷா ஜாபரின் மனைவி ஜீனத் மஹல், திப்பு வின் குடும்பப் பெண்கள். பேகம் ஹஜ்ரத் மஹல், அலி சகோதரர்களின் தாயார் பீபியம்மாள் எனப்படும் ஸாஹிபா பானு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.






அலி சகோதரர்கள்

கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கெடுத்த மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முகம்மது அலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஸாஸியா பானுவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே விடுதலைப் போருக்கு ரூ.30 லட்சத்தை நிதியாகத் தந்தனர். என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையானால், அவர்களது குரல் வளையை நானே நெறித்துக் கொல்வேன் என கர்ஜித்தார் அவரின் தாயார் பீபியம்மாள்! அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வீரத்தோடு களமாடினார்கள். இந்த வீரத்தாய் பீபியம்மாள்தான் காந்திஜிக்கு கதர் ஆடையைப் போர்த்தி கண்ணியப்படுத்தினார். (கதர் என்ற அரபுச் சொல்லுக்கு கண்ணியம் என்று அர்த்தம்). பின்னர் காந்தியால் கதர் இயக்கமாக தொடங்கப்பட்டு இன்றுவரை நீடிக்கிறது.

பகத்சிங்

மாவீரன் பகத்சிங்கிற்கு, காந்தி போன்றோர் 'தண்டனை தரவேண்டும்' என போலிக் கொள்கை பேசியபோது, பகத்சிங்கின் தூக்குத் தண்ட னையை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்கறிஞர்கள் வாதாடினர். அதில் முக்கியமானவர் வழக்கறிஞர் ஆசிப் அலி என்பவராவார். இவரை ஆங்கில அரசு பல்வேறு காலக்கட்டங்களில் 13 ஆண்டுகள் சிறையில் அடைத்தது.

மதரஸாக்களின் சுதந்திர வேட்கை

சுதேசி இயக்கம் நடந்தபோது அந்நியப் பொருட்களை முஸ்லிம்கள் புறக்கணித்தனர். கதர் ஆடைகளையே அணிந்தனர். கதர் ஆடை உடுத்திய மணமக்களின் திருமணங்களுக்கு மட்டுமே முஸ்லிம் தலைவர்கள் வருகை தந்தனர். முஸ்லிம்கள் ஆங்கிலேய தயாரிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தினர். வேலூரில் மவ்லவி கலீலுர் ரஹ்மான் தலைமையில் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் மதரஸா வளாகத்தில் அந்நிய துணிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மதரஸாக்களிலும் சுதந்திர வேட்கை வீறிட்டு பரவியது.

முஸ்லிம் வள்ளல்கள்

இதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு என சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரனார் பிள்ளை தொடங்கிய போது, அந்தக் காலத்தில் ரூ.2 லட்சத்தை தந்து உதவியவர் ஹாஜி பக்கீர் முஹம்மது ராவுத்தர் என்பவராவார். கப்பல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கிய போது வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட், உமர் கத்தாப், இப்ராகிம் செய்யது ராவுத்தர், அஹமது சாஹிப், முகம்மது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல லட்சங்களை வாரி வழங்கினர். வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1912ல் வறுமையில் வாடியபோது அவருக்கு உதவிகளை செய்து மகிழ்ந்த வர் அகமது மீரான் என்பவராவார். வ.உ.சி.யின் விடுதலைக்காக வாதாடிய ஒருவரும் முஸ்லிம் வழக்கறிஞர்.

ஒத்துழையாமை இயக்கத்தில் முஸ்லிம்கள்

காந்தி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடந்தபோது நாடெங்கும் முஸ்லிம்கள் களத்தில் குதித்தனர். 1920ல் காயிதே மில்லத் போன்றோர் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் குதித்தனர். ஆங்கிலக் கல்விக்கூடங்களுக்கு தங்கள் பிள்ளை களை அனுப்பாமல் ''ஆங்கிலம் படிப்பது ஹராம்'' என அறிஞர்கள் ஃபத்வா வழங்கினர்.

ஜாலியன் வாலாபாக்

இன்றைய தடா, பொடா சட்டத்திற்கு முன்னோடியான ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. அப்போது பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கூட்டம் கூடியது. அந்த மைதானத்தில் ஒருவழிப் பாதை மட்டுமே உண்டு. அங்கே நுழைந்த ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேய தளபதியின் தலைமையிலான படை சுற்றி வளைத்து 1650 தோட்டாக்களை சரமாரியாகப் பாய்ச்சியது. அதில் சுமார் 1000 பேர் இறந்ததாக விசாரணைக் கமிஷன் கூறியது. அதில் சரிபாதிக்கும் மேலானோர் முஸ்லிம்கள் என்பதை அங்கிருக்கும் கல்லறைகள் சாட்சியாக கூறிக் கொண்டிருக்கின்றன.

வள்ளல் ஜமால் முஹம்மது

காந்தி அவர்கள் தமிழகம் வருகை தந்து விடுதலைப் போராட்டத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கும் நிதி சேர்க்க முயன்றார். அப்போது வெற்றுக் காசோலையை காந்தியிடம் கொடுத்து நீங்கள் விரும்பும் தொகையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என காந்திக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தவர் ஜமால் முஹம்மது. அவரது பெயரால் தான் இன்று திருச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி விளங்குகிறது.

காந்தியின் கதர் துணி பிரச்சாரத்திற்கு வலுவூட்ட காஜா மியான் ராவுத்தர் 50 ஆயிரம் ரூபாயில் கதர் நெசவு ஆலையை நிறுவினார். அவரது பெயர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்குள் இருக்கும் விடுதிக்கு சூட்டப்பட்டிருக்கிறது.

கேரள மாப்பிள்ளைமார்கள்

1921ல் கேரளாவில் மாப்பிள்ளை மார்கள் நடத்திய போராட்டம் வரலாற்றில் ஒரு மைல்கல். அந்தப் புரட்சியால் ஆங்கிலேயப் படைகள் சிதறி தெறித்து புறமுதுகிட்டனர். அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டு மாப்பிள்ளைமார்களில் பலர் கைது செய்யப்பட்டனர். ஏராளமானோர் சன்னல்கள் இல்லாத கூட்ஸ் ரயிலில் அடைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பப் பட்டனர். கோவை ரயில் நிலையம் வந்ததும், கூட்ஸ் வண்டி திறக்கப்பட்டது. அதில் மூச்சுத் திணறி 65 முஸ்லிம் வீரர்கள் தம் இன்னுயிர் நீத்தனர். அவர்களது ஜனாஸாக்கள் கோவை ரயில் நிலையம் அருகில் புதைக்கப்பட்டன. இப்போதும் கோவை ரயில் நிலையத்திற்கு சென்று பார்த்தால் அருகில் ஒரு பள்ளிவாசல் இருக்கும். அங்கிருக்கும் அம்மண்ணறைகள் ஒன்றும் அவர்களின் தியாகத்தை சாட்சி கூறிக் கொண்டிருக்கின்றன.

தொகுப்பு: எம். தமிமுன் அன்சாரி, ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ்

நன்றி: தமுமுகவின் அதிகாரபூர்வ இணையதளம்

Monday, August 04, 2008

பிரிட்டன்: முஸ்லிம்களின் நெருக்கடி நிலை

பிரிட்டன்: முஸ்லிம்களின் நெருக்கடி நிலை

ஜி. அத்தேஷ்


ஜூலை 7, 2005 லண்டன் மாநகரம் மிகப் பரபரப்புடனும் மக்களின் துரித இயக்கத்துடனும், அன்றைய காலைப் பொழுதை உள்வாங்கிக் கொண்டிருந்தது. பேருந்துகள், சுரங்க ரயில்கள் எல்லாம் மாநகர மக்களை சுமந்து கொண்டு தினசரி பயணங்களை தொடர்ந்தன. அந்தக் காலை, அன்றாட பரபரப்பின் வேகத்தை இழுத்து நிறுத்தும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாது. காலை 8.30 மணி, அடுத்தடுத்த குண்டுகள் பேருந்துகளிலும், சுரங்க ரயில்களிலும் வெடித்துச் சிதறியதில் 53 பேர் கொல்லப்பட்டார்கள்.


அந்த அரட்டலான சம்பவம் லண்டன் நகரை மிரள வைத்தது. அது தொடர்ந்தது 3 நாட்கள் மட்டுமே. ஆனால் அதன் அதிர்வுகள் 3 ஆண்டுகளாக பிரிட்டனில் வசிக்கும் முஸ்லிம்களை ஆட்டிப் படைக்கிறது. இது சம்பந்தமாக, ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்றினை லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல்-4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கான தலைப்பு "It Shouldn`t Happen to a Muslim''. இதன் பொருள் 'முஸ்லிம்களுக்கு இது நேரிடக் கூடாது' என்பது.


லண்டன் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட முஸ்லிம்கள் என்று பிரிட்டன் உளவுத்துறை கூறியதில் இருந்து பிரிட்டிஷ் முஸ்லிம்கள் மீது மக்கள் கசப்புணர்வு கொள்ள ஆரம்பித்தார்கள். பிரிட்டனில் வாழும் முஸ்லிம்கள் அனைவரையும் இந்த கசப்புணர்வு மென்று துப்பியது. அதுவே சேனல் 4 நிறுவனம், இந்த தலைப்பை வைக்க காரணமானது.


பீட்டர் ஒபோர்னே (Peter oborne) என்ற ஊடக நிபுணர் இந்நிகழ்ச்சியை தொகுத்துள்ளார். முஸ்லிம்கள் அச்சத்திலும், குழப்பத்திலும், முற்றுகையிடப்பட்டும் உள்ளனர் என்பதை ஒபோர்னே எடுத்துக் காட்டியுள்ளார். ஒவ்வொரு பிரிட்டிஷாரும் முஸ்லிம் எதிர்ப்புணர்வில் கரைந்துள்ளதை எங்களால் காண முடிந்தது. வெள்ளை இன பிரிட்டிஷ்காரர்கள், பிரிட்டிஷ் தேசிய கட்சியினர் மட்டுமின்றி பிரிட்டனில் வசிக்கும் ஆசிய நாட்டைச் சார்ந்த பிற மதத்தினரும் கூட முஸ்லிம்களை வெறுக்கவே செய்கின்றனர் என்கிறார்.


இந்த நிகழ்ச்சி, 'கருத்துக் கணிப்பு' ஒன்றையும் நடத்தியிருக்கிறது. லண்டன் குண்டு வெடிப்புக்கு பிறகு , இஸ்லாமை அச்சுறுத்தும் மதமாக பார்ப்போர் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது என முஸ்லிம்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்களில் 36 சதவீதம் பேர், தாங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த எதிர்ப் புணர்வை சந்தித்ததாக கூறுகிறார்கள். ஆயிஷா பானு முஸ்லிமாக மாறிய வெள்ளை இனத்துப் பெண். அவர் மீது தொடர்ந்து வெறுப்புணர்வு காட்டப்பட்டதால் 'புர்கா' அணிவதை தவிர்த்து விட்டதாக இந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார். வசை சொற்களை எதிர்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேற முடியாது, என் குழந்தைகள் முன்னாடியே கூட இவ்வாறெல்லாம் நடந்துள்ளன. இது சம்பந்தமான குழந்தைகளின் கேள்விக்கு என்னால் விளக்கம் தர முடியவில்லை. அதனால் நான் புர்கா அணிவதை நிறுத்திக் கொண்டேன்' என்கிறார்.


சில அசம்பாவித நிகழ்வுகளை வைத்துக் கொண்டு நியாயமற்ற முறையில் 'முஸ்லிம்கள் அனைவரையுமே குறி வைத்து தாக்குகிறார்கள்' என ஒபோர்னேவின் பேட்டிக்கு பதிலளித்த பிரிட்டன் முஸ்லிம்கள் கூறியுள்ளார்கள். தீவிரவாதிகள் என்ற சொல்லால் நாங்கள் ஏன் தாக்கப்படுகிறோம் என நபிலா கான் எனும் இளம் பெண் கேள்வி எழுப்புகிறார். பிரிட்டனில் தான், நான் பிறந்து வளர்ந்தேன். ஆனால் ஒரு தீவிரவாதியாக நான் கருதப்பட்டு காயப்படுத்தப் படுகிறேன்' என்கிறார் நபிலா கான். பேட்டியளித்துள்ள பலர், 'நாங்கள் மிரட்டப்படுகிறோம், அச்சத்தின் பிடியில் தான் வாழ்ந்து வருகிறோம்' என்கின்றனர். மேலும் சிலர், நாங்கள் பிரிட்டனை விட்டு வெளியேறிவிடலாமா என கருதுகிறோம் என்றும் கூறியுள்ளார்கள்.


நான் மிக ஆழமாக மன வேதனைப் படுத்தப்பட்டேன். ஒவ்வொருவரையுமே என்னுடைய எதிரி என்பதாக உணர் கிறேன்' என்கிறார் சர்ப்ராஜ் சர்வார். இவர் நடுத்தர வயதுடையவர், பாஸில்டானில் வசிப்பவர். நான் அவதூறுகளை எதிர் கொண்டேன். என் வீட்டின் மீது தீக்குண்டுகளை வீசினர். எனது வாகனத்தை நொறுக்கினார்கள். வீட்டுச் சுவரின் மீது அவதூறான படங்களை வரைந்தனர் என்றும் சர்ப்ராஜ் கூறியிருக்கிறார். ஆன்டிஹைமன், இவர் லண்டன் தாக்குதல் குறித்த விசாரணை அதிகாரி. அவர் கூறுகையில், ஒரு இளைஞர் என்னிடத்தில் கூறியது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 'எங்களை சுட்டுக் கொல்ல வரும் காவலர்களுக்காக காத்திருக்கிறோம்'' என்றார் எனக்கூறியுள்ளார். இவ்வாறு அச்ச உணர்வு அவர்களை ஊடுருவியிருக்கிறது.


பிரிட்டனில், சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளவர் சாதிக் மாலிக், முஸ்லிம்கள் ஒவ்வொருவரும், 'தாங்கள் ஐரோப்பாவின் யூதர்கள்' போல் நடத்தப்படுவதாக உணர்கிறார்கள். நான், யூதர்கள் படுகொலையோடு இதனை ஒப்பிடவில்லை. ஐரோப்பாவில் இன்னும் சில இடங்களில் யூதர்கள் 'குறி வைக்கப் படுகிறார்கள்'. தாங்களும் அவ்வாறு குறி வைக்கப்படுவதாக முஸ்லிம்கள் உணர்கிறார்கள். முஸ்லிம்களாக இருந்தால் தாக்கலாம் என்பதான செய்திகள் வெளிவருகின்றன' என்கிறார்அமைச்சர் சாதிக்.


அமைச்சர் சாதிக் மாலிக், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் பிறந்தது வளர்ந்தது எல்லாம் 'பிரிட்டனில், இஸ்லாமிய எதிர்ப்புணர்வை எதிர் கொள்ளும் வாய்ப்பு எனக்கே ஏற்பட்டது, எனது வாகனத்தை தீவைத்து கொழுத்த முயற்சி நடந்தது, மின் அஞ்சலில் தொடர்ந்து வெறுப்பூட்டும் செய்திகள் வந்த வண்ணமிருக்கும்' என்கிறார்.


முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து தவறான செய்திகள் தரும் ஊடகங்கள் தாம் இதற்கு காரணம் என்கிறார் அமைச்சர் சாதிக். ஊடகங்கள் தினம் தினம் புதுபுதுக் கதைகளை எழுதி வருகின்றன. எனது தொகுதியில் உள்ள மருத்துவமனையில் ஒரு நோயாளி, தினமும் ஐந்து வேளை தனது படுக்கையை மெக்காவை நோக்கி திருப்பி வைக்குமாறு ஊழியருக்கு உத்தரவிட்டதாக ஒரு செய்தி கடந்த டிசம்பர் மாதம் 'நேஷனல் பிரஸ்' என்ற பத்திரிக்கையில் வந்தது. இந்தச் செய்திக்கு எந்த அடிப்படையும் கிடையாது. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் மரணத்தருவாயில் இருந்தார். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் மூதாட்டியின் படுக்கையை திருப்பி மெக்காவை முன்னோக்கியதாக வைக்கலாம் என யோசனை கூறியுள்ளார் அவ்வளவு தான். அடிப்படையற்ற செய்திகள் வரும் போது எந்த செய்தி ஊடகமும், அவற்றின் உண்மை நிலையை ஆராய்வதில்லை. தவறுகளை சீர் செய்வதில்லை. முஸ்லிம்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே தனிமைப்படுத்தப்பட, இந்த ஊடகங்கள் தான் காரணமாக உள்ளன என்கிறார் சாதிக்.


முஸ்லிம்கள் பற்றி தப்பான எண்ணங்களை உருவாக்குவதில் ஊடகங்கள் மட்டுமே தனிப் பெரும் முதன்மை காரணமாக உள்ளன என்கிறார் ஒபோர்னே. பல்வேறு பத்திரிக்கைகளை அவர் சுட்டிக் காட்டுகிறார். உதாரணமாக, லீஸஸ்டரில் இருக்கும் மருத்துவமனையில், ஒரு முஸ்லிம் ஊழியர், மத அடிப்படை காரணங்களுக்காக, புதிதாக போடப்பட்ட 'உயர்தர சட்டங்களை' மதிக்காமல் போனதால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் நோய் பீடிக்கும் நிலையில் உள்ளதாக ஒரு செய்தி குறிப்பிட்டது. மருத்துவமனை அதிகாரிகள் இந்தக் கூற்றை காட்டமாக மறுத்துள்ளனர். அதிகாரிகள் கூறிய மறுப்பை எந்தப் பத்திரிக்கையும் வெளி யிடவில்லை என்கிறார்.


படிப்படியாக 'முஸ்லிம்களை அச்சுறுத்தும் சக்தி' எனக் காட்டுவதே இவர்கள் நோக்கம். இதுவே, பிரிட்டிஷ் அரசியல் மற்றும் ஊடகங்களின் மையக் கருவாக இருந்து வருகிறது. இதற்கான எதிர் குரல்கள் யார் காதிலும் விழுவதில்லை. வெளிப்படுத்தப்படுவதுமில்லை.


முஸ்லிம்களைப் பற்றிய அச்சத்தை ஊட்ட இஸ்லாமோபோஃபியா என்ற வார்த்தை ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது. அதேவேளை, யூதர்களையோ அல்லது வேறு யாரையாவது இவ்வாறு குறிப்பிட்டால் அது பொறுத்துக் கொள்ளப்படாது. நமது அரசியலிலும், ஊடகங்களிலும், வீதிகளிலும் முஸ்லிம்களை நடத்தும் விதம் குறித்து நாம் வெட்கப்படவேண்டும். பொதுக் கலாச்சாரத்தை நாம் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருபோர்னே.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்